சிறுகதை

பூங்கா நண்பர்கள் | ராஜா செல்லமுத்து

கில் நகர் பூங்கா மற்ற பூங்காக்கள் போலில்லை. அதிகாலை அதிகாலை 5 மணிக்கு திறந்தால் இரவு ஒன்பது மணிக்கு தான் மூடுவார்கள். மொத்த நேரமும் பூங்கா மக்களால் நிறைந்து மிதக்கும்.

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினை. பிரச்சினைகளை சுமந்து வரும் ஒவ்வொரு மனிதர்களும் ஏதோவொன்றை நினைத்துக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு பக்கம் மகிழ்ச்சி நிறையும். இன்னொரு பக்கம் சோகம் ததும்பும் மற்றொரு பக்கம் இனம் புரியாத ஏதோ ஒரு உணர்வு வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அந்தப் பூங்கா மனித உணர்வுகளை உள்ளடக்கியே இருக்கும்.

சத்தமாகச் சிரித்து விளையாடும் இளசுகள் ஒரு பக்கம். விதவிதமாகச் சாப்பிட்டு விட்டு அரட்டை அடிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம். அங்கு உலவும் மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் மறுபக்கம்; மனிதர்கள் மட்டுமல்லாது ஒரு சில நாய்களுக்கும் அந்தப் பூங்காவே அடைக்கலம். அதிகாலையில் நடைபயிற்சி செய்யும் மனிதர்கள், தன் உடலையும் உயிரையும் பாதுகாக்க எத்தனையோ பயிற்சிகள் செய்வார்கள்.

மூச்சு, பெருமூச்சு என நடையும் உடற்பயிற்சியும் செய்யும் மனிதர்கள்.

ஹலோ குட்மார்னிங்… ஹாய்… என விசாரி்ப்புகளோடு மட்டுமே நின்று விடும், அந்த அதிகாலை.

ஆனால் மாலை நேரமானால் போதும், அந்தப் பூங்கா, காலையில் நடைப் பயிற்சி விட்டுப் போனவர்கள் சிலர் நடந்து கொண்டிருப்பார்கள், ஆனால்…, ஆனால்…., அந்த மாலை ஓய்வுப் பெற்ற ஊழியர்களின் பேச்சுக் கூடாரமாகிவிடும்.

சிலர் டிப்டாப் உடையில் சிலாகித்து வருவர்.

சிலர் மிடுக்கான உடையை உடுத்தி வருவர். சிலர் சாதாரண உடையில் வருவர். ஆனால் யாரும் தர்க்கம் சுமக்காமல் வருவதே இல்லை. வழக்கம் போல அன்று மாலையும் கில் நகர் பூங்கா மனிதர்களால் நிரம்பி வழிந்தது.

‘‘என்ன சேகர் எப்படி இருக்கீங்க’’

‘ம்… பைன்… பைன்… யூ’

ஐ ஆம் ஆல்சோ பைன்.ரொம்ப நல்லாயிருக்கேன்; தேங்க்யூ’’ என்று தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசிக் கொள்வர்.

‘ஹாய் முகமது, வென் யூ கேம்’

‘ஜஸ்ட் நவ்’

‘பை தி பை… வாட் எபவுட் எஸ்டர்டே டிஸ்கஷன்’’

‘ம்… ஓ.கே… எக்ஸ் ஸ்பெஷலி சீதா ராமன் சார் ஸ்பீச் இஸ் வெரி நைஸ்.’’

‘‘ம்… … ஹா… ஹா’’ என ஓய்வு பெற்ற உதயகுமார் அப்படிச் சிரிப்பார்.

‘ஹலோ … சரவணன் வென் வில் யூ கோ டூ அமெரிக்கா’

‘நெக்ஸ்ட் மன்த்’

‘ம்’

‘அப்பெறம் சங்கர் ஆத்துல எல்லாம் எப்படி இருக்கா?

‘இருக்கா… மகன் கலிபோர்னியா, மகள் ஆஸ்திரேலியா, இப்ப நானும் என்னோட ஆத்துக்காரியும் மட்டும் தான் இங்க. பெரிய வீடு, நாங்க ரெண்டு பேரு மட்டும் தான்,

‘ம்… ஒங்களுக்கு எங்கள மாதிரி, ஸ்கூல் கொழந்தைகள் விட்டுட்டு வர்ற, கூட்டிட்டு வர்ற வேல இல்ல. நீங்க குடுத்து வச்ச ஆளு தான் போங்க’

‘நீங்க ஒண்ணு… ஆத்துக்காரி மொகத்த நான் பாக்க… அவ மொகத்த நான் பாக்க…, இப்படியே நாங்க ரெண்டு பேரும் பாத்து பாத்து போரடிச்சுப் போச்சு.

‘உஷ்’ன்னு இங்க வந்தா தான் கொஞ்சமாவது நிம்மதியா இருக்க முடியுது போங்கோ’

‘ஹா… ஹா… ஹா… ஹா’ என்ற பெரியவர்களின் சிரிப்பு சத்தத்தில் அந்தப் பூங்காவே மகிழ்ச்சியில் நிறையும்; மனம் விட்டுச் சிரிக்கும்; அந்தப் பெரிய மனிதர்களின் சந்தோஷத்தையும் அவர்களின் மிடுக்கையும் கண்களில் கண்ணீர் வழியப் பார்த்துக் கொண்டிருப்பர். குடும்பத்தில் கை விடப்பட்ட பழனியும் கோவிந்தும்

‘ம்… நாம குடுத்து வச்ச வாழ்க்கை அவ்வளவு தான் நாமளும் சின்ன வயசுலயே நல்லா படிச்சிருந்தோம்னா இந்த அழுக்கு வேட்டியும் அழுகையும் இருந்திருக்காது .

என்ன பழனி

‘‘ஆமா கோவிந்த்’ என்று மனதிற்குள் அழுது கொண்டிருக்கும் பெரியவர்கள் மறுபக்கம் மற்றவர்களால் பூங்கா அல்லோலப்படும்.

‘வேகு வேகு’வென விரையும் பெண்கள், தங்க அங்கம் வியர்வையில் நனைய நனைய நடக்கும் மங்கைகள், காதில் ஹியர் போனை வைத்துக் கொண்டு இசையில் லயித்து லயித்து நடைபோடும் இளசுகள் என பூங்கா நடைபாதை பெண் பாதங்களால் தரை முழுவதும் பூக்கள் பூப்பதாய் தோன்றும். தன் இரண்டு காலையும் விரித்து வானம் நோக்கி, தன் வாயை விரித்து ஏதோ மொழியில் பேசும் நாய்கள்’ என எப்போதும் பரபரப்பாய் இருக்கும் பூங்கா அன்றும் பெருசுகளால் பிரியப்பட்டுக் கிடந்தது.

‘என்ன தேவராஜ், நீங்க ஒண்ணும் பேசலியே? நாடு போயிட்டு இருக்கிற நெலைமையப் பாக்கும் போது எங்க பேசுறது’’, என்ற தேவராஜின் பேச்சை மறித்தார் ராவணன்,

‘‘அவரு சொல்றது சரிதாங்க. எனக்கும் இந்த பொலிட்டிக்கல்ல இன்ட்ரஸ்ட் இல்ல. வெரிபேடு… வெரிபேடு’ என்று தங்கள் பேச்சை மீண்டும் ஆரம்பித்தனர். தமிழகத்திலிருந்து இந்தியா வரை பேச்சு நீளும். இப்படிச் சருகுகள் கூடி உட்கார்ந்திருக்கும் அந்த இடத்தில் குதூகலம் குடிக் கொண்டிருந்தது. அவ்வளவு பேரும் ஓய்வு பெற்றவர்கள். இடை இடையே தாங்கள் கொண்டு வந்திருந்த நொறுக்குத் தீனிகளையும் ஜூஸையும் அருந்திக் கொண்டே பேசுவார்கள்.

‘என்ன கோவிந்தா’

‘ம்’ பாத்தியா அந்த மனுசங்களுக்கு எவ்வளவு அழகான வாழ்க்கைன்னு தெனமும் நீ எதுக்கு இங்க வார,

வீடு, வாச, பெத்த பிள்ளைங்க யாருமில்லை. இங்கன வந்து நெழல்ல கெடக்கேன்,

‘‘நீ அப்படி! நான் எப்பிடி?

என்ன பழனி, ஒன்னையப்பத்தி எப்பவோ சொல்லிட்டயே’

ரெண்டு பேருமே ஒண்ணுதான. இங்க இருக்கிற எத்தனையோ பேருக்கு நம்ம மாதிரி பெரிய பிரச்சினைகள். இருக்கலாம். நாம என்ன பேசிக்கிறோம்’

அடுத்த வேளை எப்பிடி சாப்பாடு ‘கெடைக்குமுன்னு’

‘ஆனா… அவங்களப் பாத்தியா, அரசியல், சினிமா, நக்கல், நையாண்டி ஆமா யாராவது சோறப்பத்திப் பேசுறாங்களான்னு பாரு’’

இது எல்லாத்துக்கும் நாம தான் காரணம் என்று பழனியும் கோவிந்தும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஓய்வு பெற்ற பெரிய மனிதர்களின் பொழுது போக்குக் குரல் பூங்காவைத் தாண்டி கேட்டுக் கொண்டிருந்தது.

பூங்கா வாசலில் ஆரஞ்சு, ஜூஸ் பிழியும் அம்மாவின் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. பணக்காரப் பெண்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.

திராணியற்றவர்கள் சோர்ந்து உட்கார்ந்திருந்தனர். இப்படியாய் கில்நகர் பூங்கா மரங்களாலும் மனிதர்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

நாளையும் நாளை மறுநாளும் அடுத்தடுத்து வரும் நாட்களும் இப்படியே தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *