சிறுகதை

புதுமை தீபாவளி | கரூர். அ. செல்வராஜ்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டும் இருந்தது. வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் ராதா.

அவளுக்கு உதவியாக மகள் யாழினி இருந்தாள். 9 ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் அவள், தன் தாய்க்கு உதவிகளை செய்வதில் எப்போதும் விருப்பம் கொண்டவளாக இருந்தாள்.

வீடு சுத்தம் செய்யும் பணியில் ஒவ்வொரு அறையாக சுத்தம் செய்ய முடிவு செய்தனர். முதலில் யாழினியின் அம்மா ராதாவின் அறை சுத்தம் செய்யப்பட்டது. அந்த அறையில் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரியை சுத்தம் செய்ய ஆரம்பிக்கும் நேரத்தில் யாழினி ,

“அம்மா!”

“சொல்லு யாழினி”

“உங்க அலமாரியில் எத்தனை புடவைகள் இருக்கும்…”?

“எண்ணிப் பார்த்ததில்லை. சுமார் 100 புடவைகள் இருக்கலாம்”

“அந்த 100 புடவைகளில் நீங்க கட்டாம ஒதிக்கி வைத்திருக்கிறது எத்தனை?’’

“அதையெல்லாம் இனிமேல் தான் பார்க்கணும்”

” அலமாரியில் அடுக்கி வச்சிருக்கிற புடவைகளிலே உங்களுக்கு தேவை இல்லாததை தனியாக எடுத்து ஒரு பையில் போடுங்கம்மா “

” எதுக்கு?”

” அம்மா! உங்களுக்குத் தேவையில்லாத புடவைகளையும், ஜாக்கெட்டைகளையும் தேவையா இருக்கிற ஏழைப் பெண்களுக்கு கொடுங்க. இந்தக் கொரோனா காலத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடப் பணம் இல்லாத ஏழைப் பெண்கள் எல்லாம் உங்களை மனதார வாழ்த்துவாங்க ” என்றாள் யாழினி.

மகள் யாழினி சொன்னது தனக்குப் பிடித்திருந்ததால் ராதா அந்த நல்ல யோசனையை ஏற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

” யாழினி!”

” சொல்லுங்கம்மா “

” உன் யோசனை எனக்கு பிடிச்சிருக்கு. அப்படியே செய்யறேன். சரி, உங்க அப்பா பயன்படுத்தாமே வைத்திருக்கிற பேன்ட்டுகள், சட்டைகள், டி-–ஷர்ட் இதெல்லாம் கூட கொறஞ்சது ஒரு 10, 15ஆவது இருக்கும். அதையும் ஏழைகளுக்கு தரலாமே ” என்றாள் ராதா. அதற்கு யாழினி பதில் சொல்லத் தொடங்கினாள்.

” அம்மா!”

” சொல்லுமா யாழினி “

” நீங்க சொன்னதும் நல்ல யோசனைதான். இது சம்பந்தமா நான் அப்பாகிட்ட பேசறம்மா. நான் கேட்டா அப்பா அதை கண்டிப்பா செய்வாரும்மா. உங்களுக்கெல்லாம் யோசனை சொன்னா நான் மட்டும் சும்மா இருக்க முடியுமா” என்றால் யாழினி. அதற்கு அவள் அம்மா ராதா, யாழினி நீ என்ன செய்யப்போறே? என்று கேட்டாள்.

அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள் மகள் யாழினி. அம்மா! எனக்கு தேவைப்படாத துணிகளை எல்லாம் ஏழைப்பெண்களுக்கு தர முடிவு செஞ்சுட்டேன். துணிகளை மட்டும் இல்லை எனக்கு தேவைப்படாத பொம்மைகளை எல்லாம் எடுத்து ஏழை குழந்தைகளுக்கு தரப்போறேன். என் தம்பி தமிழ்ச்செல்வன் கிட்ட பேசி அவனுக்கு பயன்படாத துணி, பொம்மைகள் இதையெல்லாம் கேட்டு வாங்க போறேன். அதையும் ஏழைப் பெண்களுக்கு தருவதற்கும் முடிவு செஞ்சுட்டேன்மா. நமக்குத் தேவைப்படாத பொருட்களை எல்லாம் தேவையாய் இருக்கிற மக்களுக்கு கொடுத்து உதவி செய்கிறது இந்த காலகட்டத்திலே ரொம்ப முக்கியம். பழைய துணிகளை எல்லாம் பழைய இரும்பு கடையில் போட்டு பணம் வாங்குகிறலே நமக்கு என்ன சந்தோசம் வரப்போகுது. எதுவும் மாறப்போவதில்லை ” என்றாள் யாழினி.

மகள் யாழினி தன் சின்ன வயதில் பெரிய அளவில் பயனுள்ள சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் சொந்தக்காரியாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தாள் அம்மா ராதா. அவளுக்கு ஒரு யோசனை வந்தது. அதை மகளிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்.

” யாழினி!”

” சொல்லுங்க அம்மா “

” நமக்கு தேவையில்லாத துணிகளை, பொம்மைகளை எத்தனை பேருக்கு தரலாம்னு ஒரு லிஸ்ட் எடு. அதனடிப்படையிலே தருவோம். உதவி செய்யப் போகிறவர்களுக்கு பழைய துணிகள் பொம்மைகளை மட்டும் கொடுக்காமல் அதோடு ஒரு இனிப்பு, ஒரு காரம் தரலாம். அதோடு உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான அதாவது கொரோனா வைரஸ் தடுப்புக்குப் பயன்படற முக கவசம் – 2, அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தம் செய்ய சோப்புகள் – 2 இதையெல்லாம் தரலாமே’’ என்றாள் ராதா.

அம்மாவின் யோசனையைக் கேட்ட மகள் யாழினி ” அம்மா! உங்க யோசனை சூப்பர் யோசனை. இந்த கொரோனா காலத் தீபாவளிக் கொண்டாட்டம் ஒரு புதுமையான கொண்டாட்டமா இருக்கப் போகுது. நாம் மட்டும் மகிழ்ச்சியாக வாழறது வாழ்க்கை இல்லே. மற்ற மனிதர்களையும் மதிச்சு அவங்களையும் மகிழ்ச்சி அடைய வைத்து வாழ்றதுதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கைம்மா ” என்றாள் யாழினி.

அவளது விருப்பம் தீபாவளிப் பண்டிகையில் பெற்றோரின் உதவியுடன் நிறைவேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *