சிறுகதை

பிள்ளை மனம் பித்து! | வேதாரண்யம் வடுகநாதன்

விவசாய வேலைகள் பார்ப்பதில் மிகவும் ஆனந்தம் அடைவான் கோபி. எந்த வேலையாக இருந்தாலும் யார் கூப்பிட்டாலும் சந்தோஷமாகச் செய்து கொடுப்பான்.

தன் பெற்றோர்களுக்குச் சிரமம் கொடுக்காமல் ஆடு மாடு கட்டுவது. … தென்னந்தோப்பு, மாந்தோப்புக்குத் தண்ணீர் இறைப்பது என்று வீட்டுவேலை , தோட்ட வேலைகளையும் நன்றாகச் செய்வான்

மாலையில் கூலிப் பணம் வாங்கி, வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் கூடவே தன் அப்பா அம்மாவுக்குப் பிடித்தமான பலகாரங்களையும் வாங்கி வருவான்.

தான் உழைத்து வாங்கி வந்த பலகாரங்களைத் தன் பெற்றோர் சுவைத்து உண்ணுவது கண்டு பேரானந்தம் கொள்வான்.

அவன் அடி மனதில் ஓர் ஆசை இருந்து கொண்டுதானிருந்தது. தனக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து, தன்னை பிஇ வரை படிக்க வைத்த பெற்றோரைக் கடைசி வரை நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நல்ல சம்பளம் கிடைக்கிற வேலையில் சேர வேண்டும் என்று.

குளத்தில் குளித்து விட்டு, “ரெக்க கட்டிப் பறக்குதைய்யா, கோபியோட சைக்கிள்..” என்று படு குஷியாக பாடிக்கொண்டு வந்த கோபியைத் தடுத்து நிறுத்தியது ஒரு குரல்.

“டேய். .. கோபி. … நல்லாருக்கியாடா. … நான்தான்டா நந்தகுமார். .. அடையாளம் தெரியுதா? “

“அடடே. .. நந்து. … ஆளே மாறிட்டே. .. எப்படா, சிங்கப்பூர்லர்ந்து வந்த? “

“ஒரு வாரம் ஆகுதுடா. … அது சரி. .. பிஇ படிச்ச நீ, விவசாய வேலை பார்த்துட்டு இருக்கே. .. பாஸ்போர்ட் ரெடி பண்ணி எனக்கு அனுப்பி வை. … தெரிஞ்ச கம்பெனிகள்ல கொடுத்து வேலைக்கு ஏற்பாடு பண்றேன்! “

“வீட்ல சும்மா இருந்தா உடம்பு கெட்டுப் போயிடும். … அதான் வேலைக்குப் போறேன். .. அம்மா அப்பா எத்தனை நாள்தான் பிள்ளைக்காகக் கஷ்டப்படுவாங்க. ..சரி, பாஸ்போர்ட் வந்ததும் உனக்கு டீட்டய்ல்ஸ் ரெடி பண்ணி அனுப்பறேன். .. ஏற்பாடு பண்ணு! “

மளமளவென்று வேலைகளில் இறங்கிய கோபி மூன்றே மாதங்களில், தனது விவரங்களை சிங்கப்பூரில் இருக்கும் நந்தகுமாருக்கு அனுப்பி வைத்தான்.

ஒருநாள், சிங்கப்பூர் பயணம் ரெடி என்று ஏஜெண்டிடமிருந்து போன் வந்ததும் மிகவும் சந்தோஷமடைந்தான் கோபி.

அந்த விஷயத்தைத் தன் பெற்றோரிடம் சொன்னபோது அவர்கள் அவ்வளவாக மகிழந்தாய்த் தெரியவில்லை.

“உள்ளூர்ல வேலை பார்த்து முன்னுக்கு வர முடியாதுப்பா. … ஒரு அஞ்சு வருஷம் வேலை பார்த்துக் கையில ஒரளவு பணம் சேர்ந்ததும் திரும்பி வந்துடறேன். … கவலைப் படாதீங்கப்பா! ” என்றான் கோபி.

“சரி. … சரி. .. உன் ஆசையை நான் கெடுக்க விரும்பல. .. போயிட்டு வா… பத்திரமா இருந்து வேலை பாரு. .. தினமும் போன் பண்ணு. .. நல்லா சாப்பிட்டு உடம்பைப் பத்திரமா பார்த்துக்க! ” என்றார் அவன் அப்பா.

“அம்மா. .. நீ என்ன எதுவுமே பேச மாட்டேங்கறே. … நான் வெளில போயி சம்பாதிக்கறது உனக்குப் பிடிக்கலயா? ” எனக் கேட்டான் கோபி.

உடனே, “உன்னை விட்டுப் பிரிய மனசில்லடா தங்கம். .. இருந்தாலும் உன் ஆசைக்குத் தடை சொல்லல. .. போயிட்டு வா! ” என்றாள் அம்மா.

கோபி வேலைக்குச் சேர்ந்த இடம் பிரபலமான கம்பெனி. தினமும் ஓவர்டைம் கிடைத்தது. மாதம் எழுபதாயிரம் எண்பதாயிரம் சம்பளம் வந்தது. நான்கே மாதத்தில் சிங்கப்பூர் செல்ல வாங்கிய கடனை அடைத்து விட்டான்.

தினமும் தவறாமல் தன் அம்மா அப்பாவிடம் பேசுவான்.

“அம்மா. … காசு பணத்தைப் பத்திக் கவலைப்படாதீங்க. … நல்லா சாப்பிடுங்க. .. உடம்பு சரியில்லன்னா, வீட்டுலயே கிடக்காம வைத்தியம் பார்த்துக்கங்க! “

“அப்பா. … நீங்க இடையிடையே வேலைக்குப் போறதா என் பிரண்ட் மணிவண்ணன் சொன்னான். … அதெல்லாம் வேண்டாம். … வீட்டு வேலைகளை மட்டும் பார்த்துட்டு அம்மாவுக்குத் துணையா இருங்க! “

இப்படியாக மூன்று வருடங்கள் ஓடி விட்டன.

ஒரு நாள், தன்னுடைய கிராமத்திலிருந்து தன் கம்பெனிக்கு வேலைக்கு வரப் போகிறான் தன்னுடைய நண்பன் குமரப்பன் என்ற செய்தி கேட்டு மிகவும் மகிழ்ந்து போனான் கோபி.

வேலையில் சேர்ந்த அன்றைய தினமே மாலையில் கோபியைப் பார்க்க வந்து விட்டான் குமரப்பன்.

“குமரப்பா. … வேலை பிடிச்சிருக்கா…. கம்பெனி பிடிச்சிருக்கா? ” எனக் கேட்டான், கோபி.

“ரொம்பப் பிடிச்சிருக்கு. ..”

“அப்புறம். .. என் அப்பா அம்மாவைப் பார்த்தியா? பேசுனியா? என்ன சொன்னாங்க? “

“இருக்காங்கடா. … ஆனா. .. உன்னைப் பிரிஞ்சு அவங்ககளால சந்தோஷமா இருக்க முடியலன்னு நினைக்கறேன். …”

“என்னடா ,சொல்றே? “-அதிர்ந்தான் கோபி.

“ஆமாம்டா. … என் மவன் எங்களோட இருந்தப்ப வசதி கம்மியா இருந்துச்சு. … ஆனா சந்தோஷம் அதிகமா இருந்திச்சு. .. இப்ப வசதி இருக்கு. ஆனா. . சந்தோஷம் இல்ல. … என்ன இருந்தாலும் புள்ளையோட பேசி புழங்கிச் சாப்பிட்டுத் தூங்கற சந்தோஷத்துக்கு இணை வருமாப்பாப்பான்னு ரெண்டு பேரும் கேட்கறாங்க. .. மொத்தத்துல. .. தனிமையும்… உன் பிரிவும் அவங்களை வாட்டுது! ” என்று கூறினான் குமரப்பன்.

அன்று இரவு தூக்கமே இல்லை கோபிக்கு.

காலையில் அலுவலகம் சென்றதும் மேனேஜர் அவனைத் தன் அறைக்கு வரச் சொன்னார்.

“வாழ்த்துக்கள். …. கோபி. … உங்களுக்கு பிரமோஷன் ஆர்பர் வந்திருக்கு. …. இந்திய ரூபாய்க்கு மாதம் பதினைந்தாயிரம் அதிகமா கிடைக்கும்! “

அதனைக் கேட்ட கோபி அவரிடம் அமைதியாகப் பதில் சொன்னான்:

“இல்ல, மானேஜர் சார். … இந்த மாசத்தோட நான் வேலையை விட்டு நின்னுக்கிறேன். .. அதற்கான பார்மாலிட்டிஸ் என்னென்னு சொல்லுங்க! “

பெத்த மனம் மட்டுமல்ல….. பிள்ளை மனமும் பித்து தான் என்பதை கோபி முதல்முதலாக உணர்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *