தெக்ரான், ஜன. 26–
ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 34 நபர்கள், அமைப்புகள் மீது ஈரான் பொருளாதாரத் தடை விதித்தது.
ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 34 நபர்கள், அமைப்புகள் மீது ஈரான் நேற்று பொருளாதாரத் தடை விதித்தது. அந்த நாட்டில் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி என்ற 22 வயது பெண் கடந்த செப்டம்பர் மாதம் காவலில் உயிரிழந்தார்.
பொருளாதார தடை
அதனைத் தொடர்ந்து அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. அந்தப் போராட்டங்களை மிகக் கடுமையான முறையில் அடக்கிய ஈரான் அரசு, போராட்டக்காரர்கள் சிலருக்கு மரண தண்டனை விதித்து சிலரை தூக்கிலிட்டது.
இதனைக் கண்டிக்கும் வகையில் ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் ஈரான் மீது 2 நாள் முன்பு பொருளாதாரத் தடை விதித்தன. இதற்குப் பதிலடியாக ஈரானும் தற்போது பொருளாதாரத் தடை அறிவித்துள்ளது.