செய்திகள்

பாரதிதாசன் மகன் மன்னர்மன்னன் காலமானார்: தமிழியக்கம் நிறுவனர் ஜி.விசுவநாதன் இரங்கல்

புதுச்சேரி, ஜூலை.7-

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நேற்று புதுச்சேரியில் மரணம் அடைந்தார். வயது 92. அவரது இயற்பெயர் கோபதி. புதுச்சேரி வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். 50–க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர். தந்தையின் வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதி வெளியிட்டார். சுதந்திரப் போராட்ட தியாகி. மொழிப்போர் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.

புதுச்சேரி கதிர்காமம் காந்தி நகரில் வசித்து வந்த மன்னர்மன்னன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது. மன்னர்மன்னனின் மனைவி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார். இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மன்னர்மன்னன் மறைவுக்கு தமிழியக்கம் நிறுவனர்–தலைவர் ஜி.விசுவநாதன் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி வானொலி நிலையத்தில் மன்னர்மன்னன் ஆசிரியராக பணியாற்றிய அவர் 50க்கும் மேற்பட்ட அறிய நூல்களை எழுதி உள்ளார். புதுவை தமிழ்ச் சங்கத் தலைவராக பல்லாண்டுகள் பணியாற்றி, பல தமிழ் அமைப்புகள் தோன்றவும் காரணமாக இருந்தார்.

புதுவை தமிழ் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது இவர் தலைவராக இருந்தபோது தான். பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டார். தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி மற்றும் புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி உள்ளிட்ட பல விருதுகளை மன்னர்மன்னன் பெற்றுள்ளார். மன்னர் மன்னனின் மறைவுக்காக தமிழியக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

இவ்வாறு ஜி.விசுவநாதன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *