சிறுகதை

பரிவு- ராஜா செல்லமுத்து

அன்பு செலுத்துவதற்கும் அடையாளம் காண்பதற்கும் பண்போடு பழகுவதற்கும் நட்போடு நவில்வதற்கும் கருணையோடு இருப்பதற்கும் ஈர இதயத்தோடு பழகுவதற்கும் ஜாதி, மதம், இனம் மொழி எதுவும் தேவையில்லை ; ஒருவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவனே உயர்ந்த மனிதன் ஆகிறான்.

கருணைச் செல்வி பெயருக்கு ஏற்றது போலவே கருணையானவள் தான்.

அவர் ஒரு வங்கிப் பணியில் ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர். தன் மகன் , மகள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார். அவரவர் வாழ்க்கையில் அவர வர்கள் இருக்க கருணைச் செல்வியும் அவரது கணவரும் மட்டுமே வீட்டிலிருந்தார்கள்.

பென்ஷன் தொகை, சேமிப்பு தொகை சொல்லிக் கொள்ளும் அளவைவிட கருணைச் செல்வி வங்கிக் கணக்கில் கொஞ்சம் அதிகமாக இருந்தது.

வங்கியில் பணி புரிந்ததாலோ என்னவோ பணத்தைப் பார்த்துப் பார்த்து பணத்தின் மீது பெரிதாக ஈர்ப்பில்லை. மாறாக நிரந்தர இருப்பு தொகையிலிருந்து வரும் வட்டியும் கையில் இருக்கும் பணமும் இரண்டு மூன்று வீடுகள் வாடகைக்கு விட்டு அதிலிருந்து வரவும் பணம் என்று கருணைச் செல்வியின் கையிருப்பு கொஞ்சம் அதிகமாக இருந்தது.

ஏதாவது மனிதர்களுக்கு உதவி செய்யலாம் என்றால் யாரை நம்புவது ? யாரை நம்பாமல் இருப்பது ? யாசகம் கேட்பவர்கள் எல்லாம் உண்மையில் யாசகத்தை எதிர்பார்த்து தான் கேட்கிறார்களா? என்ற எண்ணம் கருணைச் செல்விக்கு நிறைவே உண்டு.

அதனால் தான் அனாதை இல்லங்கள் முதியோர் இல்லங்கள் என்று தேடிச்சென்று அவர்களுக்கு உணவளிப்பது, பரிசளிப்பது என்று இருப்பார்.

ஆனால் அதைவிட இன்னொரு வேலையை பதிவு செய்து கொண்டிருந்தார். அதுதான் பார்ப்பவர் எல்லாரும் மனதையும் அசை போட வைத்தது.

கருணைச் செல்வி தினமும் 300 தெரு நாய்களுக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் யாராவது நம்புவார்களா ? அதுவும் ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனி தட்டு, தனித்தனி இலை என்றால் கொஞ்சம் ஆச்சரியப்படத்தான் செய்ய வேண்டும் . உண்மை அதுதான்.

கருணைச்செல்வி தான் வசிக்கும் தெருவில் சுற்றித்திரிக்கும் நாய்களுக்கு எல்லாம் இரண்டு ஆள் சம்பளத்திற்கு போட்டு சாப்பாடு வைக்கும் கருணையை செய்து கொண்டிருந்தார்.

அந்த சாப்பாட்டை எடுத்துப் போவதற்கு பிரத்தியேகமான மோட்டார் சைக்கிள், சமையல் செய்வதற்கும் அந்த நாய்களுக்கு சாப்பாடு வைப்பதற்கு இரண்டு வேலை ஆட்கள்.

மோட்டார் பைக் சத்தம் மதிய நேரம் ,இரவு நேரம், காலை நேரம் என்று எந்த நேரத்திற்கு கேட்கிறதோ அப்பாேது எங்கெங்கோ படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் நாய்கள் எல்லாம் ஒரே இடத்தில் வந்து சேர்ந்துவிடும். ஒரே இடத்தில் வந்து சேர்வதால் அந்த நாய்கள் ஒன்றுக்கொன்று பழகி இருந்தன . அதனால் அவைகளுக்குள் சண்டை ஏற்படுவதில்லை. கருணைச் செல்வி இந்த வேலைக்கு அமர்த்தி ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களா? என்பதை பார்ப்பதற்கு தினமும் அவர் ஒரு ஸ்கூட்டியில் வருவார் .

நாய்களுக்கு தனித்தனியே தட்டு தட்டின் மேல் இலை, மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்குப் போகும் மாப்பிள்ளைக்கு என்ன உபச்சாரம் கிடைக்குமோ? அந்த உபச்சாரம் நாய்களுக்கு கிடைக்கும் .இலை போட்டு சாப்பாடு, அசைவ உணவு என்று வைக்கும் போது இவைகளெல்லாம் ஆனந்தமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.

அதை பார்த்தப் கருணை செல்விக்கு அவ்வளவு ஆனந்தம் ,அர்ப்பணிப்பு .இவ்வளவு உயிர்களை நாம் காப்பாற்றுகிறாேம் என்று ஒரு சந்தோசம் .அதையும் தாண்டி அந்த சாப்பாடு, அந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நாய்கள், கருணைச் செல்வியை ஒரு பார்வை பார்க்குமே இது போதும், வாழ்ந்து கொண்டிருக்கும் போதே சொர்க்கத்தை அனுபவித்த திருப்தி எனக்கு என்று சொல்வார் கருணைச்செல்வி .

நாய்க்கு சாப்பாடு வைக்கும் தட்டை உடனே எடுத்துப் போவதில்லை. நாய்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்து அவைகள் சென்ற பிறகு தான் அந்த சாப்பாடு அந்த தட்டை எடுத்து பிரத்தியேகமான தண்ணீரில் அதைச் சுத்தப்படுத்தி மறுபடியும் , மறுநாள் அதே இடத்தில் நாய்களுக்கு உணவு வைக்க வேண்டும் இதுதான் அவர்களுக்கு வேலை.

பணம், காசு, சுகம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் கருணைச்செல்வி கருணையோடு இருப்பது அவர்களுக்கு ஒரு வியப்பைத் தந்தது.

ஏன் நாமளும் இது போல் செய்யக்கூடாதா? என்று ஒருவர் முயன்றார். அவர் வசிக்கும் தெருக்களில் உள்ள தெரு நாய்களுக்கு கருணைச்செல்வி செயவது போலவே சாப்பாடு கொடுத்தார். அந்தத் தெருவில் பசியோடு இருக்கும் எல்லா நாய்களும் ஆவலாக வந்து சாப்பிட்டன.

அதைப் பார்த்து இன்னொருவர் நாம் ஏன் செய்யக்கூடாது ? என்று அவர் வசிக்கும் தெருவில் இருக்கும் நாய்களுக்கு உணவு கிடைக்க ஆரம்பித்தார் .

இன்னொருவர் அவரைப் பார்த்து சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நிறைய ஈரமுள்ள மனிதர்கள் உருவாகி இருந்தார்கள்.

இதுதான் வாழ்வு, இந்த வாழ்வில் நாம் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்பதற்கு சாட்சி என்றார் கருணைச்செல்வி

வழக்கம் போல கருணைச் செல்வி ஆட்கள் நாய்களுக்கு உண்டான சாப்பாட்டை எடுத்துக் கொண்டு பாேனார்கள். பின்னால் கருணைச் செல்வியின் மோட்டார் பைக் சத்தம் கேட்டது.

அந்த மோட்டார் சைக்கிள் சத்தத்தை கேட்டு, எங்கெங்கோ படுத்து கிடந்த நாய்கள் நன்றியோடு ஓடி வந்து கொண்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published.