சிறுகதை

பக்கத்து மாடி- ராஜா செல்லமுத்து

புதிதாக குடிவந்த வீட்டில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தான் விஷ்ணு . முதலில் அது உடற்பயிற்சி இல்லை ; என்றாலும் பக்கத்து மாடியில் இருக்கும் பெண்ணைப் பார்ப்பதற்கு அவன் மாடியில் ஏறினான்.

விடிகிறதோ? இல்லையோ? பனி பூத்துக் கிடக்கும் அந்தக் குளிர்காலம் ; அதல் காலையில் எழுந்து அவன் உடற்பயிற்சி செய்யத் தவறுவதில்லை.

அவன் உடற்பயிற்சியை விட பக்கத்து மாடிவீட்டுப் பெண்ணைப் பார்ப்பதிலேயே அவன் கவனம் நிறைந்தது.

அதோடு உடற்பயிற்சியும் செய்து கொண்டிருந்தான். விடிகிறதோ ? இல்லையோ? தினமும் மொட்டை மாடியில் ஆஜராகி விடுவான்.

சரியாக அந்தக் காலை நேரத்தில் அவன் எழுந்து உடற்பயிற்சி செய்வதை அக்கம் பக்கத்தில் இருக்கும் மாடிக்காரர்கள் ரொம்பவே அழகாக பேசுவார்கள்.

அந்தப் பையனைப் பாருங்க…, காலைல எந்திரிச்சு, எவ்வளவு அனுசரணையா உடற்பயிற்சி செய்கிறான். நீங்களும் இருக்கீங்களே, தின்னுட்டு தின்னுட்டு குப்புறப்படுத்து வயிறு விழுந்ததுதான் மிச்சம் என்று அருகிலிருந்த வீட்டுக்காரி ஒருவரை செல்லமாகத் திட்டினாள்.

ஏன்மா அவனுக்குத் தான் வேலை இல்ல… உடற்பயிற்சி செய்கிறான்; காலையில வர்ற தூக்கம் ரொம்ப சுகமானது… அதைப் போய் தொந்தரவு பண்ணாதே என்று புரண்டு படுத்தார் அந்த தொப்பைக் காரர்

விஷ்ணு மாங்கு மாங்கென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்.

அவன் பார்வையெல்லாம் அருகிலிருந்த மாடியில் இருந்தது.

அங்கே ஒருத்தி நளினமாக நடந்து வந்து, அந்த மொட்டை மாடியில் இருக்கும் ஒற்றை பாத்ரூமில் தான் குளிப்பதாக அடையாளப்படுத்திக் கொள்வாள்.

ஒருநாள் சேலையில் வருவாள். இன்னொரு நாள் சுடிதாரில் வருவாள். இன்னொரு நாள் சார்ட்ஸ் போட்டு வருவாள் . இன்னொரு நாள் வெறும் துண்டை கட்டி கொண்டு வருவாள்

இப்படி அவள் ஒவ்வொரு நாளும் அவள் அணிந்து வரும் ஆடைகளையும் உடைகளையும் நடையையும் நளினத்தையும் ரசிப்பதற்கு விஷ்ணு மாடியில் இருப்பான்.

அவள் பல் துலக்குவது போல விஷ்ணுவை பார்ப்பாள். இவன் உடற்பயிற்சி செய்வது போல அவளைப் பார்ப்பான்.

அவளின் பெயரோ? அவளின் முகமோ? அவள் யாரென்றோ இவனுக்கு தெரியாது?

ஆனால்…

தினந்தோறும் பார்வைகள் மட்டும் பரிமாறி கொள்ளும்.

இதனால் விஷ்ணுவின் உடல் முன்னைவிட நன்றாக இருந்தது.

சதை மட்டுமே இருந்த அவனது உடல் இப்போது மெருகேறி கொஞ்சம் கெட்டி பட்டு விட்டது.

அவனுக்குள் ஒரு உற்சாகம் கூடியது. முன்னைவிட ரொம்பவே தெம்பாக நடந்தான்.

இப்பொழுது எல்லாம் அவன் மாடியில் நடப்பதை விட, எட்டு என்று வரைந்து வைத்து தினமும் அந்த 8 ல் எட்டு வைத்தே நடப்பான்.

இப்படியாக கழிந்து கொண்டிருக்கும் அவனது இளங்காலை

தினமும் அந்தப் பக்கத்து மாடியில் அவள் வருவதும் குளிப்பதும் பின்பு ஓடுவதும்

விஷ்ணுவும் தினமும் காலையில் வருவதும் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பான்.

இருவருக்குமான உறவின் நீளம் என்னவென்பது அந்தப் பார்வையின் அர்த்தம் என்ன என்பது தெரியாது.

ஆனால், அந்த காலை அவள் முகத்தில் விழித்து விட்டு போனால் எதுவும் நல்லது நடக்கும் என்பது விஷ்ணுவுக்கு ஆணி அடித்ததுபோல் ஆனந்தமாக இருந்தது.

அவன் கோவிலுக்கு போவது போல தினமும் மொட்டை மாடியில் வாசம் செய்வான்.

பேசாம வீடு வாடகைக்கு எடுத்ததை விட, மொட்டமாடிய இவன் எடுத்திருக்கலாம் , 24 மணி நேரத்தில 20 மணி நேரம் மேல தான் இருக்கான் என்று அக்கம் பக்கத்தில் சிலர் பேசுவது அவன் காதில் விழாமல் இல்லை.

அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஷ்ணு மொட்டை மாடியிலேயே தஞ்சமடைந்து கிடந்தான் .

எது எப்படியோ, அந்த பக்கத்து மாடியில் இருப்பவள் தோழியா காதலியா மனைவியா எதுவும் இல்லை.

ஏதோ ஒரு உறவு இல்லையோ..தெரியாது. இவனது உடல் தினமும் கெட்டிப்பட்டு கொண்டிருந்தது என்று மட்டும் அவனுக்கு விளங்கியது.

ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தோடு ஈடுபடுத்தி பார்க்கும் போது தான் ஒரு விஷயம் பூர்த்தி அடைகிறது என்று அவனுக்குத் தெரிந்தது

அவள் இவனுக்கு மனைவியாக வருகிறாளா இல்லையா?

இவனது உடலும் உள்ளமும் தினமும் உறுதி ஆகிக் கொண்டு இருக்கிறது என்பது மட்டும் உறுதியானது.

தினமும் மாடிக்கு வருகிறான் விஷ்ணு. உடற்பயிற்சி செய்கிறான்.

அவளையும் பார்க்கிறான் …இவன் உடல்பலம், பார்வை என்ன என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்

விஷ்ணுவின் பயிற்சி மொட்டை மாடியில் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *