செய்திகள்

நீலகிரியில் தொடர் மழை: மரங்கள் சாய்ந்தன; மின்சாரம் துண்டிப்பு

நீலகிரியில் தொடர் மழை: மரங்கள் சாய்ந்தன; மின்சாரம் துண்டிப்பு

அவலாஞ்சியில் 39 செ.மீ பதிவாகியது

ஊட்டி, ஆக.5–

நீலகிரியில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால், மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் தடைபட்டுள்ளதால், குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அவலாஞ்சியில் அதிகபட்சமாக 39 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.அதேபோல், நேற்று இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மழையிலும் அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பெரியளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை. எனினும், முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கூடலுார் பகுதியில், நேற்று முன்தினம், மாலை முதல் கனமழை பெய்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலம்புழா ஆற்றில், நேற்று அதிகாலை ஏற்பட்ட வெள்ளம், புறமனவயல் பழங்குடி கிராமத்தை சூழ்ந்து, குடியிருப்புக்குள் புகுந்தது. சில வீடுகள் சேதமடைந்தன. மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:

வரும், 8ம் தேதி வரை காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாவட்டத்தில், 283 பேரிடர் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. பேரிடர் பாதிப்பை தடுக்க, 40 பேர் கொண்ட இரு குழுக்கள் நீலகிரி வர உள்ளன. அதில்,ஒரு குழுவினர் வந்துள்ளனர். தேவைப்பட்டால் தேசிய பேரிடர் குழுக்களை அழைக்க உள்ளோம்.அனைத்து அரசு பள்ளிகளும், முகாமாக மாற்றப்பட்டுள்ளன. 300 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் பாதுகாப்பு இல்லை என்றால், உடனடியாக, 1077க்கு போன் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க, தாலுகா வாரியாக, அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மாவட்டத்தில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக அவலாஞ்சி 39 செ.மீ., பந்தலூர் 16 செ.மீ., நடுவட்டம், எமரால்ட் 15 செ.மீ., கிளன்மார்க்ன், சேரன்கோடு 14 செ.மீ., கூடலூர், தேவாலா 13 செ.மீ., பலகோலா 11 செ.மீ., அப்பர் கூடலூர் 10 செ.மீ., குந்தா 7 செ.மீ., ஊட்டி, ஓ வேலி, செருமுள்ளி, படன்துறை 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *