முழு தகவல்

நாட்டிற்கும் மக்களுக்கும் வழிகாட்டும் தலைவராக விளங்கிய கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்!

திருநெல்வேலியில் 1896ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி பிறந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகமது இஸ்மாயில். ‘காயிதே மில்லத்’ என்றால் உருது மொழியில், ‘வழிகாட்டும் தலைவர்’ என்பது பொருள். 7 வயதில் தந்தை மறைந்ததால் தாயால் வளர்க்கப்பட்டார். சிறு வயதிலிருந்தே தந்தையின் தொழிலிலும், அரசியலிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தவர். மெட்ராஸ் கிறித்துவ கல்லூரியில் படித்தபோது, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று இளநிலை பட்டத்திற்கான தேர்வை எழுதாமல் வெளியேறினார்.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு அகில இந்திய முஸ்லிம் லீக்கையும் பிரித்துவிடுவது என்று முடிவானபோது, பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஜின்னா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்தியப் பகுதி முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட காயிதே மில்லத், கட்சியின் பெயரை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என்று மாற்றினார்.

சீறி எழுந்த காயிதே மில்லத்

இந்தியா திரும்பிய காயிதே மில்லத் குழுவிற்கு பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் விருந்தளித்தார். விடைபெறும் போது பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான், ”மிஸ்டர் இஸ்மாயில் சாகிப், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்; இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் எங்களுக்கு தகவல் தாருங்கள்; உங்களுக்கு பாகிஸ்தான் பக்க பலமாக வந்து நிற்கும்” என்றார். இந்த வார்த்தையை கேட்டதும், காயிதே மில்லத் கோபமானார்.

“ என்ன வார்த்தையை உச்சரிக்கிறீர்கள் சாகிப்? இப்போது, நீங்களும் நாங்களும் வெவ்வேறு நாட்டவர்கள். எங்களுக்கு எதுவென்றாலும் நாங்கள் பார்த்துக் கொள்வோம்; அதில், நீங்கள் ஒருபோதும் தலையிட முயற்சிக்கக் கூடாது. எங்களுக்கென்று ஒரு தேசமிருக்கிறது. எங்களுக்கான தேவைகளை, சிக்கல்களை நாங்களே தீர்த்துக்கொள்வோம். நீங்கள் எங்களுக்கு செய்கிற உதவி ஏதேனும் இருக்குமானால், அது பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் பாதுகாப்பை பார்த்துக்கொள்வது தான்” என்று கம்பீரமாக சொல்லிவிட்டு வெளியேறினார்.

இந்தியா திரும்பிய காயிதே மில்லத், அகில இந்திய முஸ்லிம் லீக் சொத்துக்களின் இந்தியப் பங்காக அறிவித்த தொகையில், ஒரு பைசா கூட பெற்றுக் கொள்வதற்கு மறுத்த அவர், அது அந்நிய நாட்டுப் பணம்; எங்களுக்குத் தேவையில்லை” எனக் கூறி தேசப்பற்றை நிரூபித்தார்.

தேசிய மொழியாக தமிழ்

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக இருந்த காயிதே மில்லத், இந்திக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். ”ஓர் உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், தொடக்க காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ்.

இது எனது தாய் மொழி தமிழ் என்பதால் நான் இதனை கூறவில்லை. அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று பேசினார் காயிதே மில்லத்.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு செய்தபோது அதை எதிர்த்த அரசியல் தலைவர்களுள் காயிதே மில்லத் முக்கியமானவர். நமது அருமைவாய்ந்த தாயகத்தின் மீது பாகிஸ்தானியர் நடத்தும் ஆக்கிரமிப்புக்கு நான் பலத்த கண்டனம் தெரிவிக்கின்றேன். ஐயந்திரிபற்ற எனது கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். இந்தியா எங்கணும் உள்ள முஸ்லிம் மக்களும் மற்றுமுள்ள அனைத்து மக்களும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்திய அரசாங்கத்தின் பின்னாலும் பிரதமரின் பின்னாலும் ஒருமுகமாகவும் உறுதியாகவும் நிற்கிறார்கள் என்றார்.

14 கல்லூரிகள் தொடக்கம்

சென்னை அண்ணா சாலையில் கன்னிமரா ஓட்டல் எதிரே இருந்த முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமான முகமதியன் கல்லூரியை அரசு கையகப்படுத்தி, அதை அரசுப் பெண்கள் கல்லூரியாக மாற்ற முடிவுசெய்தது. முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமாக இருக்கும் ஒரே ஒரு கல்லூரியையும் அரசு கையகப்படுத்துவதால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று எதித்தார் காயிதே மில்லத்.

இதனையடுத்து, தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ‘முஸ்லிம் சமூகத்துக்கென்று கல்லூரிகள் தொடங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அவரது வேண்டுகோளைப் பல செல்வந்தர்கள் ஏற்றுக்கொண்டு நிதி அளித்தனர். சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று தொழில்செய்து வந்த முஸ்லிம் செல்வந்தர்களிடம், கல்லூரிகள் கட்ட நிதி கோரினார். இதைத் தொடர்ந்தே, சென்னையில் புதுக் கல்லூரி, திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி, அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் கல்லூரி உள்ளிட்ட 14 முஸ்லிம் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

மத நல்லிணக்க மாமனிதர்

மிலாது நபி விழாயின்போது, திராவிட இயக்க பேச்சாளர், இந்து மத மூட நம்பிக்கையை விமர்சித்தார். அவரின் பேச்சை உடனே முடிக்க செய்த கண்ணியமிகு காயிதே மில்லத், இது புனிதமிகுந்த மிலாது விழா மேடை. இதில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றி மட்டுமே பேசவேண்டும். பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேலி செய்து பேசக் கூடாது. இஸ்லாமிய மார்க்கம் ‘பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேவலம் செய்து பேசாதீர்கள்’ என்று அறிவுறுத்தியிருக்கிறது என்றார். மத நல்லிணக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்ட அவர், மாநில மொழிகளின் உரிமைக்காகவும், மாநிலங்களின் உரிமைக்காகவும் போராடினார்.

காயிதே மில்லத் மறைந்தபோது, அவரால் உருவாக்கப்பட்ட சென்னை புதுக்கல்லூரியில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. பெரியாரை காயிதே மில்லத் உடல் அருகே அழைத்துச் சென்றனர். அப்போது தேம்பி அழுத பெரியார், “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. உத்தமமான மனிதர். முஸ்லிம் சமுதாயத்துக்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம்” என்றார். யாரையும் அதிகம் புகழ்ந்து பேசாத தந்தை பெரியார், காயிதே மில்லத் பற்றி விவரித்த வார்த்தைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன.


மா. இளஞ்செழியன்


Leave a Reply

Your email address will not be published.