சிறுகதை

நட்புக்கு களங்கம் | துரை. சக்திவேல்

நந்தினி…. கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனியார் கம்ப்யூட்டர் விற்பனை செய்யும் நிறுவனத்தின் விற்பனை பிரிவில் வேலைக்கு சேர்ந்தாள்.

நந்தினியை அவளது பெற்றோர்கள் செல்லமாக வளர்த்தனர்.

தனியார் பள்ளியில் ஆங்கில வழி கல்வியில் படித்த நந்தினி இளம் வயதிலிருந்தே அனைவரிடமும் சகஜமாக பேசக்கூடியவள். ஆண்களிடமும் எந்த பாகுபாடும் இல்லாமலே பழகக் கூடியவள்.

அவளுக்கு பெண் தோழிகளை விட, ஆண் தோழர்களே அதிகமாக உண்டு.

வேலைக்கு சேர்ந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மற்றும் இதர அலுவலக ஊழியர்கள் என்று பெரும் பாலும் ஆண்களே இருப்பார்கள்.

அவர்கள் அனைவரிடமும் நந்தினி எப்பொழுதும் போல் நட்புடன் பழகத் தொடங்கினாள்.

கம்ப்யூட்டர் விறப்னை செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கம்ப்யூட்டரில் ஏதாவது பிரச்சனை என்றால் நந்தினிக்கு போன் மூலம் தகவல் கொடுப்பார்கள்.

நந்தினி கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு அந்த தகவலை தெரிவித்து அந்த வாடிக்கையாளர்களின் இடத்திற்கு அவர்களை அனுப்பி வைப்பது அவளது வேலை.

அதனால் அனைத்து கம்ப்யூட்டர் என்ஜினீயர்களும் நந்தினியை அடிக்கடி போனில் தொடர்பு கொள்வது வழக்கம்.

அதே போல் ஏதாவது வாடிக்கையாளரிடம் பணம் வசூல் செய்ய வேண்டியது இருந்தால் நந்தினி அந்த வழியாக செல்லும் என்ஜினீயர்களின் மோட்டார் சைக்கிளில் உடன் செல்வது வழக்கம்.

இதனால் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் கம்ப்யூட்டர் சர்வீஸ் என்ஜினீயர்கள் ராஜ், டேவிட், மதன், ஆனந்த் ஆகியோர் நந்தினிக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

விடுமுறை நாட்களில் அவர்களுடன் நந்தினி ஓட்டலுக்கு செல்வதும் மற்றும் சினிமாவுக்கு செல்வதும் உண்டு.

நந்தினி சிறுவயது முதலே அனைவரிடமும் இயல்பாக பழக கூடியவள் என்பதால் அவளது வீட்டிலும் அவளது செயல்பாடுகளை கண்டு கொள்வதில்லை.

தனது நண்பர்களிடம் உரிமையுடன் பேசும் நந்தினி அவர்களுடடன் விளையாட்டாக சண்டை போடுவதும் உண்டு.

நந்தினி தன்னுடன் கல்லூரியில் படித்த கேசவன் என்பனைக் காதலித்தாள்.

இதற்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். ஓராண்டுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர்கள் முடிவு செய்து இருந்தனர்.

தனது காதலன் கேசவனை நந்தினி தன்னுடன் வேலை பார்க்கும் அனைத்து நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

இந்த நிலையில் கேசவனின் நெருங்கிய நண்பர் சாமுவேல் சிறிது காலம் வேலை இல்லாமல் இருந்தார்.

அவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் என்ஜினீயர். அதனால் கேசவன் தனது காதலி நந்தினியிடம் கூறி சாமுவேலுக்கு உங்களது நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடு என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து நந்தினியும் தனது நிறுவன உரிமையாளரிடம் பேசி சாமுவேலுக்கு வேலை வாங்கிக் கொடுத்தாள்.

அங்கு தான் வந்தது நந்தினிக்கு வினை.

நந்தினி தனது நண்பனின் காதலி என்பதால் சாமுவேல் நந்தினியிடம் மற்ற என்ஜினீயர்களை விட உரிமையுடன் சாகஜமாக பேசுவான்.

நந்தினி வெளி வேலையாக எங்காவது செல்வது என்றால் சாமுவேல் வண்டியில் ஏறி செல்வதும் உண்டு.

வாடிக்கையாளர்களிடம் வரும் புகார்கள் தொடர்பாக என்ஜினீயர்களுக்கு தகவல் கொடுக்கும் நந்தினி சில நேரங்களில் சாமுவேலுவுக்கு உரிமையுடன் பல வேலைகளைக் கொடுத்து அவனுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுப்பாள்.

சாமுவேலுவின் குறுகிய கால வளர்ச்சியை பொருக்காத மற்ற சர்வீஸ் என்ஜினீயர்களுக்கு மனக் கசப்பை உண்டாக்கியது.

இதற்காக நந்தினியுடன் சண்டை போட வேண்டாம் என்று அவர்கள் மனசுக்குள் வைத்துக் கொண்டே வேலையை பார்த்து வந்தனர்.

இது நந்தினிக்கு புரியவில்லை.

நாட்கள் போகப் போக நந்தினி தனக்கு அதிக வேலை கொடுப்பதால் சாமுவேலுவுக்கும் நந்தினி மீது கோபம் ஏற்பட தொடங்கியது.

சில சில நேரங்களில் நந்தினியுடன் சண்டை போடத் தொடங்கினான்.

இவற்றை நந்தினி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாமுவேலுவுக்கு வேலை கொடுப்பதை குறைத்துக் கொண்டு மற்ற சர்வீஸ் என்ஜினீயர்களுக்கு வேலையைக் கொடுக்கத் தொடங்கினாள்.

நந்தினி தனக்கு வேலை கொடுக்காமல் ஒதுக்குவதை சாமுவேல் உணர்ந்து கொண்டான்.

அதே நேரத்தில் நந்தினியும் வழக்கம் போல் மற்ற சர்வீஸ் என்ஜினீயர்களுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதும், நண்புடன் பழகி வருவதையும் பார்த்த சாமுவேலுக்கு பொறாமை வரத் தொடங்கியது.

நந்தினியின் செயல்பாடுகள் குறித்து அவளது காதலன் கேசவனிடம் பல்வேறு விதமாக கூறத் தொடங்கினான்.

நந்தினியின் இயற்கையான குணம் ஏற்கனவே கேசவனுக்கு தெரியும் என்பதால் சாமுவேல் கூறுவதை சேவன் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

நாட்கள் போகப் போக சாமுவேல் நந்தினியைப் பற்றி உண்மைக்கு மாறான செய்திகளை தனது நண்பன் கேசவனிடம் கூறத் தொடங்கினான்.

ஒரு கட்டத்தில் கேசவன் நந்தினியிடமே இது குறித்து பேசத் தொடங்கினான்.

தன்னைப்பற்றி தவறான தகவல்களை சாமுவேல் தான் கூறினான் என்பது நந்தினிக்கு தெரியவந்தது.

ஒரு நாள் நந்தினி வேலை விஷயமாக சர்வீஸ் என்ஜினீயர் டேவிட்டுடன் மோட்டார் சைக்கிளில் சென்றாள். மதிய நேரம் என்பதால் அவர்கள் இரண்டு பேரும் ஒரு ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றனர்.

பின்னர் அவர்கள் இரண்டு பேரும் மாலை 5 மணிக்கு அலுவலகத்திற்கு திரும்பி வந்தனர்.

இவற்றை கவனித்துக் கொண்டு இருந்த சாமுவேல் கேசவனிடம் நந்தினியும் டேவிட்டு அடக்கடி ஒன்றாக சுத்துவதாகவும் நந்தினியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவளை திருமணம் செய்து கொண்டால் உனது வாழ்கை சீரழிந்துவிடும் என்று கூறிவிட்டான்.

சாமுவேல் கூறியதைக் கேட்டதும் கேசவனுக்கு அதிர்ச்சியாகி விட்டது.

உடனே அவன் நந்தினிக்கு போன் செய்து அவளுடன் சண்டை போடத் தொடங்கி விட்டான்.

நந்தினி தனது பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறினான். அவன் கேட்பதாக இல்லை.

தனது காதலன் யாரோ ஒருவன் கூறியதை கேட்டு தன்னை சந்தேகப்படுவதை நினைத்து நந்தினிக்கு கோபம் வந்தது. கேசவனுடன் சண்டை போடத் தொடங்கினாள்.

சாதரணமாக உருவாகிய சண்டை பெரியதாக உருவெடுத்தது.

ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே பிரிந்து விடுவோம் என்ற நிலைக்கு சென்று விட்டனர்.

இரண்டு நாட்கள் இப்படியே ஓடின.

நந்தினி தனக்கும் தனது காதலுனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை குறித்து தனது நண்பர்களிடம் கூறினாள். மேலும் இந்த சண்டைக்கு தனது காதலனின் நண்பன் சாமுவேல் தான் காரணம் என்பதை கூறினாள்.

இதை கேட்ட நண்பர்களுக்கு கோபம் வந்தது.

நந்தினி தங்களுடன் பழகுவதை கொச்சைப் படுத்திய சாமுவேலுவிடம் அவர்கள் சண்டை போடத் தொடங்கினார்கள்.

மேலும் கேசவனுக்கு போன் செய்து சாமுவேல் கூறுவது பொய் என்றும் நந்தினியுடன் நாங்கள் அனைவருமே நண்பர்களாகவே பழகுவதாகும் எந்த வித தவறான எண்ணமும் எங்களுக்கு இல்லை என்றும்

சாமுவேல் நந்தினி மீது உள்ள கோபாத்தால் தகாத செயலில் ஈடுபட்டுள்ளான். அவனது பேச்சை நம்பி எங்களது நட்பை களங்கப்படுத்த வேண்டாம் என்று எடுத்துக் கூறினர்.

அவர்கள் பேசியதை கேட்டதும் கேசவன் தனது தவறை உணர்ந்து கொண்டான்.

தனது நண்பன் கூறிய பொய்யான தகவலை நம்பி தனது காதலியின் மனதை காயப்படுத்தி விட்டோமே என வருந்தினான்.

தனது காதலி நந்தினிக்கு போன் செய்து தனது செயலுக்கு வருந்தினான்.

ஆனால் நந்தினி அவனது சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டாள்.

யாரோ ஒருவன் கூறியதை நம்பி என்னையே நீ சந்தேகப்பட்டுவிட்டாயே என்று கேசவனுடன் பேசுவதை நிறுத்தினாள்.

தனது செல்போனையும் சுவிட்ஜ் ஆப் செய்து விட்டாள்.

நந்தினி கோபப்படுவது நியாயம் என்பதை உணர்ந்த கேசவன். ஞாயிற்றுகிழமை அன்று காலை நந்தினியை நேரில் சந்திக்க அவளது வீட்டுக்குச் சென்றான்.

வீட்டுக்கு வந்த கேசவனை நந்தினி கண்டு கொள்ளாமல் படுக்கை அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்.

கேசவன் நந்தியினின் பெற்றோர்களிடம் பேசி அவளைச் சமாதானப்படுத்துங்கள் என்றும் எனது தவறுக்கு வருந்துகிறேன் என்றும் கூறினான்.

அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சேர்ந்து நந்தினியைச் சமாதானப்படுத்தினர்.

கேசவன் மன்னிப்பு கேட்டதால் ஒருவழியாக நந்தினி சமாதானம் அடைந்தாள்.

அதன் பின் நந்தினியை அவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் கேசவன் வெளியே அழைத்துச் சென்றான்.

ஒரு பூங்காவுக்கு சென்றதும் நந்தினி தன்னுள் இருந்த கோபத்தை கேசவனிடம் காட்டினாள். அவனை நேருக்கு நேர் கண்டபடி திட்டினாள். ஒரு கட்டத்தில் அவனை இரண்டு அடியும் அடித்து, அவன் மீது சாய்ந்து அழத் தொடங்கினாள்.

பின்னர் ஒருவழியாக சமாதானம் அடைந்த நந்தினி கேசவனிடம் ‘‘என்னைத் தவறாக பேசிய உன் நண்பன் சாமுவேலை என்னிடம் மன்னிப்பு கேட்க சொல். இல்லையென்றால் அவனுடன் நீ என்னை எவ்வாறு தவறாக சொல்லலாம் என்று சண்டை போட்டு அவனை கண்டித்து அவனுடனனான நட்பை துண்டிக்க வேண்டும். இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் என்று உறுதியாக கூறினாள்.

அதைத் தொடர்ந்து கேசவன் தனது நண்பன் சாமுவேலுவுக்கு போன் செய்து அவனைத் திட்டினான்.

எனது காதலியை அசிங்க படுத்தியது மட்டுமல்லாமல் நமது நட்பையே கேவலப்படுத்தி விட்டேயே… தேவையில்லாமல் எனது வாழ்க்கையில் விளையாடி விட்டாயே, நேரடியாக நந்தினியிடம் நீ மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால் உன்னுடனான நட்பை முறித்துக் கொள்வேன் என்று கேசவன் கூறினான்.

தனது தவறை உணர்ந்த சாமுவேல் தனது நண்பனை தேடி வந்து அவனிடமும் நந்தினியிடமும் மன்னிப்பு கேட்டான்.

நந்தினி அவனை மன்னித்துவிட்டாள். இனிமேல் என்னுடன் பேச வேண்டாம் என்று கூறி அனுப்பிவிட்டாள்.

அதன் பின்னர், கேசவன் தனது பெற்றோர்களிடம் இனியும் காலம் கடத்த வேண்டாம்; திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யும் படி கூறினான்.

அதைத் தொடர்ந்து நந்தினிக்கும் கேசவனுக்கும் திருமணம் முடிந்தது, இல்வாழ்க்கை இனிதே தொடங்கியது.

நந்தினி வழக்கம் போல் தனது நண்பர்களுடனான நட்பைத் தொடர்ந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *