செய்திகள்

தி.மு.க.வில் இணைந்தார் கமல் கட்சியிலிருந்து விலகிய மருத்துவர் மகேந்திரன்

சென்னை, ஜூலை.9-

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய 11 ஆயிரத்து 118 பேர், அக்கட்சியின் துணை தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

கமல்ஹாசன் கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் கமல்ஹாசனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகியிருந்தார்.

இந்தநிலையில் அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் நேற்று இணைந்தார். அவருடன் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்ம பிரியா உள்பட 78 நிர்வாகிகளும் தி.மு.க.வில் இணைந்தனர்.

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து 11 ஆயிரத்து 118 பேர் விலகி தி.மு.க.வில் இணைவதாகவும், அவர்களது பெயர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலினிடம் டாக்டர் மகேந்திரன் வழங்கினார்.

தி.மு.க.வில் இணைந்தவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தேர்தல் அறிவித்தபோதே இதை எதிர்பார்த்தேன். ‘லேட்டா’ அது நடத்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தில் சொல்வதுபோல, ‘லேட்டா வந்தாலும், மகேந்திரன் லேட்டஸ்டா…’ வந்திருக்கிறார். எனக்கு என்ன கவலையென்றால், தேர்தலுக்கு முன்பாக இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் கோவையில் ஒரு மிகப்பெரிய வெற்றியை நம்மால் பெற்றிருக்க முடியும். கொங்கு மண்டலத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கமுடியும்.

ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தில் கோவை, சேலம் மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு நம்மால் வெற்றி பெற முடியவில்லை. அதை எண்ணி இப்போது வருத்தப்படுகிறேன். மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அப்போதே நம்முடன் வந்து சேர்ந்திருந்தால், அந்த கவலையும் இல்லாமல் போயிருக்கும். இப்போதும் ஒன்றும் குறைந்து போயிடவில்லை. இப்போது இவர்கள் வந்தாச்சு. கட்சிக்கு இன்னும் பெருமை, செல்வாக்கு வந்து சேரப்போகிறது. திராவிட பாரம்பரியத்தில் உருவாகியிருக்கக் கூடிய மகேந்திரன் தி.மு.க.வில் இணைந்தது மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயருமான விஜிலா சத்தியானந்த் தனது ஆதரவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

இதேபோன்று, அ.ம.மு.க.வை சேர்ந்த நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல முன்னாள் தலைவர் எஸ்.கே.ஏ.ஹைதர் அலி மற்றும் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ராம்சன் உமா ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர். மேலும், புதுக்கோட்டை மாவட்ட அண்ணா தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் எம்.அசோகனும் தி.மு.க.வில் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, தி.மு.க. பொதுசெயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *