நாடும் நடப்பும்

திருவண்ணாமலையில் உருவாகி கிளாஸ்கோவில் மையம் கொண்ட ‘அக்னி புயல்’ வினிஷா


ஆர். முத்துகுமார்


‘அக்னி தலம்’ என்ற அடைமொழி கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஒரு தீப்பிழம்பாய் பள்ளிச் சிறுமி வினிஷா உலகப்பார்வையை தனது ஆக்ரோஷப் பேச்சால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரச்சொல்லி ஆக்கப்பூர்வமான செயலில் இறங்கும் திசையில் பயணிக்க வழிகாட்டியுள்ளார்.

உலகத் தலைவர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இன்றைய தலைமுறையினர் கோபத்திலும் விரக்தியிலும் உள்ளனர் என்று அந்தச் சிறுமி பேசியது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகத் தலைவர்கள் ஸ்காட்லாந்தின் தலைநகர் கிளாஸ்கோ மாநகரில் கடந்த வார இறுதியில் சங்கமித்து பருவநிலை மாற்ற மாநாட்டில் பல்வேறு உறுதிகளை தந்துவிட்டு ஊர் திரும்பி விட்டனர்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது அதற்கு முன்பு ‘கியோட்டோ ஒப்பந்தம்’ என பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மசோதாக்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் செயல்பாட்டிற்குத் தான் வரவில்லை!

1997–ல் இந்தியாவின் ஒட்டுமொத்த கரும்புகை வெளியேற்றத்தை 2030–ல் குறைத்து விடுவோம் என உறுதியேற்று இருந்தோம். ஆனால் அதில் சிறு சதவிகிதத்தைக் கூட நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் கூட எடுக்க தவறிவிட்டோம்!

இம்முறை பிரதமர் மோடி 2070–ல் கரும்புகை அறவே இருக்காது. அதாவது zero emmisions அல்லது Net zero என்ற இலக்கை எட்டி விடுவோம் என்று கூறிவிட்டு வந்துள்ளார்.

தீபாவளி கொண்டாட்ட நாளில், அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் அதற்கு முந்தைய நாளில் தான் தந்துவிட்டு வந்துள்ள சாத்தியமற்ற உறுதிமொழியை பற்றி ஏதுமே குறிப்பிடவில்லை.

இது நமது பூமி – அடுத்த தலைமுறை நமது சந்ததியர்களே ! நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகள், வாகன கரும்புகை சமாச்சாரங்கள் எல்லாமே இன்றைய பல்வேறு சீர்கேடுகளுக்கு காரணமாகும்! அடுத்த 50 ஆண்டுகளில் பூமி உருக்குலைந்து விட முக்கிய காரண காரியங்களும் ஆகும்!

இதை நமது சங்க காலத்தில் தொண்டை மண்டலம் என்று வர்ணிக்கப்பட்ட பகுதியில் இருந்து புறப்பட்டுள்ள இளம்புயல் சிறுமி வினிஷாவின் பயணம் கிளாஸ்கோவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சிவபெருமான் உச்சி முதல் பாதம் வரை ஜோதியாய் காட்சி தந்து மலை வடிவாய் காட்சி அருளினார்; சிவனைக் காண முடியாத காக்கும் கடவுளும் விஷ்ணு தோல்வியை ஒப்புக்கொண்டார். சிவபெருமான் உச்சியைக் கண்டதாக தாழம்பூவை வைத்து பொய்ச்சாட்சி சொல்ல வைத்த படைக்கும் கடவுள் பிரம்மா கோவில் இல்லாமலிருக்கச் சபிக்கப்பட்டதாக ஓர் புராண கதைஉண்டு அல்லவா?

அதாவது எரிமலை வெளியேற்றிய துகள்கள் சிறுமலையாக தோன்றி உள்ளதாகவும் பார்ப்பவர்கள் அண்ணாமலை அதாவது ‘அண்ணாந்து’ பிரம்மித்து பார்க்கப்படும் மலை அது! அந்தப் பகுதியிலிருந்து வரும் வினிஷா இயற்கையை போற்றுங்கள் என அனல் பறக்க பேசியிருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

கிளாஸ்கோவில்

விருது பெற அழைப்பு விக்கப்பட்டு ஸ்காட்லாந்தின் தலைநகர் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் தூய்மை தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசுவதற்கு தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதான சிறுமி வினிஷா உமாசங்கருக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். இந்த வினிஷா உமாசங்கர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டியை வடிவமைத்தற்காக சுற்றுச் சூழலுக்கான ஆஸ்கார் எனப்படும் ‘எர்த்ஷாட்’ விருதுக்குத் தேர்வானவர் ஆவார்.

இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உட்பட 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் வினிஷா ஆற்றிய உரையில் கூறியதாவது:–

உலகத் தலைவர்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குங்கள். புதைபடிவ எரிபொருள்கள், புகை மற்றும் மாசுபட்ட சூழல் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்துக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்புகள், திட்டங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பழைய விவாதங்களையே தொடராமல் எதிர்காலத்துக்கான புதிய சிந்தனையை முன்னெடுக்க வேண்டும்.

எர்த்ஷாட் விருது பெற்றவர்கள் மற்றும் தேர்வானவர்களின் கண்டுபிடிப்புகள், முயற்சிகளுக்கு உதவ வேண்டும். உங்களுடைய நேரம், பணம் மற்றும் முயற்சி ஆகியவற்றை வளமான எதிர்காலத்தை உருவாக்க எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும்.

அதேசமயம் தெளிவாக சொல்கிறேன். நீங்கள் செயல்பட தாமதமானாலும் எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் நாங்கள் நிறுத்த மாட்டோம். தொடர்ந்து பயணிப்போம். நீங்கள் கடந்த காலத்திலேயே முடங்கியிருந்தால் நாங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கி நகர்ந்துகொண்டே இருப்போம்.

ஆனால் தயவுசெய்து என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்; அதற்காக ஒருபோதும் நீங்கள் வருந்தும்படி ஆகாது.

உலகத் தலைவர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இன்றைய தலைமுறையினர் பெரும் கோபத்திலும் விரக்தியிலும் உள்ளனர். எங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த காரணங்களும் உரிமையும் உள்ளது. ஆனால் எங்களுக்கு இப்போது கோபம் கொள்ள நேரமில்லை. அதைவிட முக்கியமானது செயலாற்றுவதுதான்.

நான் இந்தியாவை சேர்ந்த பெண் மட்டுமல்ல. இந்த பூமியைச் சேர்ந்த பெண்ணும் கூட என்றே கருதுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறாக நம் தமிழகத்தில் இருந்து ஒரு 14 வயது சிறுமி அசாத்திய தைரியத்துடன் மேடையேறி சர்வதேச நிபுணர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி சிலப்பதிகாரத்தில் கண்ணகி அரசரிடம் இது நியாயமா? என கோபத்துடன் வழக்காடியது போல் கேள்விக்கணை தொடுத்து விட்டு வந்துள்ளார்.

இனி மத்திய அரசும் மாநில அரசுகளும் அரசியல் களத்திற்கு அப்பால் இதை நம் அடுத்த தலைமுறைக்கு சாதகமான புதிய கொள்கை கோட்பாடுகளை உருவாக்கி இயற்கையை போற்றுவோம்; பாதுகாப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *