சிறுகதை

தாடிப்பண்ணை! | கி.ரவிக்குமார்

36 பட்டி பஞ்சாயத்தும் கூடி நிற்க (18 பட்டியெல்லாம் அந்தக்காலம்) நாட்டாமை தாடிப்பண்ணை தன் ஒரு வாரத்து வெண்தாடியை தடவியபடி வண்டியில் இருந்து அடிபொடிகளோடு இறங்கி வந்தார்.

“நம்ம 36 பட்டியிலும் வழிப்பறி, கொள்ளை, பதுக்கல் நடப்பதா கேள்விப்பட்டு தான் இந்த பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறேன்!” என்று ஆரம்பித்தார்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லீங்க!” என்ற சத்தம் கேட்டது!

“யார்ரா அது! ஊர்த்துரோகி!” என்று அதட்டி உட்கார வைத்தவர்,

“அதுனால, இனிமேல் நம்ம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பணம், காசு செல்லாதுன்னு அறிவிக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற தானியம், பொன்னு, பொருளு எல்லாத்தையும் பண்ணையில் இருக்கிற தோட்டத்தில் கொண்டு வந்து ஒப்படைச்சிடணும்! அப்படி ஒப்படைச்சா, வழிப்பறியோ, கொள்ளையோ நடக்க வாய்ப்பே இல்லை! இது என் உத்தரவு!” என்றார் கறாராக!

இதைக் கேட்ட கூட்டம் முனு முனுக்க ஆரம்பிக்க, ஒருத்தன் சட்டென கை தட்டலை ஆரம்பித்து வைக்கவும் எல்லோரும் கை தட்டிய படி கலைந்து சென்றனர்.

ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் கூடியது கூட்டம்!

“தாடிப்பண்ணை ஐயா! நீங்க சொன்ன படி எல்லாத்தையும் ஒப்படைச்சிட்டோம். எங்க வீட்டுல ஒரு நயா பைசாவோ, பொட்டு தானியமோ கிடையாதுங்க!”

“ஆமாங்கய்யா! என் கடையில் இருக்கும் பொருளை கூட, எடுத்துக்கிட்டு போயிட்டாங்க!” என்றார் அப்பாவியாக கடைக்கார அவினாசி!

“ரொம்ப நல்லது! நீங்க போகலாம். இனி எப்படி கொள்ளை நடக்கும்னு பார்ப்போம்!” என்று சொல்லி அட்டகாசமாக சிரித்தார் பண்ணை.

“சரிங்கய்யா! இந்த மாசச் சம்பளம் கொடுங்கய்யா!” என்று ஊரார் கேட்டனர்.

“ஆளுக்கு 10 கிலோ அரிசி தர்றேன்! போங்க!” என்றதும்

“கொடுங்க! போயிடுறோம்!” என்று கேட்டனர் கோரசாக!

“கொடுக்குறதா! அறிவில்லையா உங்களுக்கு! கொள்ளை போகுதுன்னு தானே, எல்லாத்தையும் பண்ணையில் கொடுக்கச் சொன்னேன்! இதுவும் பண்ணையி்லேயே தான் இருக்கும்! தினமும் கால் கிலோனு கணக்கு வைச்சு வாங்கிக்கோங்க!” என்றார் கறாராக!

“அதெப்படிங்க! நீங்க வெளியூர் போனாலோ, தரமாட்டேன்னு சொன்னாலோ நாங்க சாப்பாட்டுக்கு என்ன பண்றது!” என்று ஒருவர் கேட்டதும் வெகுண்டு எழுந்த பண்ணை,

“நாட்டாமையையே எதிர்த்து பேசுறியா! துரோகி! உன்னை ஊரை விட்டு தள்ளி வைக்கிறேன். இவன் கூட யாரும் அன்னம் தண்ணி பொழங்கக்கூடாது! பொழங்கினா உங்களுக்கும் அதே கதி தான்!” என்று சொல்லியபடி,

கோபத்தோடு எழுந்து, துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்ப, கூட்டம் மந்தையை போலக் கலைந்தது.

அதில் ஒருவன் அருகில் இருப்பவனிடம்,

“நாட்டாமையை எதிர்த்து கேள்வி கேட்டு, சோத்துக்கு வழியில்லாம போனது யாரு!” என்று கேட்டதும் பதில் வந்தது!

“நமக்கு அரிசியும் பருப்பும் கொடுத்தாரே! அதே பலசரக்கு கடை அவினாசி தான்!” என்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *