செய்திகள்

ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டுக்கு 71 லட்சம் தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, ஜூலை.1-

ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டுக்கு 71 லட்சம் தடுப்பூசிகள் வரும் என்றும் தினசரி 8 லட்சம் தடுப்பூசிகள் போடும் அளவுக்கு மருத்துவ கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியமேடு இந்திய அரசின் மருந்து கிடங்கில் இருந்து 2.50 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஜூலை மாதத்துக்கான தடுப்பூசி பெறும் பணி 2-ந் தேதி முதல் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதனால் 3 நாட்கள் தொடர்ந்து தடுப்பூசி இல்லாமல், பெரிய அளவிலான தடுமாற்றம் நிகழ்ந்து விடும் என்ற வகையில், முதலமைச்சர் மத்திய அரசாங்கத்திடம் பேசி வந்தார்.

அந்தவகையில் தென் மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை சேமித்து அனுப்பப்படும், பெரியமேட்டில் உள்ள இந்திய அரசின் மருந்து கிடங்கில் இருந்து 2.50 லட்சத்தை தமிழகத்துக்கு எடுத்துகொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுவரை ஐதராபாத், புனே போன்ற பகுதிகளில் இருந்துதான் விமானங்கள் மூலமாக சென்னைக்கு தடுப்பூசி வரும். ஆனால் அவசரத்துக்கு இங்குள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியதால், துறையின் அலுவலர்கள் இங்கிருந்து தடுப்பூசிகளை எடுத்து தமிழகம் முழுவதும் அனுப்புவதற்கான பணிகளை செய்துள்ளனர்.

தற்போது இன்று (நேற்று) 88 ஆயிரத்து 450 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இதுவரை 1 கோடியே 46 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. 1 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரத்து 494 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசிதான் கொரோனா பேரிடருக்கு ஒரே தீர்வு. நீலகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலேயே மலை மாவட்டத்தில் அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்ட மாவட்டமாக நீலகிரி உள்ளது.

ஜூன் மாதத்தில் 42 லட்சம் தடுப்பூசிகள் வரும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தின் சிறப்பான செயல்பாடு காரணமாக கூடுதலாக மத்திய அரசு 4 லட்சம் தடுப்பூசிகளை கொடுத்தது. தற்போது 2.5 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. அந்தவகையில், ஏறத்தாழ ஜூன் மாதத்துக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் என இலக்கை காட்டிலும் அதிகமாக முடிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தை பொறுத்தவரை 71 லட்சம் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை 2-ந் தேதியில் இருந்து அட்டவணை வகுத்து அனுப்ப இருக்கின்றனர். தமிழகத்தில் ஒரு நாளைக்கு 7 லட்சம் முதல் 8 லட்சம் தடுப்பூசிகள் போடும் அளவுக்கு நிர்வாக கட்டமைப்புகள் இருக்கிறது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து குறைந்த அளவிலே தடுப்பூசிகள் வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அப்பல்லோ குழுமம் சார்பில் கெல்லீஸில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, கூறியதாவது:-

கர்ப்பிணி தாய்மார்களுக்கு விரைவில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது வரை 3,200 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரும்பகுதியினர் அதில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ரூ.2 கோடியில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தை நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

ரோட்டரி சங்கம் சார்பாக ரூ.90 லட்சத்தில் வழங்கப்பட்ட நடமாடும் காசநோய் கண்டுபிடிப்பு எக்ஸ்ரே வாகனத்தையும் அவர், பொது மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் பிரியா ராஜ், மருத்துவமனை சூப்பிரண்டு டாக்டர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *