சென்னை, ஜூன் 27–
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து விமானங்கள், கப்பல்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் போதை பொருள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனைக்குரியது என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நைஜீரியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் போதை பொருள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
காலணிகளில் கடத்தல்
தகவலின் அடிப்படையில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கென்யாவிலிருந்து வந்த இளம் பெண், கால்களில் அணிந்திருந்த காலணிகளில் மறைத்து போதைப்பொருளை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அப்பெண்ணை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக போதைப்பொருட்கள் எடுத்து வந்தார்கள்? போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.