செய்திகள்

சென்னை மலர் கண்காட்சி இன்று கலைவாணர் அரங்கில் தொடக்கம்

மாணவர்களுக்கு ரூ.20; பெரியவர்களுக்கு ரூ.50 கட்டணம்

சென்னை, ஜூன் 3–

கருணாநிதியின் 99–வது பிறந்த நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சென்னை மலர் கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசு புதிய முயற்சியாக, சென்னையில் மலர் கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதில் புனே, பெங்களூரு, ஊட்டி, ஒசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200–க்கும் மேற்பட்ட வகையிலான மலர்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

3 நாள் மலர்க்காட்சி

கலைஞர் கருணாநிதி உருவ வடிவில் மலர் அலங்காரம் மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் இந்த மலர் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியை இன்று முதல் 5 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50 எனவும் மாணவர்களுக்கு ரூ.20 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர்கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என தோட்ட கலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் முதன்முறையாக கலைவாணர் அரங்கில் அமைக்கப் பட்டுள்ள இந்த மலர்க் கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, சுற்றுலா துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன், வேளாண் உற்பத்தி ஆணையர் சி.சமயமூர்த்தி, தோட்டக்கலை துறை இயக்குனர் இரா. பிருந்தாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.