செய்திகள்

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்றார்

சென்னை, செப். 22–

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி 12–ந் தேதி பணி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 13ஆம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர் நேற்று பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து ஐகோர்ட் மூத்த நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்று கொண்டார். பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி டி.ராஜா தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் இணைந்து பொதுநல வழக்குகள் உள்ளிட்ட தலைமை நீதிபதி விசாரிக்கும் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர்.

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி, நேற்றுடன் பணி ஓய்வு பெற்றதையடுத்து ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 54 ஆக குறைந்துள்ளது.75 நீதிபதிகள் கொண்ட ஐகோர்ட்டில் 21 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி டி.ராஜா அடுத்த ஆண்டு மே மாதம் 24-ம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.