சென்னை, பிப். 13–
சென்னை நகரில் கடந்த 7 நாட்கள் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 73 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்து.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை நகரில் கமிஷனர் சங்கர்ஜிவால் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’’ மூலம் சிறப்பு சோதனைகள் நடத்துதற்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் போலீசார் அந்தந்த காவல் எல்லைகளில் வாகன சோதனை நடத்தி குட்காவை பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 5–ந் தேதி முதல் 11–ந் தேதி வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 73 கிலோ 921 கிராம் குட்கா புகையிலைப் பொருட்கள், அரை கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது.
குறிப்பிடும் படியாக, மடிப்பாக்கம் போலீசார் கடந்த 09.02.2023 அன்று மடிப்பாக்கம், பொன்னியம்மன் கோயில் தெரு, கலைமகள் தெரு சந்திப்பில் கண்காணிப்பு பணியிலிருந்தனர். அப்போது அங்கு குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த குணசேகரன் (43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஹான்ஸ், கூல்லிப், விமல், எம்.டி.எம் உட்பட 71 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.