செய்திகள்

சென்னையிலிருந்து இலங்கைக்கு மீண்டும் ரெயில் சேவை: அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை

சென்னை, செப். 15–

சென்னையிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு நேரடியாக செல்லும் வகையில் ராமேஸ்வரம் போட் மெயில் ரெயில் சேவையும், அதன் தொடர்ச்சியாக கப்பல் சேவையும் நடைமுறையில் இருந்தது. தற்போது, அத்தகைய ரெயில் சேவையை தொடங்குவது குறித்தும் வாரியம் ஆய்வு செய்து ஒன்றிய அரசின் அனுமதி பெறலாமா? என்று கடல்சார் வாரியத்துடன் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 93-–வது கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:–

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 3 பெரிய துறைமுகங்களும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 6 சிறிய துறைமுகங்களும், 11 தனியார் அரசு கூட்டு துறைமுகங்களும் செயல்பட்டு வருகின்றன.

கடற்கரைகளையும், கடல் அலைகளையும், நீண்டு, பரந்து, விரிந்துள்ள நீலக்கடலையும், கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து மகிழும் மக்களுக்கு பாதுகாப்புடன்கூடிய நீர் விளையாட்டுகள் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளையும் கடற்கரை பகுதிகளில் அமைத்துக்கொடுத்தால் மக்கள் மேலும், உற்சாகம் அடைவார்கள் என்பது என் எண்ணம்.

கடலுக்குள் கடலின் ஆழம், கடல் அலைகளின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப எங்கெல்லாம் படகுப்போக்குவரத்து நடத்த அனுமதிக்கலாமோ அங்கெல்லாம் ஆய்வு செய்து படகு போக்குவரத்துகளை அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யலாம். இதற்கு முன் உதாரணமாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் 2010– ஆம் ஆண்டு படகு போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டு, நடத்தப்பட்டுள்ளது. அதற்கு பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதுடன் தேவையான கட்டுமானங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசின் நிதிநிலைமை இதற்கெல்லாம் ஒத்துழைக்குமா? என்பது சந்தேகமே. வெளிநாடுகளில் உள்ளதுபோன்று நீர் விளையாட்டுகள், போட்டிங் போன்றவற்றை தனியார் முதலீடு மூலம் மேற்கொள்ளலாமா? என்பதை இந்த வாரியம் ஆய்வு செய்ய வேண்டும்.

கடல் நீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அனைவரும் விரும்பக்கூடியது. சிறிய கப்பல் மூலம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு துறைமுகத்திற்கும் உல்லாசப்பயணம் போய்வர அனுமதிக்க முடியுமா? என்பதையும் இந்த வாரியம் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், கடல்சார் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் கே. பாஸ்கரன், நிதித்துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் வடநேரே, மாநில துறைமுக அலுவலர் அன்பரசன், சுங்கத்துறை உதவி ஆணையாளர் எ.வெங்கடேஷ் பாபு மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *