செய்திகள்

சுற்றுலா தலங்களில் ஹெலிகாப்டர் தளம்: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை, அக். 22–

கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க, ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறை மானியக்கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம், சென்னையில் உள்ள சுற்றுலாத் துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், “சட்டமன்றத்தில் சுற்றுலாத் துறை மானியக்கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட 30 திட்டங்களில் இதுவரை எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மற்ற திட்டங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுற்றுலாத் துறையின் ஹோட்டல்கள், மேக் மை ட்ரிப் உள்ளிட்ட ஆன்லைன் பயண நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

300 தலங்களில் வசதி

அதுபோன்று, தமிழ்நாடு ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுகளை ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 15 அல்லது 20 நாட்களில் இது நடைமுறைக்கு வரும்.

300 சுற்றுலா தலங்களில் சர்வதேச தரத்துக்கு இணையான வசதிகளை ஏற்படுத்த திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. மெரினா அல்லது அதற்கு அருகே படகு சவாரி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்குவதற்காக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை, ஆலோசனைக் குழு தல ஆய்வு மேற்கொண்டுள்ளது. கொடைக்கானல் நிலத்துக்கான தல ஆய்வு விரைவில் நடைபெற உள்ளது.

மெடிக்கல் டூரிஸத்துக்குத் தனி கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று டூரிஸ்ட் கைடு என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி உருவாக்கப்பட்டு, அதை செயல்படுத்துவதற்கான திட்டமும் உள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் கையில் உள்ளன, அவை ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *