திருவான்மியூர், டிச. 27–
சபரிமலையில் கடந்த 39 நாட்களில் ரூ. 223 கோடி வருமானம் கிடைத்துள்ளது என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு ஜோதி தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தங்கள் யாத்திரையை தொடர்ந்து வருகின்றனர்.
39 நாளில் ரூ.223 கோடி வசூல்
மகரவிளக்கு ஜோதி தரிசனத்திற்காக, நடை திறந்து இன்றோடு 41வது நாள் ஒரு மண்டலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு, மண்டல பூஜை மதியம் 12.30 மணியளவில் தொடங்க உள்ளது. நடை திறந்து 39 நாள் வருமானத்தை நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
கடந்த 39 நாட்களில் சுமார் 29 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் எனவும், அதன் மூலம் ரூ. 223 கோடி வருமானம் கிடைத்துள்ளது எனவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.