செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடுவதில் கூடுதல் வேகம் வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி, மே.21-

தகுதி வாய்ந்த அனைவருக்கும் போட்டு முடிக்க கொரோனா தடுப்பூசி போடுவதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்கு கொண்டுவர நாடு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கொரோனா நிலைமை குறித்து ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தை மத்திய அரசு நேற்று நடத்தியது.

இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமை தாங்கினார்.

நாடு முழுவதும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கான வேகத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு வலியுறுத்தியது.

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் பேசும்போது, எந்த நிலையிலும் தடுப்பூசிகளை வீணாகாமல் பார்த்துக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஒரு தீவிர இயக்கம்போல நடத்த வேண்டும், ஜூன், ஜூலை மாதங்களில் வீடுதோறும் சென்று தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தின் 2-வது கட்டத்தின்போது முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சிறைகள், செங்கல்சூளைகள் விடுபடக்கூடாது. அங்கும் சென்று முதல், இரண்டாவது மற்றும் முன்எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகள் போடாதவர்களுக்கு போடுவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் தடுப்பூசி மையங்களில் 18 முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடுவதை ஒழுங்காக ஆய்வுசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆன நிலையில்தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் நிமித்தமாக செல்வோர் 2-வது டோஸ் போட்டுக்கொண்ட 90 நாளில் முன் எச்சரிக்கை டோஸ் போடுவதற்கு, வெளிநாட்டு பயணத்துக்கான ஆதாரங்களைத்தர வேண்டும் என சில மாநிலங்களில் கேட்பதாகவும், எந்த நிலையிலும் இதில் எழுத்துபூர்வமான ஆதாரங்களைக் கேட்டு வற்புறுத்தக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தினார்.

இந்த தகவல்கள் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.