செய்திகள்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா: தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பும் பாதிப்பு

திருவனந்தபுரம், ஏப்.9-

தடுப்பூசி போட்டுக்கொண்ட போதிலும், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கேரள முதல்வருமான உம்மன்சாண்டிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக கேரளா விளங்குகிறது. நேற்று அங்கு 4,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

அந்த மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயனுக்கும் (வயது 75) கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதித்து இருப்பது நேற்று உறுதியானது. அவரது மகளுக்கும், மருமகனுக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதுமில்லை. அவர் கடந்த மாதம் 3-ந்தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். இரண்டாவது டோஸ் இன்னும் எடுத்துக்கொள்ளாத நிலையில் கொரோனா தொற்று பாதித்துள்ளது. தற்போது கண்ணூர் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதையொட்டி டுவிட்டரில் நேற்று பதிவிட்ட பினராயி விஜயன், “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள போகிறேன். என்னோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், சுய கண்காணிப்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

உம்மன்சாண்டி…

கேரளா மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான உம்மன்சாண்டிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

கேரள சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவர் உடல்நல குறைவால் அவதிப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *