சிறுகதை

குப்பை- ராஜா செல்லமுத்து

தினமும் பாடல் பாடி வந்து கொண்டிருக்கிறது குப்பைகளை சேகரிக்கும் குப்பை வண்டி.

” ஓஹோ நம்ம ஊரு… நல்ல ஊரு….” என்ற பாடல் தினமும் தெருக்களில் ஒலித்தபடியே வந்து கொண்டிருக்கிறது.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து போடச் சொல்லி குப்பை வண்டி உடன் ஒரு கைடு வந்து கொண்டிருந்தார்.

அவர் மக்களை மிரட்டும் தாெனியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்துப் போட வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே வந்தார்.

அதில் ஒரு தெருவில் இருந்த பாலாஜி என்பவர் ஒரு கேள்வி கேட்டார்.

ஏங்க இதுதான் எங்களுக்கு வேலையா? மக்கும் குப்பை, மக்காத குப்பன்னு இது எப்படி பிரிச்சுட்டு உட்கார்றது? எங்களுக்கு வேற வேலை இல்லையா? என்று கேட்டார் பாலாஜி

சார் அரசாங்கம் அப்படித்தான் சட்டம் பாேட்டுருக்கு.

மக்கும் குப்பை மக்காத குப்பை நீங்க பிரிச்சு போட்டா மட்டும் தான் நாங்க வாங்கிட்டு போவோம். இல்ல உங்களுக்கு நாங்க பைன் போடுவோம் என்று பயமுறுத்தினார் குப்பை வண்டிக்காரரும் அவர் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு ஊழியரும்.

குப்பையை பிரிச்சு போடலனா என்ன பண்ணுவீங்க? என்று மறுபடியும் கேட்டார் பாலாஜி.

கண்டிப்பா நாங்க உங்களுக்கு அபராதம் போடுவோம் என்றார் குப்பைவண்டிகாரர்.

மறுநாள் அவர் எதையும் சட்டை செய்யவில்லை .வீட்டிலிருந்த குப்பையை தூக்கி வீதியில் எறிந்தார். வீட்டுக்கு போய் வாங்குவதற்கு குப்பை வண்டி வீதியில் கிடக்கும் குப்பையை பெருக்குவதற்கு ஒரு பெண்ணுடன் வந்து அந்த தெருவில் கிடக்கும் குப்பையைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள் .

இப்போது அவர் குப்பை வண்டியை எதிர்நோக்கி நிற்பதில்லை. குப்பையை வீதியில் தூக்கி எறிந்து விட்டு அவர், அவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.

எந்த வீட்டில் இருந்து இந்தக் குப்பை விழுகிறது என்றெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாது .

அதில் மக்கும் குப்பை , மக்காத குப்பை என்று எல்லாம் மொத்தமாக இருந்தது.

இதைக் கவனித்த குப்பை வண்டிக்காரர்

என்ன இது ? இவரு ஒரு ஒரு வாரமா குப்பை போடலையா? என்ற சந்தேகம் வலுத்தது .

பாலாஜிவிடம் கேட்டார்:–

எதுக்காக நீங்க இப்ப குப்ப போடுறதில்ல என்று கேட்டார்.

மக்கும் குப்பை, மக்காத குப்பன்னு யாருங்க பிரிச்சிட்டு உட்கார்ந்து இருக்கா. தூக்கி ரோட்டுல போட்டேன். நீங்க யாரு குப்பை போட்டாங்கன்னு கண்டுபிடிச்சுட்டு இருப்பீங்க . இல்ல குப்ப போடுறவன குறிவச்சு பிடிப்பீங்களா? மரியாதையா குப்ப போட்டா, நீங்க மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிச்சு போட சொல்றீங்க .இது என்னங்க நியாயம் என்று சொன்னார் பாலாஜி.

அவர் போலவே தெருவில் இருந்தவர்கள் எல்லாம் அத்தனை பேரும் குப்பையை தூக்கி வீதியில் எறிந்து விட்டுச் சென்றார்கள்.

குப்பை அள்ளும் ஊழியர்களும் யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை.

மாறாக அந்த குப்பை வண்டிக்காரர் அலுவலகத்தில் ஒரு யோசனை சொன்னார்.

சார் இந்த மனுஷன்ங்க எல்லாம் அப்படித்தான் .யாருக்கும் சுய ஒழுக்கம் .நாடு நல்லா இருக்கணும் அப்படின்னு எதுவும் நினைக்கிறது இல்ல.

நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன் அதப்படி பண்ணுனா கண்டிப்பா மக்கும் குப்பை, மக்காத குப்பைய பிரிச்சிடலாம் சார் என்றார் குப்பைக்காரர்

என்ன என்று அதிகாரி கேட்டார்.

மறுநாள் பாருங்க சார் என்றார் குப்ப வண்டிக்காரர் .

மறுநாள் வழக்கம் போல் “ஓஹாே…நம்ம ஊரு….. நல்ல ஊரு இது நம்ம ஊரு தாய்யா

என்று பாடல் பாடியபடியே வந்தது குப்பை வண்டி.

ஆனால், மக்கும் குப்பை அஞ்சு ரூபாய். மக்காத குப்பை அஞ்சு ரூபாய் என்று குப்பையை கொண்டு வாருங்கள் விலைக்கு வாங்கிக் கொள்கிறோம் என்ற விளம்பரம் வரவும் எல்லோரும் குப்பைகளை பிரித்துக் கொண்டு வந்தார்கள். ஆடியோ கேட்டுக்காெண்டே வந்தது.

அந்தத் தெரு முழுக்க மக்கும் குப்பை வேறு, மக்காத குப்பை வேறு என்று பிரித்து நின்று கொண்டிருந்தார்கள்..

அதில் பாலாஜியும் தன் கையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வைத்தபடியே நின்று கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.