சிறுகதை

குன்றின் மேலிட்ட விளக்கு – மு.வெ.சம்பத்

ரமேஷ், ராகுல், ரவி, இராகவ் ஆகியோர் வங்கியில் வேறு வேறு கிளைகளில் பணி புரிபவர்கள். நல்ல நண்பர்கள். எல்லோரும் ஒரே காம்பவுண்டில் உள்ள தனித்தனி வீட்டில் தனது குடும்பத்துடன் குடியிருந்தனர்.

வார நாட்களில் எல்லோருக்கும் அவரவர்கள் வேலையே அவர்களது நேரத்தையெல்லாம் விழுங்கி கொண்டு விடுவதால், ஞாயிற்றுக்கிழமையன்று தவறாமல் நால்வரும் சந்தித்து வார நாட்கள் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுவார்கள்.

அந்த சந்திப்பின் போது நிறைய விஷயங்களுக்குத் தீர்வு ஏற்படுவது மட்டுமல்லாமல் பிள்ளைகளின் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளும் பதவி உயர்வுக்கு எடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றியும் பேசுவார்கள். விழா நாட்களில் எல்லோரும் கூடி கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டனர். கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்து வாழ வேண்டும்; நமது காம்பவுண்டில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டுமென அடிக்கடி சந்திப்பில் கூறிக் கொள்வார்கள்.

சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், கணவன் மனைவி இருவரும் அமர்ந்து பேசி சரி செய்து கொள்ள வேண்டும்; பிள்ளைகள் நடுவே சண்டை போடுவதைத் தவிர்த்தல், குடும்ப ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் முக்கியமான அடித்தளமாகும் என ரமேஷ் வலியுறுத்துவான்.

யாராவது ஊருக்குச் செல்ல நேர்ந்தால் அவர்கள் வரும் வரை அவர்கள் வீட்டை அடுத்தவர்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்கள். அடிக்கடி ரமேஷ் ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே” என்ற படப்பாடலை மேற்கோள் காட்டுவான்.

சில நாட்களாக இராகவ் போக்கில் மாற்றங்கள் தெரிவதை உணர்ந்த நண்பர்கள் நட்பின் சங்கிலி உடைந்து விடக் கூடாதென்பதற்காக அவனை ஏதும் விசாரிக்காமல் இருந்தனர். அவனும் ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தை தவிர்த்ததைக் கண்டு நண்பர்கள் விட்டுப் பிடிப்போமென அமைதி காத்தனர். இராகவ் தனது பிரச்னையை யாரிடமும் கூறாமல் தனித்தேயிருக்க விரும்பினான். அலுவலகத்திலும் கலகலப்பின்றியே இருப்பதாகத் தகவல்கள் வந்தன. ரமேஷ் மற்ற நண்பர்களிடம் ஏதும் அவனிடம் கேட்காதீர்கள் என தாழ்மையுடன் விண்ணப்பம் வைத்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. எல்லோரும் நிதானமாக எழுந்திருந்து வேலைகளைத் தங்கள் சௌகரியம் போல் பார்க்க ஆரம்பித்தனர். அப்போது அவர்களது நண்பன் தாமோதரன் ரமேஷ் வீட்டிற்கு வந்தான். தனக்கு திடீரென திருமணம் நிச்சயமாகி விட்டது. வருகிற 25 ந் தேதி திருமணம் எங்கள் ஊரில் நடைபெறுகிறது. கட்டாயம் வந்து விடுங்கள் எல்லோரும் என்றான். நான் இராகவ்வைப் பார்த்து பேசி விட்டேன்; கட்டாயம் வருகிறேன் என்று சொல்லியுள்ளான் என்றான். ரமேஷ் மகிழ்ச்சியுடன் அவனது கையைக் குலுக்கி நாங்கள் கட்டாயம் வருகிறோம் எனக் கூற..

தாமோதரன் கிளம்புகிறேன் என்று சொல்ல

ரமேஷ் அவனை வலுக்கட்டாயமாய் சாப்பிட்டு விட்டுதான் செல்ல வேண்டும் என சொல்லி அவனை தன்னுடன் அமர வைத்து இருவரும் சாப்பிட்டனர்.

திருமண நாளன்று முகூர்த்த நேரம் காலையில் 10 மணி முதல் 10.45 வரை என்று பத்திரிகையில் பார்த்த ரமேஷ், ஒரு வேன் ஏற்பாடு செய்து அன்று காலை 6 மணிக்கு எல்லோரும் கிளம்பினர். பயணத்தின் போது இராகவ் எப்போதும் போல் கலகலப்பாக இருந்தது. அந்த பயணத்தையே மகிழ்ச்சிகரமாக்கியது எனலாம். வேன் கல்யாண மண்டபம் வாசலில் வந்து இறங்கிய போது மணி காலை சரியாக 8.45 என கடிகாரம் உமிழ்ந்தது. வாசலில் வந்து எல்லோரையும் வரவேற்ற தாமோதரன், அவர்களைத் தங்க வைக்க ஏற்பாடு செய்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றான். அவரவர்கள் அறைக்குள் நுழைந்ததும் ரமேஷ் மட்டும் தனியாக தாமோதரனிடம் பதினைந்து நிமிடம் பேசி விட்டு அவனை உனக்கு வேலையிருக்கும் கவனி என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

எல்லோரும் காலைச் சிற்றுண்டி அருந்தி விட்டு அரங்கத்துக்குள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தனர். சடங்குகள் ஆரம்பமாகின. மங்கல நாண் கட்டும் நேரம் வந்ததும் எல்லோரும் பரபரப்பாக இருக்கையில் மேடைக்கு இராகவ் மாமனார் மற்றும் அவன் மனைவி கல்யாணி வந்தனர். இராகவ் மாமனார் மைக்கை கையில் எடுத்து தனது மகள் கல்யாணி மணமகளுக்கு தாமோதரன் தங்கையாக தாலி முடிவாள் என்றார். ரமேஷும் எனது மாப்பிள்ளை இராகவ் இருவரும் தாலியெடுத்துக் கொடுப்பார்கள் என்றும் கூறி இருவரையும் மேடைக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். இராகவ் உண்மையிலேயே மிகவும் ஆனந்தமாகி மேடைக்கு வந்து ரமேஷுடன் சேர்ந்து தாலியை எடுத்துக் கொடுத்து விட்டு கல்யாணியை ஓரக் கண்ணால் பார்க்க கல்யாணியும் ஜாடையால் மன்னிப்புக் கேட்டாள். இனிதாக திருமணம் நடந்ததும் இராகவ் மாமனார் மறுபடியும் மைக்கில் ரமேஷ் தன் வீட்டிற்கு வந்தது. இந்த ஏற்பாட்டைச் செய்தததையெல்லாம் கூறி ரமேஷுக்கு நன்றி தெரிவித்தார். பின் சாப்பாட்டிற்குப் பிறகு எல்லோரையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

கல்யாணி உடன் சில முக்கியமான சாமான்களை வேனில் ஏற்றினார்கள். எல்லோரும் வேனில் புறப்பட மறுபடியும் ரமேஷுக்கு நன்றி கூறினார் இராகவ் மாமனார். ஊருக்குள் ஒத்தையடிப் பாதையில் சென்ற வேன் மெயின் சாலையில் இருவழிப் பாதையில் நுழைந்ததும் டிரைவர் பெருமூச்சு விட்டது போல் கலங்கிய ஒரு மனதுடன் வந்த கல்யாணி. இப்போது இரு மனதுடன் செல்வதை எண்ணி மிகவும் ஆனந்தமாக ஒரு மூச்சு விட்டாள். இனிமேல் சகிப்புத் தன்மை குடும்ப மேன்மையே முக்கியமென கருதினாள் கல்யாணி. மேலும் கல்யாணிக்கு ரமேஷ் ஒரு குன்றின் மேல் இட்ட விளக்காகத் தோன்றினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *