செய்திகள்

‘‘குடிநீர், கழிவுநீரகற்று வரியை 31–ம் தேதிக்குள் செலுத்துங்கள்’’: குடிநீர் வாரியம் வேண்டுகோள்

சென்னை, மார்ச் 17–

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திற்கு நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரியினையும், குடிநீர் கட்டணங்களையும் மார்ச் மாதம் 31–ம் தேதிக்குள் செலுத்திட வேண்டுமென சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் மற்றும் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான 26.03.2023 அன்றும் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இயங்கும். நுகர்வோர்கள் இவ்வசதியினைப் பயன்படுத்தி மேல்வரி, இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்கிறது.

கிரெடிட், டெபிட் கார்டு

மேலும், நுகர்வோர்கள் தங்களது நிலுவைத் தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைத்தளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங், யுபிஐ (UPI) மூலமாகவும் மற்றும் வசூல் மையங்களில் உள்ள கியூ.ஆர். குறியீடு போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம். மேலும், பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில், காசோலை மற்றும் பணமாக வரி செலுத்தலாம்.

எனவே, நுகர்வோர்கள் இம்மாதம் 31–ந் தேதிக்குள் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னைக் குடிநீர் வாரியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *