கட்ச், டிச.1–
குஜராத் சட்டசபைக்கு இன்று முதல் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் 1 மணி நிலவரப்படி 34.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்டமாக தெற்கு குஜராத் மற்றும் கட்ச்–சவுராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய, 19 மாவட்டங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது. 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் நீண்ட கியூவில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஜாம்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது மனைவியும் பாஜக வேட்பாளருமான ரிவாபா ஜடேஜா இன்று ராஜ்கோட்டில் வாக்களித்தார்.
நண்பகல் 1 மணி நிலவரப்படி 34.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக காலை 11 மணி நிலவரப்படி 18.95 % வாக்குகள் பதிவாகி இருந்தது.
மக்கள் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை நடந்த தேர்தல்களில் பாஜக, காங்கிரசுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவியது. அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி இந்த முறை தீவிரமாகக் களமிறங்கி உள்ளதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.