செய்திகள் நாடும் நடப்பும்

கடமை உணர்வு, ஆளுமைத் திறன்: மறக்க முடியாத சரித்திரம் ராணி இரண்டாம் எலிசபெத்


ஆர்முத்துக்குமார்


பிரிட்டனின் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை நேரில் பங்கேற்று வழிநடத்திய ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் பால்மோரலில் காலமானார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ் புதிய அரசராக இருந்து 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் விளங்கி நாட்டை துக்க காலத்தில்இருந்து மீட்டு தொடர்ந்து வழிநடத்துவார்.

தமது மக்களுக்கும் அரியணைக்கும் தமது வாழ்வை அர்ப்பணிக்கும் உறுதியும் கடமை உணர்ச்சியும்தான் ராணி இரண்டாம் எலிசபெத்தின் நீண்ட நெடிய ஆளுகையின் அடையாளங்கள் ஆகும்.

பிரிட்டிஷ் செல்வாக்கு சரியும் நிலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு சமூகம் மாறிய சூழலில் முடியாட்சியின் தேவையே கேள்விக்குள்ளாகிப் போன நிலையில் தீவிரமாக மாறிவந்த உலகில் பலவற்றுக்கும் ஒரு மாறாத புள்ளியாக அவர் விளங்கினார்.

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளுக்காகக் காத்திருந்த மக்கள், அவரது மரணத்தைக் கேள்விப்பட்டதும் அழத் தொடங்கினர். அரண்மனையின் உச்சியில் இருந்த யூனியன் கொடி பிரிட்டன் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு அரைக்கம்பத்தில் இறக்கிப்பறக்கவிடப்பட்டது.

ராணி எலிசபெத் II அரச தலைவராக இருந்த காலம் போருக்குப் பிந்தைய சிக்கன நடவடிக்கையின்போது நடந்தது. பேரரசில் இருந்து காமன்வெல்த் ஆக நாடு மாற்றம் அடைந்தது; பனிப்போரின் நிறைவுக்காலம்; ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்தது மற்றும் வெளியேறிய காலம் அதில் அடங்கியது.

ராணியின் ஆளுகை, 1874 இல் பிறந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி 101 ஆண்டுகளுக்குப் பிறகு 1975 இல் பிறந்த லிஸ் டிரஸை இந்த வாரத்தில் புதிய பிரதமராக நியமிக்கும் வரை 15 பிரதமர்களைக் கண்டது.

தமது ஆட்சிக்காலம் முழுவதும் தமது பிரதமருடன் வாராந்திர சந்திப்புகளை அவர் நடத்தி வந்தார்.

ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர், லண்டனில் உள்ள மேஃபேரில் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி பிறந்தார்.

அவர் எதிர்காலத்தில் ராணியாவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை; எதிர்பார்க்கவே அது காலத்தின் கட்டயாமாகும்!

இருமுறை மணவிலக்கு பெற்ற அமெரிக்கரான வாலிஸ் சிம்ப்சனை மணந்துகொள்வதற்காக 1936ம் ஆண்டு டிசம்பரில் அரியணையை விட்டு விலகினார் எலிசபெத்தின் பெரியப்பா எட்டாம் எட்வர்ட் அரசர்.

இதையடுத்து எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஆனார். இதன் மூலம் அரியணை வாரிசு ஆனார் எலிசபெத். குடும்பத்துக்குள் லிலிபெட் என்று அழைக்கப்பட்ட எலிசபெத்துக்கு அப்போது வயது 10.

மூன்றாண்டு காலத்தில் ஜெர்மனியுடன் போரில் ஈடுபட்டது பிரிட்டன். போர்க் காலத்தில் இளவரசி எலிசபெத் மற்றும் அவரது இளைய சகோதரி இளவரசி மார்கரெட் ஆகிய இருவரையும் கனடாவுக்கு அனுப்பிவிடலாம் என்ற யோசனையை அவர்களது பெற்றோர் நிராகரித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பெரும்பாலான நேரத்தை விண்ட்சர் கோட்டையில் கழித்தனர்.

மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் இரண்டாவது மகனான யார்க் கோமகன் ஆல்பர்ட் மற்றும் அவரது மனைவி மற்றும் சீமாட்டியான எலிசபெத் போஸ் லயன் ஆகியோரின் முதல் குழந்தையாக லண்டனின் பெர்க்கலீ சதுக்கம் அருகில் உள்ள ஒரு வீட்டில் 1926ம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி வின்ட்சர் பிறந்தார்.

எலிசபெத்தும் 1930-இல் பிறந்த அவரது இளைய சகோதரி மார்கரெட் ரோஸும் வீட்டிலேயே கல்வி பயின்றனர். அன்பான குடும்பச் சூழலில் வளர்ந்தனர். தமது தந்தையுடனும் தாத்தாவான ஐந்தாம் ஜார்ஜுடனும் எலிசபெத் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

நிறைய குதிரைகளும், நாய்களும் வைத்துள்ள கிராமத்துச் சீமாட்டியாக வேண்டும் என்று தாம் விரும்புவதாக தமது குதிரையேற்ற பயிற்சியாளரிடம் தமது 6-ஆவது வயதில் கூறியுள்ளார் எலிசபெத்.

மிகச் சிறிய வயதில் இருந்தே சிறப்பான பொறுப்புணர்ச்சி உடையவராக இவர் விளங்கினார் என்று சொல்லப்படுகிறது. “ஒரு மழலையிடம் கிடந்த ஆச்சரியப்படத்தக்க ஆளுகைத்திறன்” என்று பிற்காலத்தில் பிரிட்டன் பிரதமராக ஆன வின்ஸ்டன் சர்ச்சில் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

1936-ஆம் ஆண்டு மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இறந்தபோது டேவிட் என்று அறியப்பட்ட அவரது மூத்த மகன் எட்டாம் எட்வர்ட் மன்னர் ஆனார்.

எனினும் இரண்டு முறை மணவிலக்கு பெற்ற அமெரிக்கரான வாலிஸ் சிம்ப்சன் என்பவரை அவர் தமது மனைவியாகத் தேர்ந்தெடுத்தது மத அடிப்படையிலும் அரசியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்த ஆண்டின் இறுதியில் அவர் மணிமுடியைத் துறந்தார்.

இதையடுத்து யார்க் கோமகன் தயக்கத்தோடு ஆறாம் ஜார்ஜ் மன்னரானார். அவரது முடிசூட்டும் விழாவில் எலிசபெத் பெற்ற அனுபவம், காலம் அவருக்கு எதை வழங்கக் காத்திருந்ததோ அதன் சுவையில் கொஞ்சம் அவருக்கு வழங்கியது.

ஐரோப்பாவில் தீவிரமாகி வந்த பதற்றங்களின் பின்னணியில் புதிய அரசர், அவரது மனைவியான எலிசபெத் ராணியோடு இணைந்து முடியரசின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க ஆயத்தமானார். இந்த முன்னுதாரணத்தை அவர்களது மூத்த மகள் கவனிக்கத் தவறவில்லை.

1939-ஆம் ஆண்டு அரசர்-ராணியோடு டார்ட்மௌத்தில் உள்ள ராயல் கடற்படைக் கல்லூரிக்குச் சென்றார் 13 வயது இளவரசி. அவருக்கும் அவரது தங்கை மார்க்கரெட்டுக்கும் அவர்களது உறவினரும் கிரீஸ் இளவரசருமான பிலிப் பாதுகாவலராக வந்தார்.

பிலிப் மீது எலிசபெத்துக்கு அப்போதுதான் முதல்முறையாக ஈர்ப்பு ஏற்பட்டது. தமது கடற்படைப் பணியின் விடுமுறைகளில் இருக்கும்போதெல்லாம் இளவரசர் பிலிப் தமது அரச குடும்ப உறவினர்களை சந்தித்தார். 1944 வாக்கில், தமக்கு 18 வயது ஆனபோது பிலிப் மீது தெளிவாகவே காதல் வயப்பட்டிருந்தார் எலிசபெத்.

மொழிகள் மீது ஆளுமைத்திறன் மிக்கவராக விளங்கிய எலிசபெத் ராணி அரசியலமைப்பு சட்ட வரலாறு குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

எலிசபெத் தமது சம வயது பெண்களோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக ‘ஃபர்ஸ்ட் பக்கிங்ஹாம் பேலஸ்’ என்ற பெயரில் சிறப்பு சாரணியர் அணி ஒன்று உருவாக்கப்பட்டது.

போர் முடிவடைந்த நேரம், துணை பிராந்திய படையில் சேர்ந்த இளவரசி ஒரு லாரியை ஓட்டவும் பழுது பார்க்கவும் கற்றுக்கொண்டார்.

போருக்குப் பிறகு, இளவரசர் பிலிப்பை மணம் முடிக்க விரும்பிய அவரது ஆசைக்கு குறுக்கே பல தடங்கல்கள் நிலவின.

தமது நம்பிக்கைக்குரிய ஒரு மகளை இழக்க அரசர் தயங்கினார். தமது வெளிநாட்டு பூர்விகத்தை ஏற்காத அரச அமைப்பின் சம்பிரதாயத்தை வென்றாக வேண்டிய நிலை பிலிப்புக்கு ஏற்பட்டது.

ஆனால் கடைசியில் இந்த ஜோடியின் விருப்பமே வென்றது. 20 நவம்பர், 1947 அன்று ‘வெஸ்ட்மின்ஸ்டர் அபே’யில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

போருக்குப் பிறகு களை இழந்திருந்த லண்டன் நகருக்கு இந்த விழா வண்ணம் சூட்டியது. அதன் பிறகு பிலிப் ‘எடின்பரோ கோமகன்’ ஆனார்

. ஆனால் கடற்படை அதிகாரியாக தொடர்ந்தார். சிறிது காலம் அவருக்கு மால்டாவில் பணி அளிக்கப்பட்டதால் ஒப்பீட்டளவில் சாதாரண வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தது.

அவர்களது முதல் மகன் சார்லஸ் 1948 ல் பிறந்தார். அதைத் தொடர்ந்து 1950 ல் ஆனி என்ற மகள் பிறந்தாள்.

உலகப் போர் கால கட்டத்தில் கடும் உளைச்சலுக்கு ஆளான மன்னருக்கு வாழ்நாள் முழுவதும் அவர் கடைப்பிடித்த தீவிர புகைப்பழக்கம், தீராத நுரையீரல் புற்றுநோய் பாதிப்பாக வந்தது.

கென்யாவில் ஒரு வேட்டை பூங்கா விடுதியில் தங்கியிருந்தபோது அரசரின் இறப்புச் செய்தியை எலிசபெத் கேள்விப்பட்டார். பிறகு உடனடியாக லண்டனுக்கு புதிய ராணியாக திரும்பிய தருணத்தை அவர் பின்பொரு சமயம் நினைவுகூர்ந்தார்.

“ஒரு வகையில், எனக்கு பயிற்சி இல்லை. மிக இளமையிலேயே என் தந்தை இறந்துவிட்டார். எனவே, திடீரென பொறுப்பேற்றுக் கொண்டு ஆனமட்டும் சிறப்பாகப் பணியாற்றும்படி ஆனது” என்று அவர் குறிப்பிட்டார்.

1953 ஜூனில் நடந்த எலிசபெத்தின் முடிசூட்டு விழா, பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் எதிர்ப்பையும் மீறி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பல லட்சக்கணக்கானவர்கள் தொலைக்காட்சிப் பெட்டி முன்பு கூடி இரண்டாம் எலிசபெத் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றதை கண்டனர்.

விமர்சகர்கள் அந்த முடிசூட்டு விழாவை புதிய எலிசபெத் யுகத்தின் உதயமாகப் பார்த்தனர்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வருவதை இரண்டாம் உலகப் போர் விரைவுபடுத்தியது. புதிய ராணி 1953-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளில் நீண்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியா உள்ளிட்ட பல பகுதிகள் ஏற்கெனவே விடுதலை அடைந்திருந்தன.

ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் ஆட்சியில் இருக்கும் போது சென்ற முதல் பிரிட்டிஷ் ராணி ஆனார் எலிசபெத்.

புதிதாக உருவாகி வந்த ஐரோப்பிய பொருளாதார சமூகத்துக்கு புதிதாக உருவான காமன்வெல்த் எதிரணியாகத் திகழ முடியும் என்று பல அரசியல்வாதிகள் நினைத்தனர். ஓரளவுக்கு பிரிட்டிஷ் கொள்கை என்பது கண்டத்தை விட்டு வெளியே போனது.

சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கிக் கொள்ள எகிப்து முயன்றது. அந்த அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு பிரிட்டிஷ் படைகளை அனுப்பும் முடிவு, தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் படைகளைப் பின்வாங்கியதில் முடிந்தது. இதனால், பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டனி ஈடன் பதவி விலகும் நிலையும் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் சிக்கினார் ராணி. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு கன்சர்வேட்டிவ் கட்சியிடம் ஏற்பாடு ஏதுமில்லை. எனவே தொடர் கலந்தாய்வுக்கு பிறகு ஹரால்டு மேக்மிலனுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ராணி.

மேலதிக பிரிட்டிஷ்” தன்மையுடன் இருப்பதாகவும், “மேல் வகுப்பு” தன்மையுடன் இருப்பதாகவும், தயாரிக்கப்பட்ட உரை இல்லாமல் அவரால் ஓர் எளிய உரையை கூட ஆற்ற முடியவில்லை என்றும் ஒரு பத்திரிகை கட்டுரையில் லார்டு ஆல்ட்ரிங்கம் குறிப்பிட்டிருந்தார்.

பிரிட்டிஷ் சமூகமும், முடியாட்சி தொடர்பில் அதன் அணுகுமுறையும் வேகமாக மாறிவருவதையும் பழைய உறுதிப்பாடுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதையும் இந்த கட்டுரையே சாட்சி.

அரசவைக்குப் புதிதாக வருகிறவர்களை வரவேற்கும் நடைமுறை ஒழிக்கப்பட்டது; ‘முடியரசு’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது படிப்படியாக மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக ‘அரச குடும்பம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

1963-ஆம் ஆண்டு ஹரால்டு மேக்மிலன் பிரதமர் பதவியில் இருந்து விலகியபோது ராணியை மீண்டுமொரு முறை அரசியல் சிக்கல் சூழ்ந்தது. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான முறை ஒன்றை கன்சர்வேட்டிவ் கட்சி உருவாக்காமல் இருந்ததால் மேக்மிலனின் ஆலோசனையையே பெற்று அவரது பதவிக்கு ஏர்ல் ஆஃப் ஹோமை நியமித்தார் ராணி.

அரசமைப்புச் சட்டரீதியில் சரியாக நடந்துகொள்வது மற்றும் சமகால அரசாங்கத்திடம் இருந்து முடியரசை மேலும் பிரித்துவைப்பது ஆகியவையே எலிசபெத் ஆட்சியின் முத்திரையாக இருந்தது. 1977-இல் எலிசபெத் அரியணை ஏறியதன் வெள்ளிவிழாவை ஒட்டி பேரரசு முழுதும் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டங்கள், தெருக் கொண்டாட்டங்கள் ஆகியவை உண்மையான உற்சாகத்தோடு நடந்தன.

ஒவ்வோர் ஆண்டும் ராணியின் பொதுக் கடமைகள் தொடர்ந்தன. 1991-ஆம் ஆண்டின் வளைகுடாப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கு சென்ற அவர் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். இதன்மூலம் அமெரிக்க காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் பேசிய முதல் பிரிட்டிஷ் அரசர்/ராணியாகவும் அவர் ஆனார்.

முடியரசின் எதிர்காலம் குறித்து திரும்பத் திரும்ப நடந்த விவாதங்கள் மறுபுறமும் இருந்தபோதும் பொன்விழா நாளின் மாலையில் ஒரு மில்லியன் மக்கள் பக்கிங்ஹாம் அரண்மனை எதிரே உள்ள ‘தி மால்’ என்ற ராஜவீதியில் ஒன்று கூடினர்.

2006-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமது 80-ஆவது பிறந்த நாளின்போது எலிசபெத் சம்பிரதாயமற்ற ஒரு நடை சென்றபோது வின்ட்சர் தெரு ஓரங்களில் ஆயிரக்கணக்கான நலம் விரும்பிகள் கூடி நின்றனர்.

ராணியும் இளவரசர் பிலிப்பும் 2007-ஆம் ஆண்டு தங்கள் திருமண வாழ்வின் 60-ஆவது ஆண்டினை கொண்டாடினர்.

அந்த ஆண்டு மே மாதம் ஐரிஷ் குடியரசுக்குச் சென்றார் ராணி. பிரிட்டிஷ் அரசர்/ராணி ஒருவர் ஐரிஷ் குடியரசுக்கு அரசுமுறைப் பயணம் செல்வது அதுவே முதல் முறை. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.

அங்கு நிகழ்த்திய தமது உரையை ஐரிஷ் மொழியில் தொடங்கிய எலிசபெத் பொறுமை மற்றும் நல்லிணக்கம் பேணவேண்டும் என்று வலியுறுத்தினார்.

2014 செப்டம்பரில் நடந்த ஸ்காட்லாந்து விடுதலைக்கான கருத்து வாக்கெடுப்பு ராணிக்கு ஒரு சோதனைக் காலம். 1977-இல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அவர் ஐக்கிய ராஜ்ஜியத்துக்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

தமது முப்பாட்டி விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்தின் நீளத்தை 2015 செப்டம்பர் 9 அன்று எலிசபெத்தின் ஆட்சிக் காலம் விஞ்சியது. பிரிட்டிஷ் வரலாற்றிலேயே நீண்டகாலம் அரசாட்சி செய்தவராக அந்த தேதியில் ஆனார் எலிசபெத்.

அவரது அரசாட்சிக் காலம் தொடங்கியபோது இருந்த அளவுக்கு அந்த அரசாட்சி முடிந்த போது முடியரசு வலிமையாக இல்லாமல் போயிருக்கலாம்.

ஆனால் பிரிட்டிஷ் மக்களின் இதயத்தில் அன்புக்கும் மரியாதைக்கும் உரியதாக அது தொடர்ந்து நீடித்திட வழிகள் கண்டார்.

21 வயதாக இருந்தபோது பதவியேற்ற நாளில் சேவை ஆற்றுவதில் தனக்கிருந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் ராணி.

இன்று தேவாலய மணிகள் ஒலிக்கும். மரியாதை நிமித்தமாதமாக துப்பாக்கிகள் முழங்கிட, தேசமே நினைவுகளை நெஞ்சில் ஓட விட்டபடி கண்ணீருடன் அவருக்கு ராஜ மரியாதையோடு வழி அனுப்பி வைக்கிறது அவர்களின் இதயத்தில் இடம் பிடித்த ராணிக்கு.


Leave a Reply

Your email address will not be published.