செய்திகள்

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் சரத் கமல் முன்னேற்றம்

டோக்கியோ, ஜூலை 26–

டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் சரத் கமல் போர்ச்சுக்கல் வீரர் தியாகோ அபோலோனியாவை எதிர்கொண்டார். இதில் 2-–11, 11-–8, 11–-5, 9-–11, 11–-6, 11-–9 என்ற கணக்கில் சரத் கமல் வென்றார். இதன்மூலம் 4–-2 என்ற செட் கணக்கில் வென்ற தமிழக வீரர் சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் ஆண்கள் அணிக்கான எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி கஜகஸ்தான் ஆண்கள் அணியை எதிர்கொண்டது. இந்திய ஆண்கள் அணியில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ், தரூன்தீப் ராய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். போட்டி தொடங்கியது முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் இந்திய ஆண்கள் அணி 6-–2 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் ஆண்கள் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆண்கள் அணி வில்வித்தை போட்டியில் காலிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று காலை நடந்த காலிறுதியில் இந்தியா பலம் வாய்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. தென்கொரிய வீரர்களுக்கு இணையாக இந்திய வீரர்களால் அம்புகளை தொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 54-–59, இரண்டாவது செட்டை 57–-59, மூன்றாவது செட்டை 54-–56 என இழந்த இந்திய அணி செட் பாயிண்டில் 0-–6 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியது.

பேட்மிண்டன் இரட்டையர்

பேட்மிண்டன் இரட்டையர் குரூப் ஸ்டேஜ் ஆண்கள் இரட்டையருக்கான ‘ஏ’ பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்- – சிராக் ஷெட்டி ஜோடி நம்பர் ஒன் ஜோடியான இந்தோனேசியாவின் ஜிடியோன்- சுகமுல்ஜோ ஜோடியை எதிர்கொண்டது. நம்பர் ஒன் ஜோடிக்கு எதிராக இந்திய ஜோடியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இதனால் 13-–21, 12-–21 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது.

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி போர்ச்சுக்கலின் ஃபு யு-வை எதிர்கொண்டார். போர்ச்சுக்கல் வீராங்கனையின் வேகத்திற்கு சுதிர்தா முகர்ஜியால் ஈடுகொடுக்க முடியவில்லை. தொடர்ந்து நான்கு கேம்-களையும் 3-–11, 3-–11, 5-–11, 5–-11 (0-–4) என இழந்து வெளியேறினார்.

பவானி தேவி தோல்வி

வாள்வீச்சுக்கான முதல் சுற்றுப் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர். இதில் பவானி தேவி 15–-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் சப்ரே முதல் சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நடியாவை எதிர்கொண்டார். இதில் பவானி தேவி 15–-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் பிரான்ஸை சேர்ந்த மனோனுடன் போட்டியிட்டதில், 7-15 என்ற கணக்ககில் தோல்வியடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *