செய்திகள்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு 10 நாட்களில் ரூ.183 கோடி இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை, ஏப்.16–

இயற்கை பேரிடரால் மகசூல் பாதித்த ஒரு லட்சம் விவசாயிகளுக்கு கடந்த 10 நாட்களில் ரூ.183 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-–

வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றத்தினால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையினை விரைவில் பெற்றுத்தர தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 2020–-ம் ஆண்டில் நிகழ்ந்த நிவர், புரெவி புயல், 2021 ஜனவரி மாதத்தில் எதிர்பாராது பெய்த அதிக கனமழையினால் தமிழகத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன.

2020–2021–ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் விரைவில் இழப்பீட்டுத் தொகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காப்பீட்டு கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்குத் தொகையாக மொத்தம் ரூ.1,940 கோடி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,118 கோடி பங்குத் தொகையில், இதுவரை, ரூ.660 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2020-–2021–ஆம் ஆண்டு ராபி பருவத்தில் காப்பீடு செய்யப்பட்ட நவரை, கோடை நெல், உளுந்து, பச்சைப் பயறு, நெல் தரிசில் உளுந்து, நிலக்கடலை, எள், பருத்தி, மக்காச்சோளம், சோளம், சிவப்பு மிளகாய் போன்ற பயிர்களில் மகசூல் இழப்பினால் பாதிப்படைந்த, தகுதி வாய்ந்த ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 947 விவசாயிகளுக்கு கடந்த 10 நாட்களில் மட்டும், 183 கோடியே 13 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் கடலூர், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் நவரை, கோடை நெல், உளுந்து, பச்சை பயறு, நெல் தரிசில் உளுந்து, நிலக்கடலை, எள், பருத்தி, மக்காச்சோளம், சோளம் மற்றும் சிவப்பு மிளகாய் பயிர்களுக்கும், கரூர், திருப்பூர், அரியலூர் திண்டுக்கல், காஞ்சீபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் உளுந்து பயிருக்கும் ஆக மொத்தம் 183 கோடியே 13 லட்சம் ரூபாய் காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 947 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் நடவடிக்கையினால், 2020–2021ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளில், இதுவரை, (14ந் தேதி வரை) 2 ஆயிரத்து 285 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை, தகுதி வாய்ந்த 10 லட்சத்து 89 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.