செய்திகள்

எதிர்க்கட்சிகள் சதி திட்டத்தை மக்கள் துணையுடன் முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி உறுதி

Spread the love

சேலம், பிப். 25–

வேண்டுமென்றே திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த போடும் எதிர்க்கட்சிகளின் சதி திட்டத்தை மக்கள் துணையுடன் முறியடிப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலத்தில் நடந்த ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்று தருவோம் என்று சொல்லி கொள்ளும் மு.க. ஸ்டாலின் 13 ஆண்டு காலம் மத்தியிலே மாநிலத்திலே ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது அகதிகளாக இருந்த இலங்கை தமிழர்களுக்கு நீங்கள் ஏன் குடியுரிமை பெற்றுத் தரவில்லை. இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். எத்தனை பொய் வேண்டுமானாலும் பேசுவார்கள். பொய் பேசுவதற்கென்று நோபல் பரிசு கொடுப்பது என்றால் அது ஸ்டாலினுக்கு தான் பொருந்தும். உண்மையே வராது. சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஒரு தவறான பிரச்சாரத்தை தமிழ்நாடு முழுவதும் பரப்பி, இன்றைக்கு தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து கொண்டு இருக்கின்றது.

அரசியல் ஆதாயம் தேட முயற்சி

இதிலே ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்கி, அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றார். இன்றைக்கு விழிப்போடு மக்கள் இருக்க வேண்டும், சிறுபான்மையின மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். அண்ணா தி.மு.க. அரசு உங்களுக்கு அரணாக இருந்து பாதுகாக்கும் என்பதை உறுதிப்பட தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் என்.ஆர்.சி. எடுக்கப்படவில்லை. சி.ஏ.ஏ. எடுக்கப்பட வில்லை, ஆகவே நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தோற்றுவித்த இயக்கம், புரட்சித் தலைவி அம்மா கட்டிக் காத்த இயக்கம் அந்த வழியிலே வந்த நாங்கள் உண்மையை சொல்வோம், சொல்வதை செய்வோம். எத்தகைய சூழ்நிலையிலும் நாங்கள் மாற மாட்டோம். அதுதான் அண்ணா தி.மு.க. கொள்கை என்பதை பல காலக்கட்டத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். உங்களைப் போல் சொல்வது ஒன்று, நடப்பது வேறு அல்ல. சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பது அண்ணா தி.மு.க. அரசு.

சதி திட்டத்தை முறியடிப்போம்

வேண்டுமென்றே திட்டமிட்டு நாட்டிலே குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் போடும் சதித்திட்டத்தை மக்கள் துணையோடு முறியடிப்போம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மை மக்களுக்காக ஏராளமான திட்டங்களை அம்மா வழங்கி இருக்கின்றார். என்னுடைய அரசு சிறுபான்மை மக்களுக்கு நலன் செய்யும் அரசாக பல்வேறு திட்டங்களை அறிவித்து கொண்டு இருக்கின்றோம். ஆகவே, சிறுபான்மை மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எங்களுக்கு வரும் பிரச்சனையாக கருதி அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதை இந்த நேரத்திலே உறுதிப்பட கூறுகின்றேன்.

இன்றைக்கு தமிழகம் அமைதிப் பூங்கா இருக்கின்றது, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது. இந்தியாவிலே எத்தனை மாநிலங்கள் இருந்தாலும், இன்றைக்கு சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் முதல் மாநிலம் என்று இந்தியா டுடே என்ற ஆங்கில நாளேடு தொடர்ந்து இரண்டு முறை விருதை கொடுத்திருக்கின்றது. அப்படி அமைதியாக வாழுகின்ற மாநிலத்தில் வேண்டுமென்ற திட்டமிட்டு, தூண்டுதலின் பேரிலே அவதூறான செய்திகளைப் பரப்பி, ஒரு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்றார்கள். எந்த வகையிலும், அம்மாவுடைய அரசு அதற்கு துணை நிற்காது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, தமிழகத்திலே வாழ்கின்ற ஒவ்வொரு தமிழரும், சிறுபான்மை மக்களாக இருந்தாலும், வேறு மக்களாக இருந்தாலும் சரி, அத்தனை பேரையும் பாதுகாக்கின்ற அரசு அம்மாவுடைய அரசு.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *