சிறுகதை

உருண்டோடி வந்த பென்சில்! | சின்னஞ்சிறுகோபு

அது ஒரு நவம்பர் மாத பகல் நேரம். மழை வருவதுபோல இருட்டிக் கொண்டிருந்தது.

நானும் என் மனைவியும் பஸ்க்காக மயிலாடுதுறை பஸ்நிலையத்தில் காத்திருந்தோம். செம்பனார்கோவிலுக்கு அருகேயுள்ள முடிகண்டநல்லூர் கிராமத்திற்கு போகலாமென்று புறப்பட்டோம். புறப்படும்போது வானம் நன்றாகதான் இருந்தது. இப்போதுதான் வானத்தில் மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. நல்லவேளை நாங்கள் குடை எடுத்து வந்திருந்தோம். அப்போதுதான் நாங்கள் செல்லவேண்டிய பொறையார் பஸ் வருவது தெரிந்தது.

பஸ் வந்து நின்றபோது ஒரே கூட்டமாக சேர்ந்து விட்டது. எனக்கும் 65 வயதாகி விட்டது. கிட்டத்திட்ட என் மனைவிக்கும் அதே வயதுதான். அந்த கூட்டத்தில் இடித்துப் பிடித்து போய் இடம்பிடித்து உட்கார முடியாது என்று தெரிந்தது. அடுத்த பஸ்க்கு போகலாமென்றால் அது இன்னும் அதிக நேரமாகும்.

அப்போது பஸ்ஸிலிருந்து இறங்குவதற்காக எழுந்த ஒரு இளம் பெண்ணிடம், ஜன்னல் வழியாக இரண்டு சீட் போடும்படி கையிலிருந்த ஒரு பையையும் கர்ச்சிப்பையும் கொடுக்க நீட்டினேன்.

நல்லவேளை, அந்தப் பெண்ணும் அதை வாங்கி, பஸ்ஸின் படிக்கு அருகேயிருந்த இருந்த சீட்டுகளில் அதை வைத்துவிட்டு இறங்கியது. எனக்கு அது அப்பாடாயென்று கொஞ்சம் நிம்மதியைத் தந்தது.

பஸ் ஒரேக் கூட்டம்தான். ஆனாலும் பஸ்ஸின் படிக்கு அருகேயிருந்த இரண்டு சீட்டுகளில் இடம் கிடைத்து உட்கார முடிந்ததால் எனக்கு சிரமம் எதுவும் தோன்றவில்லை.

பஸ் தருமபுரம் தாண்டுவதற்குள்ளேயே நல்ல மழை வந்து விட்டது. ஜன்னல் அருகே அமர்ந்திருந்த நான் சாரலில் நனைய ஆரம்பித்து விட்டேன். என் மனைவிதான் என்னை கொஞ்சம் பரிதாபமாக பார்த்தாள். எனக்கு எப்போதுமே மழை ரொம்ப பிடிக்கும் என்பதால், நான் அதைப்பற்றி பெரிதாக கவலைக் கொள்ளவில்லை.

அதோடு பஸ்ஸிலும் ஆங்காங்கே மழை ஒழுகிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே மூங்கில்தோட்டம் தாண்டி, மன்னம்பந்தல் வருவதற்குள்ளேயே மழை நின்று விட்டது. மழைக் காலத்தில் இப்படி திடீர் திடீரென்று மழை வந்து வந்து நிற்பது அந்த காலத்திலிருந்தே சகஜமான ஒன்றுதான்.

மன்னம்பந்தல் வந்தபோதுதான் கவனித்தேன். பஸ்ஸின் முன்புறம் கம்பியை பிடித்தபடி நின்றுக் கொண்டிருந்த சில பெண்களில், ஒரு பெண்ணை இதற்கு முன் எங்கோ பார்த்தமாதிரி இருந்தது.

அந்தப் பெண்ணுக்கும் கிட்டத்திட்ட என் வயதுதான் இருக்கும். சிவந்த நிறத்துடன், கொஞ்சம் பருத்த உடலுடன்,குண்டு கன்னங்களுடன் இருந்த அந்தப் பெண், ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஹைஸ்கூலில் என்னுடன் பத்தாம் வகுப்பில் படித்த மாலதி தான் என்பது என் ஞாபகத்திற்கு பளிச்சென்று வந்தது. ஆமாம், எனக்கு இதெல்லாம் பளிச்சென்று ஞாபகத்திற்கு வரும்!

இந்த வயதான காலத்திலும் என் மனைவியை விட அவள் அழகாக இருப்பதாக தோன்றியது. அவளும் என் மனைவியை போல ‘ஹேர்டை’ அடித்திருந்தாள்.

நான் மாலதியை பார்ப்பதை அருகேயிருந்த என் மனைவியும் பார்த்தாள். அதனால் சுதாரித்துக் கொண்ட நான், ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பதைப் போல அவ்வப்போது பாவனை செய்துக்கொண்டே மாலதியையும் பார்த்தேன்.

செம்பனார்கோவிலில் பஸ் நின்றபோது மாலதி பஸ்ஸிலிருந்து இறங்க ஆயத்தமானாள். பஸ்ஸின் படிகளுக்கு அருகே என் சீட் இருந்ததால், என் விரலுக்கு எட்டும் தூரத்தில்தான் அவள் இறங்கினாள். எனக்கு லேசாக விரலால் அவளைத் தொடவேண்டும் போலிருந்தது. எனக்கு பக்கத்தில் என் மனைவி இருப்பது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்ததால், “மாலதி” என்றேன். மிக மிக மெல்லிய குரலில்!

அந்த மெல்லிய குரல் அவளுக்கு மட்டுமா கேட்டது, என் மனைவிக்கும்தான்! அதைக்கேட்டு மாலதி ஒரு வினாடி திடுக்கிட்டு லேசாக என்னைப் பார்த்தபடி கொஞ்சம் குழப்பமாக பஸ்ஸிலிருந்து இறங்கினாள். ஐம்பது வருடத்திற்கு முன்பு என்னுடன் படித்த அதே மாலதிதான் இவள் என்பது எனக்கு தெளிவாகி விட்டது. உடனே பஸ்ஸும் கிளம்பி விட்டது.

பக்கத்திலிருந்த என் மனைவி என்னைப் பார்த்து, “மாலதி என்று கூப்பிட்டிங்களே, அது யாரு?” என்றாள்.

நான் சற்று தடுமாறியபடி, “என்னோடு ஸ்கூலில் படித்த மாலதி போலிருந்தது. அதான் அவளாயென்று சொல்லிப் பார்த்தேன்!” என்றேன்.

“அதான் அந்த நாய் திரும்பி உங்களைப் பார்த்துட்டு போச்சே! பின்னாலேயே போகவேண்டியது தானே!” என்று என் மனைவி என்னிடம் கடுகடுத்தாள்.

நான் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்தேன்.

என் நினைவுகள் மட்டும் ……

ஐம்பது வருடங்களுக்கு முந்திய என் பள்ளிக்கூட காலத்திற்கு பறந்துச் சென்றது!

ஐம்பது வருடங்களுக்கு முன்பு நான் ஹைஸ்கூலில் படித்த காலத்திலெல்லாம் பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்பெல்லாம் கிடையாது. அப்போதெல்லாம் ‘எஸ் எஸ் எல் சி’ என்ற பதினோராம் வகுப்புதான். அப்போது அதுதான் அரசால் நடத்தப்படும் பரீட்சை. எஸ் எஸ் எல் சி யில் பாஸ் செய்தால்தான் காலேஜ் போகமுடியும்!

அப்போதைய கல்வி முறையில் பத்து, பதினோராம் வகுப்புகளில் விருப்பப் பாடம் என்று ஒருமுறை இருந்தது. இதில் பயாலஜி, கெமிஸ்ட்ரி, மேத்ஸ் என்றெல்லாம் சில பாடப்பிரிவுகள் இருக்கும். அதில் நமக்கு வேண்டிய ஒரு பாடப்பிரிவை விருப்பப் பாடமாக எடுத்துக் கொள்ளலாம்!

நான் பயாலஜி பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்திருந்தேன். பயாலஜி பாடப்பிரிவில் ரிக்கார்ட் நோட்டுகள் உண்டு. அதில் படங்கள் வரைந்து பாகங்கள் குறித்து, விளக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். அதனால் பொதுவாக கொஞ்சம் ஓவிய ஆர்வமுள்ளவர்கள் பயாலஜி பாடத்தை விருப்பப் பாடமாக எடுப்பார்கள்.

எங்களது பயாலஜி வகுப்பில் உத்தேசமாக ஒரு நாற்பது மாணவ மாணவிகள் இருந்தனர். ஒருபக்கம் மாணவர்கள் இன்னொரு பக்கம் மாணவியர்கள் என்று இரண்டு பகுதியாக உட்கார்ந்திருப்பார்கள்.

நான் பயாலஜி வகுப்பில் ஒரு பெஞ்சின் ஆரம்ப முனையில் உட்கார்ந்திருந்தேன். எனக்கு அடுத்து பிரகாசம், அடுத்து பன்னீர் செல்வம் என்று பலர் இருந்தனர்.

அதுபோல எதிர்பக்கம் எனக்கு பக்கத்து பெஞ்ச் முனையில் மாலதி என்ற மாணவி இருந்தாள். அடுத்தடுத்து முன்னும் பின்னும் பல பெஞ்சுகளில் இன்னும் பல மாணவிகள் இருந்தனர்.

அப்போதெல்லாம் ஹைஸ்கூலில் மாணவர்கள் மாணவிகளுடன் சர்வ சாதாரணமாக பேசிக்கொள்ள முடியாது. பொதுவாக அவர்கள் நாலைந்து பேர், நாலைந்து பேர்களாக வருவார்கள் ; போவார்கள். தனியே ஒரு மாணவியை ஒரு மாணவன் மடக்கி பேச முயல்வதெல்லாம் கடினம். யாராவது பார்த்தால் தப்பாக பேசுவார்கள் என்று பயப்படுவார்கள். ஆனாலும் இருபாலினத்தவர்களுக்கும் அந்த வயதுக்கே உரிய ஈர்ப்பும் கொஞ்சம் இருக்கதான் செய்யும்.

வகுப்பில் எனக்கும் எனக்கு எதிர்பக்கத்தில் இருந்த மாலதிக்கும் ஒரு ஐந்து அடி தூர இடைவெளிதான் இருக்கும்.

ஆரம்பத்தில் சாதாரணமாக பார்த்துக்கொண்டிருந்த அந்த மாலதியும் நானும் கொஞ்சம் கொஞ்சமாக லேசாக ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வால் ஈர்க்கப் பட்டோம்!

என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவள் புரிந்த அந்த லேசான புன்னகைதான் அதற்கு அடிப்படை காரணமாக இருந்திருக்க முடியும்.

எனக்கு பக்கத்திலிருந்த என் நண்பன் பிரகாசமும், “மாலதி உன்னைதான் பாக்குறா, அவ உன் ஆளு” என்றெல்லாம் என்னை அவ்வப்போது தூண்டிக் கொண்டேயிருந்தான்.

ஒருநாள் மாலதியை பார்த்து லேசாக கையை அசைத்தபோது, அவளும் கையை அசைத்தாள். எனக்கு ஒரே மகிழ்ச்சி.

இந்த பழக்கம் நாளடைவில் ஆசிரியர் கரும்பலகையில் சாக்பீஸால் எழுத, படம் வரைய திரும்பும் போதெல்லாம் நானும் அவளும் சைகையால் பேச ஆரம்பித்தோம். அது ஒரு புரிந்தும் புரியாத ஒரு மொழி!

அதற்குள் அந்த வகுப்புக்குள் எங்கள் இருவரையும் பற்றி, லேசாக ஒரு கிசு கிசு பரவ ஆரம்பித்திருந்தது.

அன்று எங்கள் பயாலஜி ஆசிரியர் கரும்பலகையில் ஒரு செம்பருத்தி பூவின் படத்தை வரைந்து அதன் பாகங்களை குறித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து நாங்கள் ரிக்கார்ட் நோட்டில் வரைய வேண்டும்.

நான் பென்சிலையெடுத்து நோட்டில் வரைய ஆரம்பித்த அடுத்த வினாடியே, என் பென்சிலின் கூர் ‘மடக்’ கென்று முறிந்துப் போனது. பிரகாசத்தைப் பார்த்து பிளேடு அல்லது ஷார்பனர் இருக்கா என்று கேட்டேன். அவன் இல்லையென்று சொன்னான்.

பக்கத்தில் திரும்பி மாலதியை பார்த்தேன். அவள் ஒரு பென்சிலால் படத்தை வரைந்துக் கொண்டிருந்தாள். டெஸ்க்கில் அவளது திறந்திருந்த ஜாமெண்ட்ரி பாக்ஸில் ,ஒரு விரல் நீள இன்னொரு சின்ன பென்சிலும் இருப்பதை பார்த்தேன்!

ஆசிரியர் மிகவும் சிரத்தையாக கரும்பலகை பக்கம் திரும்பி சாக்பீஸால் படம் வரைந்துக் கொண்டிருந்தார். அவர் திரும்பினால்தான் எங்களைப் பார்க்க முடியும்.

நான் மாலதியை பார்த்து, “மாலதி…” என்று மெதுவாக மிக மிக மெதுவாக குரல் கொடுத்தேன்!

அவள் என் குரல் சத்தத்தை உணர்ந்து, என்னைப் பார்த்து திரும்பி, ‘என்ன’ என்று கையால் சைகை மூலம் கேட்டாள்.

நான் பென்சிலை எடுத்து அதன் முனையை காட்டி, முறிந்து விட்டதை கையால் உணர்த்தி, பென்சில் வேண்டுமென்று சைகையாலேயே கேட்டேன்!

அதைப் புரிந்துக்கொண்ட மாலதி,ஜாமெண்ட்ரி பாக்ஸிலிருந்த அந்த சின்ன பென்சிலை கையில் எடுத்தபடி தற்செயலாக கீழே குனிவது போல குனிந்தாள்.

அப்போது அந்த வகுப்பே திடீரென்று ஒரு அசாத்திய அமைதிக்கு உள்ளானதை நாங்கள் இருவருமே உணரவில்லை.

எனக்கு பக்கத்திலிருந்த என் நண்பன் பிரகாசம் மட்டும், ஏனோ என்னை லேசாக அப்போது இடித்தான்!

மாலதி கீழே குனிந்து அந்த பென்சிலை தரையோடு தரையாக வைத்து, என்னை நோக்கி உருட்டி விட்டாள்!

அந்த பென்சில் ‘கடகட’ வென்று என்னை நோக்கி உருண்டோடி வந்தது! நான் பென்சிலை கையில் எடுத்துக்கொண்டு நிமிர்ந்தபோதுதான், அந்த அசாத்திய அமைதியின் வித்தியாசத்தையும் அதன் காரணத்தையும் உணர்ந்தேன்!

ஒரு நிமிஷமாக அந்த ஆசிரியர் எங்கள் இருவரது சைகை பேச்சுக்களையும், பென்சிலை அவள் உருட்டி விட்டதையும் நான் அதை எடுத்ததையும் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அவர் மட்டுமா, அந்த வகுப்பிலிருந்த எல்லா மாணவ மாணவிகளும் திரும்பி எங்களையே பார்த்துக் கொண்டிருந்தது எங்களுக்கு அப்போதுதான் புரிந்தது.

நானும் மாலதியும் திடுக்கிட்டு எழுந்து நின்றோம்.

“என்ன இங்கே நீங்க படிக்க வந்திங்களா? இல்லே, தாயம் உருட்டி விளையாட வந்திங்களா?” என்று எங்களை திட்டிவிட்டு, என்னையும் அந்த மாலதியையும் பெஞ்சில் மீது ஏறி நிற்க சொல்லிவிட்டார்!

பொதுவாக மாணவிகளை அதுவும் மாணவ மாணவிகள் சேர்ந்து படிக்கும் வகுப்புகளில் பெஞ்சில் ஏறி நிற்கச்சொல்லி ஆசிரியர்கள் தண்டிப்பதில்லை.

அன்று ஏனோ கோபத்தில் அவர் அப்படி சொன்னபோது வேறு வழியில்லாமல் நாங்கள் இரண்டுபேரும் பெஞ்சின் மீது ஏறி நின்றோம்.

ஒரு ஐந்து நிமிடத்திலேயே அந்த ஆசிரியர் என்னை ஒரு முறைப்பு முறைத்து விட்டு, “பெஞ்சிலிருந்து இறங்கி தொலையுங்கள்” என்றார்.

எங்கள் இருவருக்குமே மிகவும் வெட்கமாக போய்விட்டது!

அடுத்தநாள் பார்க்கிறேன், அந்த வகுப்பில் மாலதி வேறு இடத்தில் உட்கார்ந்திருக்கிறாள். அவள் உட்காரும் இடத்தில் அந்த சிடுமூஞ்சி சியாமளா உட்கார்ந்திருந்தாள்!

அதன்பிறகு மாலதியின் அந்த பென்சில் மட்டும் என்னிடமே தங்கிவிட்டது. அந்த பென்சிலை மட்டும் இந்த சம்பவத்தின் நினைவாக பத்திரப்படுத்தியிருந்தேன். அது இன்னும் கூட என்னுடைய கிராமத்து வீட்டின் பரணில் ,ஒரு தகரப்பெட்டியில் பத்திரமாக இருக்கிறது!

” என்ன ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டே வர்றீங்க? இன்னும் பஸ்ஸிலிருந்து இறங்கிப்போன அந்த கழுதையை பற்றியே நினைச்சுக்கிட்டு வர்றிங்களா?” என்று என் மனைவி கேட்டபோதுதான் நான் திடுக்கிட்டு, இப்போதைய நிகழ்காலத்திற்கு வந்து,”அதெல்லாமில்லை!” என்றேன்.

அதற்குள் பஸ் எங்கள் கிராமத்து ஆலமரத்தடி பஸ் நிறுத்தத்திற்கு வந்து நின்றது. நானும் என் மனைவியும் இறங்கி எங்கள் கிராமத்து வீட்டை நோக்கி நடந்தோம். வீட்டுக்கு சென்றபிறகு ஒருநாள், ஐம்பது வருடத்திற்கு முன்பு என்னை நோக்கி உருண்டோடி வந்த அந்த பென்சிலை பரணிலிருந்து தேடியெடுத்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *