செய்திகள்

உடன் பயணிப்போருக்கு தொந்தரவாக செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை

இந்திய ரெயில்வே புதிய உத்தரவு

டெல்லி, செப். 19–

உடன் பயணிப்போருக்கு தொந்தரவு தரும் வகையில் நடந்து கொண்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ரெயில்வே புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய பயணிகள் சேவை செய்யும் அமைப்பாக இந்திய ரயில்வே உள்ளது. பயணிகளுக்கான சிறப்பான சேவைகளை வழங்க ரயில்வே நிர்வாகம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, இரவு நேர பயணத்தில் ஈடுபடும் பணிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு காணும் விதமாக புதிய உத்தரவுகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இரவு 10 மணிக்கு மேல் ரயில் பயணிகள் பெட்டிகளுக்குள் சத்தமாக போன் பேசுவது, செல்போனில் சத்தமாக பாடல் கேட்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. மேலும், இரவு விளக்கு வெளிச்சத்தை தவிர மற்ற விளக்குகள் மற்றும் செல்போன் வெளிச்சம் போன்றவற்றை பயன்படுத்தி சக பயணிகளின் தூக்கத்தை கெடுக்கக் கூடாது.

ரெயில்வேவின் புதிய உத்தரவு

இரவில் தூங்கும் நேரத்தில் சக பயணிகளுக்கு தொந்தரவு தரும் விதத்தில் எந்த செயல்களையும் பயணிகள் செய்யக் கூடாது. மீறி செயல்பட்டு அது தொடர்பான புகார் ரயில்வே நிர்வாகத்திற்கு வந்தால், அந்த புகாரின் அடிப்படையில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

அதேபோல், ரயில்வேயில் பணிபுரியும் சோதனை ஊழியர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், மின்சாதன பராமரிப்பாளர்கள், உணவு பிரிவு ஊழியர்கள், இன்னும் பிற சேவை மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் இரவில் சத்தமின்றி பயணிகளுக்கு தொந்தரவு தராமல் வேலை செய்வார்கள். அதேபோல், இரவு நேரங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு தேவையான சில உதவிகளை செய்ய ரயில்வே ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்.

இந்த விதிகளை அனைத்து மண்டலங்களும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ள ரயில்வே அமைச்சகம், பயணிகள் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *