போஸ்டர் செய்தி

‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டம் 10 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, ஜூலை 19–

காவல்துறையினருக்கு அண்ணா தி.மு.க ஆட்சி செய்து கொடுத்த நலத்திட்டங்கள், வசதிகளை சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் பட்டியலிட்டார்.

‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டம் 10 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் திட்டம் அரசின் பரிசீலனையில் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். சட்டசபையில் காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான மானிய கோரிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் தி.மு.க. சார்பில் உறுப்பினர் ஐ.பெரியசாமி பேசினார்.

அப்போது, அவர் தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினருக்கு செய்து கொடுக்கப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியிலும், தற்போதும் காவல்துறையினருக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள், வசதிகள் தொடர்பாக பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க. ஆட்சியிலே காவல்துறைக்கு என்னென்ன நன்மைகள் செய்தார்கள் என்பதை பட்டியலிட்டு காட்டினார்கள். அண்ணா தி.மு.க.வின் ஒப்பற்ற தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும், புரட்சித் தலைவி அம்மாவினுடைய காலத்திலும் காவலர்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதையும் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

1977 – 1987 வரைக்கும்

* 1980–ம் ஆண்டு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகம் துவக்கப்பட்டது.

* பின்னர் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1989–ல் அது நிறுத்தப்பட்டது. பின்பு 1991–ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா மீண்டும் தமிழக முதலமைச்சராக அரியணையில் அமர்ந்தவுடன், அது மீண்டும் துவக்கப்பட்டது.

* சிலை கடத்தல் பிரிவு 1983–ம் ஆண்டு துவக்கப்பட்டது.

* காவலர்களுக்கு மானிய விலையில் பொருட்கள் முதன்முறையாக வழங்கப்பட்டது அண்ணா தி.மு.க. ஆட்சியில் தான்.

1991–1996

* 1991–ம் ஆண்டு காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கென தனியாக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்தில் தான்.

* 13.4.1992 அன்று ‘அனைத்து மகளிர் காவல் நிலையம்’ துவக்கி வைக்கப்பட்டதும் அம்மாவுடைய ஆட்சிக் காலத்தின் தான்.

* 1993–ம் ஆண்டு சிறப்பு இலக்குப்படை” ஏற்படுத்தப்பட்டது.

* 1994–ம் ஆண்டு ‘கடலோர பாதுகாப்புக் குழுமம்’ ஏற்படுத்தப்பட்டது.

2001–2006

* ‘நெடுஞ்சாலை ரோந்து முறை’ அறிமுகப்படுத்தப்பட்டது.

2011–2018

* காவலர்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்ற அடிப்படையிலே, காவலர்கள் மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு உங்கள் சொந்த இல்லம் திட்டம், இன்றைக்கு புரட்சித் தலைவி அம்மாவின் கனவு திட்டம். அந்த திட்டத்திலே மேலக்கோட்டையூரில் என்ற கிராமத்திலே 7.60 ஏக்கரில் 2,673 வீடுகள் காவல்துறையினரின் குடும்பங்களுக்கு புரட்சித் தலைவி அம்மா வழங்கி இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல், அதை விரிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக கீழக்கோட்டையூரில் 52.40 ஏக்கரில் அங்கேயும் காவலர்களுக்கு சொந்த இல்லம் திட்டத்தின் மூலமாக வீடு கட்டுவதற்காக அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்து, அதுமட்டுமல்லாமல் இந்த சொந்த இல்ல திட்டத்தை மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என்று இன்றைக்கு அரசு திட்டமிட்டு இருக்கின்றது. அது ஏற்கனவே புரட்சித் தலைவி அம்மா இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்த திட்டம் விரிவுபடுத்துவதற்கும் அரசினுடைய பரிசீலனையில் இருந்து கொண்டு இருக்கிறது என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன்.

* காவல் பணியாளர்களின் ஆரோக்கியத்தை பேணி காக்க வருடம் ஒருமுறை முழுஉடற் மருத்துவ பரிசேதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் ரூ.3 லட்சமாக உயர்வு

* முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவி திட்டத்தின் கீழ் இயற்கை எய்தும் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை ரூபாய் 1 லட்சத்திருந்து 3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

* காவலர்கள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் – ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை துவக்கப்பட்டது.

* ஒன்றுபட்ட உள்சுற்று தொலைபேசி பயன்படுத்துவோர் குழு திட்டத்தின் கீழ் சுமார் 1.20 லட்சம் தமிழ்நாடு காவல் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒன்றுபட்ட உள்சுற்று தொலைபேசி எண்கள் வழங்கப் பட்டுள்ளது.

* காவலர்களுக்கு பணிச்சுமை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை போக்க பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் நிறுவனத்தினருடன் இணைந்து உளவியல் ரீதியான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. இதற்கு 10 கோடி ரூபாய் அரசு வழங்கப்பட்டுள்ளது. காவலர்கள் பணிநிமித்தமாக இருக்கின்றபோது, மன உளைச்சலுக்கு ஆளாகின்ற போது, நிம்ஹான்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக அவர்களுக்கு அந்த மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காகவும் அவர்களது குடும்பத்தில் இருக்கின்றவர்களும் மனஅழுத்தத்திலிந்து விடுபடுவதற்காகவும் இந்த திட்டம் அறிமுகப்படுப்பட்டுள்ளது.

* பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் கூடுதல் இயக்குநர் தலைமையில் பிரத்யேகமாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வீரதீர செயலில் உயிரிழந்தால்…

* அதுமட்டுமல்லாமல், பணியின் போது வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிரிழந்தால் அவர்களுக்கு 10 லட்சமும், அதேபோல, இரண்டு கண்கள், இரண்டு கால்கள், இரண்டு கைகள் இழந்தால் அதற்கு 4 லட்சம் ரூபாயும், இன்று அம்மாவுடைய அரசு தொடர்ந்து காவலர்களுக்காக ஏராளமான திட்டங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

* அதேபோல, பணி உயர்வு பற்றி இங்கே குறிப்பிட்டார்கள், தமிழ்நாட்டில் தற்போது 150 பணிநிலைப் பதவிகள் இந்திய காவல் பணியில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 69 பதவிகள் காவல் துறை இயக்குநர், கூடுதல் காவல் துறை இயக்குநர், காவல் துறைத் தலைவர் மற்றும் காவல் துறை துணைத் தலைவர் நிலையிலான பதவிகளாகும். இப்பணியிடங்களில், இந்திய காவல் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 81 பணியிடங்கள் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான பதவிகளாகும். இவற்றில் 47 பணியிடங்களில் இந்திய காவல் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 32 பணியிடங்களில் (10 மாவட்டங்கள், 14 துணை ஆணையர்கள் மற்றும் 8 சிறப்பு பிரிவுகள்) தமிழ்நாடு காவல் பணியில் நேரடியாக துணைக் காவல் கண்காணிப்பாளர்களாக, நேரடி காவல் உதவி ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் (31 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 1 உதவி ஆய்வாளர்) தற்போது பதவி உயர்வில் காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

40% நியமனம்

மேலும் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணிநிலை பதவிகளில் இந்திய காவல் பணி அல்லாத அதிகாரிகளை நியமிக்க விதிகளில் இடமுள்ளது. மேலும், 32 அதிகாரிகளின் நியமனம் அந்தந்த பதவிகளின் பணிநிலைகளை கருத்தில் கொண்டும், நிர்வாகக் காரணங்களாலும் நியமிக்கப்பட்டவை. தற்பொழுது பணிநிலைப் பதவிகளில் இந்திய காவல் பணி அதிகாரிகள் 58 விழுக்காடும், இந்திய காவல் பணி அல்லாத அதிகாரிகள் 40 விழுக்காடும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பணிநிலைப் பதவிகளில் நிர்வாகக் காரணங்களுக்காக இந்திய காவல் பணியில் அல்லாத அதிகாரிகளை நியமிப்பது நடைமுறையில் இருந்துள்ளது. குறிப்பாக, 2006 முதல் 2011 முடிய உள்ள காலத்தில் 48 பணிநிலைப் பதவிகளில்

(21 மாவட்டங்கள், 17 துணை ஆணையர்கள் மற்றும் 10 சிறப்பு பிரிவுகள்) இந்திய காவல் பணியில் அல்லாத அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, வழக்குக்கு சென்றால்கூட, தற்காலிகமாக பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பிட்ட காலத்திலே, குறிப்பிட்ட ஆண்டு நிறைவடைந்தவுடன், அனைத்து மட்டங்களில் இருக்கின்ற காவல்துறை அதிகாரிகளுக்கும் பணி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *