செய்திகள்

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்: அமெரிக்க பத்திரிகையாளர் பலி

கீவ், மார்ச் 14–

உக்ரைன் மீது மூன்றாவது வாராமாக ரஷ்யப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இர்பினில் அமெரிக்க வீடியோ பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாவ்ட் கொல்லப்பட்டதாக உக்ரைனிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உக்ரைனிய போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் பகுதியான இர்பினில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு செய்தி, வீடியோ படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாவ்ட் (வயது 51) கொல்லப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பத்திரிகையாளர்கள் குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உறுதிப்படுத்திய பத்திரிகை

தற்போது அவரது உடலை போர் நடைபெறும் பகுதிக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளனர். ப்ரென்ட் ரெனாவ்ட் உயிரிழந்ததை உறுதி செய்துள்ள ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை, ஒரு விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளரை இழந்து வாடுகிறோம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைனில் நடந்து வரும் ரஷ்யப் படைகளின் தாக்குதல்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து செய்தி, படம் மற்றும் வீடியோ எடுக்கும் பத்திரிக்கையாளர்கள் பத்திரமாக தங்களது பணியில் ஈடுபட வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக தஞ்சம் தேடி செல்லும் மக்களை படம், வீடியோ எடுக்கும் பணியில் ப்ரென்ட் ரெனாவ்ட் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.