போஸ்டர் செய்தி

இரட்டை இலை சின்­னத்­துக்­கு தடை விதிக்க முடி­யாது: சுப்ரீம் கோர்ட் உத்­த­ர­வு

புதுடெல்லி, மார்ச் 15–

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அண்ணா தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்து டெல்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் டி.டி.வி. தினகரன் தரப்பினர் தனி அணியாகவும் பிரிந்து, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி வந்தனர்.

இருதரப்பும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்த நிலையில் நீண்ட காலமாக விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 23 அன்று தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி அறிவித்தது. இதனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் தினகரனும் சசிகலாவும் தனித்தனியாக மேல் முறையீடு செய்தனர்.இந்த நிலையில் கடந்த மாதம் 28–ந்தேதி டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அண்ணா தி.மு.க.வுக்கு ஒதுக்கி தீர்ப்பளித்தது. அத்துடன் டி.டி.வி. தினகரன், சசிகலா தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்­மு­றை­யீ­டு

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்­த­து.

அதேபோன்று கடந்த மாதம் 28-ம் தேதி டெல்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். இடைக்காலமாக இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். தேர்தலைச் சந்திக்கும் விதமாக அமமுகவுக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருந்­த­து.

மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அவசரம் கருதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் மனுதாரர்கள் சார்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து மார்ச் 15ம் தேதி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

நிரா­க­ரிப்­பு

இதன்படி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. அதேவேளையில், குக்கர் சின்னம் தனக்கு ஒதுக்க வேண்டும் என்ற டி.டி.வி. தினகரனின் கோரிக்கை தொடர்பாக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *