செய்திகள்

இந்தியாவுக்கு மேலும் 4 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வருகை: மொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்வு

டெல்லி, ஏப். 22–

பிரான்சில் இருந்து மேலும் 4 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு, பிரான்ஸ் அரசுடன் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது.

ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில், அதில் 5 விமானங்கள் 2020-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தன. அவை முறைப்படி இந்திய விமானப் படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி இணைக்கப்பட்டன.

2-வது கட்டத்தில் 3 ரபேல் போர் விமானங்களும், 3-வது கட்டத்தில் 3 போர் விமானங்களும் 4-வது கட்டத்தில் 3 ரபேல் போர் விமானங்களும், வந்துள்ளன. இந்நிலையில் 5-வது கட்டமாக மேலும் 4 ரபேல் போர் விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தன.

நடுவானில் எரிபொருள்

இந்திய விமானப்படை தளபதி பதாரியா, பிரான்சில் இருந்து ரஃபேல் விமானங்களை கொடியசைத்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். பிரான்சில் இருந்து இடை நில்லாமல் இந்தியாவுக்கு பயணித்த இந்த விமானங்களுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை விமானங்கள் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது. தொடர்ந்து இடை நில்லாமல் பறந்த விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தன. இதன் மூலம் இந்தியாவில், ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர இந்த மாதம் மேலும் 5 ரபேல் போர் விமானங்களும் இந்தியா வருகின்றன. இம்மாதம் வந்து சேரும் 9 விமானங்களில் 5 விமானங்கள் மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமரா விமானப் படைத்தளத்தில் நிறுத்தப்படும். இந்த ரபேல் போர் விமானம் அதிநவீனத்துடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *