செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியாவிலேயே முன்மாதிரி நிருவாக அமைப்பு: முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடலுக்கு சபாஷ்!

600 ஊராட்சிகளில் ‘ஊரகச் செயலகம்’ அமைக்கும் திட்டம்


ஆர். முத்துக்குமார்


இந்தியாவின் உயிரோட்டம் ஊரகப் பகுதிகளில்தான் உள்ளது என்றார் மகாத்மா காந்தியடிகள். இது மிகவும் ஆழமான பொருள்தரக் கூடிய உண்மையான சொற்றொடர் என்றே கூற வேண்டும். தேசிய ஊராட்சிகள் நாளான நேற்று டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, ஊராட்சி அமைப்புகள் இந்திய மக்களாட்சியின் தூண்கள் என்றும் அதன் பலத்தில் புதிய இந்தியாவின் செழுமை உள்ளது என்றும் தன்னம்பிக்கை மிக்க இந்தியாவை உருவாக்குவதில் நமது ஊராட்சிகளை வலுப்படுத்த உறுதி ஏற்போம் என்றார்.

அதேநாளில் ஜம்மு காஷ்மீரில் பேசியமோடி, நாட்டின் வளர்ச்சியில் ஊராட்சிகளின் பங்கு முதன்மையானது. ஊராட்சி நிர்வாகம், ஜனநாயகத்தின் அடித்தட்டு மக்களின் பங்களிப்புக்கு மிகவும் முக்கியமானது. ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்கான ஒவ்வொரு திட்டத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவதில் ஊராட்சி நிர்வாகத்தின் பங்கு ஆழமாக இருக்க வேண்டும். நாட்டு வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் ஊராட்சி ஒரு முக்கிய இணைப்பாக இருக்கும் என்றும் அதுவே இந்திய விடுதலையின் பொற்காலம் என்றும் கூறினார்.

அந்த வகையில் ஊரகப் பகுதிகளை உயிரோட்டமாக வைக்க வேண்டும் என்றால், நிருவாக முறை அங்கிருந்து தொடங்க வேண்டும். தலைமைச் செயலகத்தில் இருந்து எந்த ஒரு ஊரகப் பகுதியின் தேவைகளையும் நிறைவேற்றி வைப்பது உடனடியாக முடியக்கூடிய செயலல்ல. ஊராட்சிகளில் வாழும் வேளாண் குடிமக்களாலோ, அல்லது ஊரகப் பகுதிகளுக்கே உரிய சிறுசிறு தொழில், வணிகம் செய்யும் மக்களாலோ தங்களுக்கு தேவையான அரசு உதவிகளையோ, அரசு சான்றிதழ்களையோ பெற, நகரத்தை நோக்கி படை எடுக்க வேண்டி உள்ளது. அது அத்தனை எளிதாக நடக்கக்கூடியதாகவும் இருப்பதில்லை. அதனால், பல நாட்கள் அலைய வேண்டியும், அவர்களுக்கு வரும் சிறு வருவாயை, இதற்காக பெருமளவு செலவு செய்வது என்பதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

திருப்பிப்போடும் திட்டம்

இதை எல்லாம் கருத்தில் கொண்டே, எதிலும் முன்னோடும் பிள்ளையாக இருக்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நாட்டிலேயே முதன் முறையாக நிருவாக அமைப்பை திருப்பிப்போடும் விதமாக, ஒரு மாநிலத்துக்கு தலைமைச் செயலகம் என்பது எப்படி முதன்மையானதோ, அதேபோல ஒவ்வொரு ஊராட்சிக்கும் கணினி வசதியுடன் கூடிய ஒரு ‘ஊரகச் செயலகம்’ முதன்மையான தேவை என்பதை கருத்தில் கொண்டு, 4 நாட்களுக்கு முன்னரே மிகவும் தொலைநோக்கோடு இத்திட்டத்தை சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதிலும் இந்த ஆண்டிலேயே முதற்கட்டமான 600 ஊராட்சிகளில் ‘ஊரகச் செயலகம்’ அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது இன்னும் சில ஆண்டுகளில் ஊரகப்பகுதிகளை மீட்டெடுக்கும் புதுமையான, அருமையான திட்டம் என்பதை மறுக்க முடியாது.

அதுதவிர, ஊராட்சிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக, கிராம சபைக் கூட்டங்களை ஆண்டுக்கு 6 முறை கூட்டுவது என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். ஏறத்தாழ 2 மாதத்துக்கு ஒரு முறை மக்களின் குறைகளை இந்த கிராம சபைகளில் வெளிப்படுத்தவும், அவர்களுடைய துயர் துடைக்கவும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்படும் என்பது நீதியை விரைவாக்கும் ஒரு சிறந்த பணி என்றே சொல்ல வேண்டும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஒரு சிறந்த ஊராட்சித் தலைவரை தேர்ந்தெடுத்து உத்தமர் காந்தி விருதுடன் ரூ.10 லட்சம் பரிசு வழங்கும் திட்டமும் ஊராட்சி தலைவர்களிடையே, சிறந்த நிருவாகத்தை கொடுக்க, போட்டியை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

திட்டத்தின் நோக்கம்

இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிக்கும் போதே, உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற நோக்கத்துடன், மக்களாட்சியின் மாண்பினை ஊரக அளவில் உறுதி செய்திட ஏதுவாக, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை போன்ற முக்கிய துறைகளின்மூலம் செயல்படுத்தப்படக்கூடிய அரசின் பல்வேறு திட்டங்களை, ஊராட்சி அளவில் ஒருங்கிணைத்து செவ்வனே நிறைவேற்றும் வகையில், இந்த ஊரகச் செயலகங்களில் ஊராட்சித் தலைவருக்கான அறை, அனைத்துத் துறை கூட்ட அரங்கம், கிராம நிர்வாக அலுவலருக்கான அறை, ஊராட்சிச் செயலருக்கான அறை, இணைய வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும் என்று அறிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் இருந்து திட்டங்களை வகுத்து, அதற்கான அரசாணைகளை அரசு பிறப்பித்தாலும், அவற்றினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய பணியை ஆற்றிக் கொண்டிருப்பது உள்ளாட்சி அமைப்புகள்தான். அந்தக் காரணத்திற்காகத்தான், நாங்கள் ஊரக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்று கூறி, இந்த ஊரகச் செயலகங்கள் அமைக்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக அறிவித்துள்ளார் முதலமைச்சர். வரவேற்று பேசிய பாரதீய ஜனதா உள்ளிட்ட சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் கூட, நிருவாக முறையையே புரட்டிப்போடும் புரட்சிகரமான திட்டம் என்று பாராட்டி உள்ளனர் என்பதையும் கவனிக்க வேண்டும்.

திராவிட மாடல்

திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளின் அடிநாதமான கொள்கையே “மாநிலத்தில் சுயாட்சி; மையத்தில் கூட்டாட்சி” என்பதுதான். இதன் பொருள், அதிகாரத்தை பரவலாக்குவதும் எளிமையாக்குவதும், பொதுமக்களிடம் நெருக்கமாக இருக்கக் கூடியவர்களிடம் அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதும்தான். அதனை சொல்லளவில் இல்லாமல் செயல் அளவில் செயல்படுத்திக் காட்டும் திட்டமே முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த ஊரகச் செயலகத் திட்டம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமின்றி, நிதி அமைச்சரும் இதனை அடிக்கடி வலியுறுத்தி கூறுவதை அண்மை காலமாக நாம் கவனித்து வருகிறோம். இந்திய ஒன்றிய அரசுக்கு மக்கள் கிடையாது. மாநிலங்களுக்குத்தான் மக்கள் இருக்கிறார்கள். அந்த மாநில மக்களுடைய தேவைகளை மட்டுமின்றி, சேவைகளையும் கூட மாநில அரசுகளால்தான் உடனடியாக நிறைவேற்றித் தர முடியும் என்பதே இந்த மாநில உரிமைக்குரல். இது உலகம் முழுவதும் இப்போது நடைமுறையில் உள்ளதுதான்.

வீடுகள் சேர்ந்து தெருக்களாகவும் தெருக்கள் இணைந்து சிற்றூராகவும் சிற்றூர்கள் சேர்ந்து ஒரு ஊராட்சியாகவும் நிர்வாக அமைப்பை பெருகிறது. அந்த ஊராட்சிகள் இணைந்து ஒரு ஊராட்சி ஒன்றியம், பல ஊராட்சி ஒன்றியங்கள் இணைந்து ஒரு மாவட்டம், பல மாவட்டங்கள் இணைந்து ஒரு மாநிலம், அந்த மாநிலத்தின் நிர்வாகத்துக்கு ஒரு தலைமை செயலகம் என்ற படி நிலை அமைப்பு உள்ளது.

அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்ற திமுகவின் அடிப்படை கொள்கையை செயல்படுத்தும் விதமாகவே, இந்த படிநிலையின் முதல்கட்டத்திலேயே நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் விதமாக, முதலமைச்சர் ஸ்டாலின் ‘ஊரகச் செயலகத்தை’ அமைத்துள்ளது மிகப்பெரிய புரட்சித் திட்டம் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. ஊரகப்பகுதி நகரப்பகுதி என்று இல்லாமல், அனைவருக்கும் அனைத்தும் சமமாக சமத்துவத்துமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கமே முதலமைச்சர் ஸ்டாலின் கூறும் திராவிட மாடல் என்றால், அதனை பாராட்டி வரவேற்பதுடன் இந்தியாவின் மற்ற மாநிலங்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்று நிச்சயமாக வலியுறுத்தலாம்.


Leave a Reply

Your email address will not be published.