புதிதாக 963 பேருக்கு பாதிப்பு
டெல்லி, மார்ச் 21–
இந்தியாவில் 10 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் 14 மாவட்டங்களில் 10 சதத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக இந்திய குடும்ப நலத்துறை தெரிவித்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 963 பேருக்கு கொரானா பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6559 ஆக உயர்ந்துள்ளது.
4 பேர் பலி
கேரளா, கர்நாடகாவில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில் ராஜஸ்தானில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 808 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 59,617ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 12 முதல் 18 ந்தேதி வரை உள்ள நாட்களில், இந்தியாவில் உள்ள 34 மாவட்டங்களில், 5 சதம் முதல் 10 % வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மார்ச் 8 முதல் 14 ந்தேதி வரை, 9 மாவட்டங்களில் 10 சதமாக கொரோனா பாதிப்பு உள்ளது. டெல்லியில் உள்ள 3 மாவட்டங்களில், தெற்கு டெல்லியில் 7.49 சதவீதமும், வடகிழக்கு டெல்லியில் 5.7 சதமும், கிழக்கு டெல்லியில் 5.34 சதமும் கொரோனா பாதிப்பு உள்ளது.