அகமதாபாத், மார்ச் 10–
சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. 3வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
4வது டெஸ்ட் போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த போட்டிய இரு நாட்டு பிரதமர்களும் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. எனினும், அஸ்வின் வீசியது 15.3 வது பெரிய ஷாட் ஆட முயன்ற டிராவிஸ் ஹெட் ஜடேஜா வசம் கேட்ச் கொடுத்து 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த மார்னஸ் லாபுசாக்னே 3 ரன்னிலும், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 38 ரன்னிலும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் சரிவு இருந்தாலும், மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்தார். தொடர்ந்து வந்த கேமரூன் கிரீன் கவாஜா உடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இந்த ஜோடியில் கிரீன் களமிறங்கியது முதலே அதிரடியாக மட்டையை சுழற்றினார். பவுண்டரிகளை ஓட விட்டு இந்திய வீரர்களை திணறடித்தார். அவருடன் ஈடுகொடுத்து பந்துகளை விரட்டியடித்த கவாஜா பவுண்டரியை விரட்டி சதம் விளாசினார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்துள்ளது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஷமி 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
2ம் நாள் ஆட்டம்: ஆஸ்திரேலியா பேட்டிங்
இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், உஸ்மான் கவாஜா – கேமரூன் கிரீன் ஜோடி நேற்று விட்ட இடத்தில் இருந்து தொடங்கியுள்ளனர். கிரீன் 114 ரன்கள் எடுத்தநிலையில் அஸ்வீன் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் களம் இறங்கிய அலெக்ஸ் கேரி அதே ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேற மிட்செல் ஸ்டாக் களம் இறங்கி கவாஜாவுடன் இணைந்தார். 133வது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா வீரர்களின் விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.