செய்திகள்

2022–ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் சேர்ப்பு

துபாய், நவ.19–-

2022ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல் முறையாக பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் வருகிற 2022-ம் ஆண்டு ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை 22வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகிறது. 4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டியில் 1998-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மட்டும் இணைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடந்த போட்டிகளில் கிரிக்கெட் நீக்கப்பட்டது. 2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டில் அறிமுகமாகும் பெண்கள் 20 ஓவர் போட்டிக்கான தகுதி சுற்று குறித்த விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.), காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனமும் இணைந்து நேற்று வெளியிட்டன.

இதன்படி 8 அணிகள் பங்கேற்கும் காமவெல்த் விளையாட்டு கிரிக்கெட் போட்டிக்கு, போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் 1-ந் தேதியில் 20 ஓவர் போட்டி தரவரிசையில் முன்னணியில் இருக்கும் மற்ற 6 அணிகள் நேரடியாக தகுதி பெறும். இந்த போட்டி எட்ஜ்பஸ்டனில் நடைபெறும். எஞ்சிய ஒரு அணிக்கான தகுதி சுற்று போட்டி நடத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *