நாடும் நடப்பும்

பெருகி வரும் வெள்ளப்பெருக்குகள் ஏன்?

புவி வெப்பமயம் சூடு பிடித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது சமீபத்து உத்தராகாண்டில் பனிப்பாறை வெடித்து உருகி ஆறாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளப்பெருக்கு காட்சிகள்.

தற்போது குளிர் சீதோஷண சூழ்நிலை இருக்க பனிப்பாறை உருகி ஓட காரணம் என்ன?

உத்தராகண்டில் பனிப்பாறை உருகியதால் ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 205 பேர் மாயமாகியுள்ளனர். இதில் 100–-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் 20 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் ஜோஷிமத் என்ற பகுதியில் பெரிய அளவிலான பனிப்பாறை திடீரென்று சரிந்து விழுந்தது. இதனால் அங்குள்ள அலக் நந்தா, தவுலி கங்கா ஆகிய ஆறுகளில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சமோலி மாவட்டத்தில் உள்ள ரைனி கிராமத்தில் தவுலி கங்கா நதிக்கரையில் இருந்த பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும் இந்த வெள்ளப் பெருக்கினால் ஜோஷிமத் அருகே ரைனி கிராமத்தில் ரிஷிகங்கா மின்திட்டத்துக்காக பணியில் ஈடுபட்டிருந்த 160 தொழிலாளர்கள் வரை அடித்துச் செல்லப்பட்டனர் என்று உத்தராகண்ட் மாநிலத் தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மாயமான அனைவருமே ரிஷிகங்கா மின் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 5 குழுவினர் உத்தராகண்ட் மாநிலத்துக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இதற்கு முன்பு உத்தராகண்டின் கேதார்நாத் பகுதியில் 2013–-ம் ஆண்டு ஜூன் மாதம் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்பிறகு தற்போது தான் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புவி வெப்பமயம் காரணமாக அதீத மழை பொழிவும் கடும் குளிரும் கடும் கோடை வெயிலும் தென்படும் என்று பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் நம்மை எச்சரித்து வந்தாலும் அதை யாரும் பெரியதாக எடுத்துக் கொள்ளாததால் இன்று அதன் தாக்கத்தால் பல அப்பாவி உயிர்களை பறிகொடுத்து விட்டுத் தவிக்கிறோம்.

சமீபமாக தொழில்நுட்ப வல்லமை கொண்டு புவி வெப்பமயத்தின் காரணமாக கடல் மட்ட உயர்வு, பனி துருவப் பகுதிகளில் உருகுதல் துல்லியமாகவே கணக்கிட்டு வருகிறோம்.

ஆனால் சென்னையில் சுனாமி, புரட்டிப்போட்ட திடீர் ராட்சத மழை, உத்தராகாண்டில் மேகங்கள் வெடிக்கப் பெய்த ராட்சத மழை, கேரளாவிலும் பேய் மழை, மும்பையை மூழ்கடிக்கும் மழை என பல்வேறு இன்னல்களை கட்டவிழ்த்து வருவதில் இயற்கையை மாசு படுத்தி விட்டதன் பின்விளைவுகள் என்பதை உணர்ந்து விட்டோம்.

ஆனால் நமது அருகாமை எதிரி நாடுகள் இப்படிப்பட்ட சதி செயல்களை கட்டவிழ்த்து வருகிறார்களா? என்ற அச்சக் கேள்வியும் எழத்தான் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *