போஸ்டர் செய்தி

உலகம் முழுவதும் ‘கொரோனா’ வைரஸ் பரவுகிறது: சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை

Spread the love

ஜெனீவா,பிப்.25–

‘கோவிட் – 19′ எனப் பெயரிடப்பட்டுள்ள ‘கொரோனா வைரஸ்’ உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் தற்போது, தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கியுள்ளது. சீனாவுக்கு வெளியே 30 நாடுகளில், 1,200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில் உலகச் சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் தெரிவித்துள்ளதாவது:–

சீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியுள்ளது கவலையளிக்கிறது. வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகளும் கைகொடுப்பதாகத் தெரியவில்லை.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், உயிரிழப்பவர்களின் சதவிகிதம் ஒன்றிலிருந்து தற்போது இரண்டாக அதிகரித்துள்ளது. இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது மிகவும் கவலைக்குரியது.

அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டவருக்கு, சீனாவுடன் நேரடியாக எந்தத் தொடர்பு இல்லை. சீனாவிற்கு அவர் பயணம் மேற்கொண்டதற்கான ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது புரியவில்லை. இதனால், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் பலனளிக்காத நிலையில், உலகச் சுகாதார அமைப்பின் எச்சரிக்கை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *