திருவள்ளூர், டிச. 4–
புழல் ஏரியிலிருந்து இன்று முதல் உபரி நீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி புழல் ஏரி உபரி நீர் கால்வாய் கரையோர மக்களுக்கு மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளுர் மாவட்டம், புழல் ஏரியில் இருந்து இன்று மாலை 3 மணி முதல் முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும், ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வௌியேற்றம் அதிகரிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.
எனவே, புழல் எரியில் இருந்து வௌியேறும் தண்ணீரானது சுற்றி உள்ள கிராமங்களான நாரவாரிக்குப்பம் வடகரை, கிராண்டலைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் வழியாக செல்லும். எனவே, அக்கரையோரம், தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறையினர் பாதுகாப்பு பணியில் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று தண்ணீர் 2வது முறையாக திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.