செய்திகள்

சுற்றுலா வேன் மீது பஸ் மோதி விபத்து: அரியானா பெண்கள் 3 பேர் பலி

Spread the love

மதுரை, பிப். 8–

மதுரை அருகே இன்று அதிகாலை வேன் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் அரியானாவிலிருந்து சுற்றுலா வந்த 3 பெண்கள் பலியானார்கள்.

அரியானா மாநிலம் சார்ஜர் மாவட்டம் பகதூர்காட் பகுதியை சேர்ந்த 41 பேர் சுற்றுலா செல்வதற்காக டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் இன்று அதிகாலை 2 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அங்கிருந்து இரண்டு சுற்றுலா வேன்களில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் சென்றனர். திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் நேசநேரி விலக்கு அருகே வேன் வந்து கொண்டிருந்த போது, மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் நவநீதகிருஷ்ணன் வேனை சாலையின் ஓரத்தில் நிறுத்த முயன்றார். அப்போது கோயம்புத்தூரிலிருந்து களக்காடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் சுற்றுலா வேன் மீது மோதியில். இதில் நிலை தடுமாறிய வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த சுற்றுலாப் பயணிகளில் சாயர் (60) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் திருமங்கலம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ரத்னி தேவி (62), சையத் ரத்னி (63) ஆகியோர் வழியிலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *