செய்திகள்

சென்னையில் மரக்கிளைகளை அகற்ற கடிதம், இ–மெயில், தொலைபேசியில் தெரிவிக்கலாம்

Spread the love

சென்னை, ஜன.2–

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கிளைகள் அகற்றுவது தொடர்பான புகார்களை மண்டல அலுவலகங்களில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ, கடிதங்கள் மூலமாகவோ அல்லது 24 மணி நேரமும் இயங்கும் 1913 என்ற புகார் எண்ணிலும் தெரிவிக்கலாம் என கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலையோரங்களில் சுமார் 1,61,000 மரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மரங்கள் மிக உயரமாக வளர்ந்து படர்ந்த கிளைகளுடன் காணப்படுகிறது.

எனவே, பொதுமக்களின் உடைமைக்கும், உயிருக்கும் சேதத்தை விளைவிக்கக்கூடிய ஆபத்தான வகையில் உள்ள மரக்கிளைகள், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தாழ்வான கிளைகள் மற்றும் சாலையோர மின்விளக்குகளை மறைக்கும் கிளைகள் ஆகியவற்றை அகற்றி, இம்மரங்களின் ஆயுட்காலத்தை மேலும் நீட்டித்து பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் பராமரிப்பது அவசியமாகும்.

ஹைட்ராலிக் யந்திரங்கள்

இந்த மரக்கிளைகளை அகற்றும் பணிகள் 11 பூங்கா மேற்பார்வையாளர்கள் மற்றும் 358 பணியாளர்கள் மூலம் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் மிகுந்த காலதாமதம் ஆனது, இதை தவிர்க்கும் பொருட்டு மரக்கிளைகளை அகற்றும் பணிகளை விரைந்து செய்ய எந்திரப் பொறியியல் துறை சார்பில் கடந்த ஆண்டு மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீட்டில் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 6 ஹைட்ராலிக் மூலம் இயங்கும் மரக்கிளைகளை அகற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரால் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

மண்டலங்களில் பணிபுரியும் பூங்கா மேற்பார்வையாளர்கள் மற்றும் பணிப்பார்வையாளர்கள் மூலம் அவ்வப்போது களஆய்வு செய்து, இந்த எந்திரங்களைக் கொண்டு மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

54 ஆயிரம் மரக்கிளைகள் அகற்றம்

மேலும் இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு மையத்தின் மூலமாக பெறப்படும் புகார்களின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டில் சுமார் 54 ஆயிரம் எண்ணிக்கையிலான மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டது. இதனால் பருவமழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மரங்கள் வேரோடு கீழே சாய்வது வெகுவாக குறைந்துள்ளது.

மேலும், மரக்கிளைகள் அகற்றுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள் அந்தந்தப் பகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்களில் நேரிலோ அல்லது கீழ்கண்ட தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 24 மணி நேரமும் இயங்கும் 1913 என்ற புகார் எண்ணிலும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *