செய்திகள்

மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து நூலகத்தையும் வழங்கும் தமிழக அரசு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதம்

Spread the love

சென்னை, மார்ச் 21–

மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து நூலகத்தையும் தமிழக அரசு வழங்கி வருகிறது என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மானாமதுரை தொகுதி உறுப்பினர் எஸ்.நாகராஜன் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

மானாமதுரையில் உள்ள நூலகத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட அரசு முன்வருமா? என்றார்.

அதற்கு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளிக்கையில், மானாமதுரையில் உள்ள கிளை நூலகம் 1956ல் துவக்கப்பட்டு, அதன்பின்னர் 2008ல் முழு நேர கிளை நூலகமாக தரம் உயர்த்தப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வருகிறது. இந்த நூலக சொந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 1080 சதுர அடி ஆகும். இந்த சதுரஅடி முழுவதும் கட்டிடம் கட்டப்பட்டு தரைத்தளத்துடன் செயல்படுத்தப்பட்ட வருகிறது.

இந்த நூலகத்தில் நூல் இரவல் பிரிவு, குழந்தைகள் பிரிவு, குடிமைப்பணி பிரிவு, பத்திரிகை பிரிவு, கணினி பிரிவு ஆகியவை அடிப்படை வசதிகளுடன் செயல்பட்டு வரும் நிலையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கான அவசியம் எழவில்லை. ஆனாலும் அந்த நூலகத்திற்கு கூடுதல் வசதி செய்து தர வேண்டும் என உறுப்பினர் கூறியிருக்கிறார். இடம் இருக்கும்பட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் 50 சதவீதம் வழங்கினால், நூலக நிதியிலிருந்து 50 சதவீதம் வழங்கி அங்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகம் முழுவதும் நிதிநிலைக்கு ஏற்ப நூலகங்கள் அமைத்து தரப்படுகின்றன. அண்ணா நூலகத்திற்கு ரூ.6 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை தமிழ் சங்கத்திற்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்வியோடு சேர்த்து நூலகத்தை வழங்குவது இந்த அரசின் நோக்கமாகும். எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் நூலகங்கள் அமைத்து தரப்படுகின்றன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *