செய்திகள்

வேலூர் தமிழ்ச் சங்கம், ஊரீசு கல்லூரி சார்பில் தமிழர் திருநாள் – திருவள்ளுவர் விழா

வேலூர், ஜன.11–

வேலூர் தமிழ்ச் சங்கம் மற்றும் ஊரீசு கல்லூரி சார்பில் நடைபெற்ற தமிழர் திருநாள் –திருவள்ளுவர் விழாவில் இலங்கையின் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஷ்வரன், விஐடி வேந்தர் விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேலூர் தமிழ்ச் சங்கம் மற்றும் ஊரீசு கல்லூரி இணைந்து தமிழர் திருநாள் விழா –திருவள்ளுவர் விழா ஊரீசு கல்லூரி காபு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கையின் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஷ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், திருக்குறள் தான் தமிழர்கள் மற்றும் தமிழ் சமுதாயத்தின் அடையாளம் என்றார். 1950 காலக்கட்டங்களில் ம.பொ.சி கொழும்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பொய்யாமை பற்றிய திருக்குறளை விரிவாக எடுத்துக் கூறினார். அந்தக் குறள் என் மனதில் ஆழப் பதிந்தது, ஒருவருக்கு நன்மை பயக்குமானால் அதற்காக பொய் சொல்வது தவறு இல்லை. அதே நேரத்தில் அந்த பொய் யாரையும் பாதித்து விடக்கூடாது என்றார்.

வேலூர் தமிழ்ச்சங்கத் தலைவரும் விஐடி வேந்தருமான டாக்டர். கோ விசுவநாதன் தலைமையுரையில் கூறியாதாவது:–

உலகில் 7 மொழிகளை மட்டும் தான் மூத்த மொழிகள் எனக்கூறுவர். அதனுள் தமிழ்மொழியும் உண்டு. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மொழி மட்டும்தான் அதன் தொன்மை மாறாமல் இருக்கிறது. தமிழ் மொழியை போல் வேறு எந்த மொழிக்கும் இந்த சிறப்பு இல்லை. தமிழர்கள் அனைவரும் தமிழ் பெயரை வைக்கவேண்டும். வேற்று மொழி கலக்காமல் தமிழை நாம் பேசவேண்டும், மொத்தத்தில் தமிழர்கள் தமிழர்களாக வாழ வேண்டும். திருக்குறள் மட்டும் தான் பல்வேறு நாட்டினரும் பல மதத்தினரும் ஏற்றுக் கொண்ட பொது நூல். குற்றங்கள் அற்ற சமுதாயமாக இருக்க நாம் அனைவரும் திருக்குறள் படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஊரீசு கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் தியோடர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். ஊரீசு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நெல்சன் விமலநாதன் முன்னிலை வகித்தார். வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன், ரத்தின நடராசன், சிவசுப்பிரமணியம், சிங்கராயர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவை சுகுமார் தொகுத்து வழங்கினார். முடிவில் பேராசிரியர் இன்ப எழிலன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *