செய்திகள்

ஆறு சிஷ்யைகளின் ‘சீதா கல்யாணம்’ அருமை; அறுசுவை: குரு ரேணுகாவின் ‘மாஸ்டர் பீஸ்…!’

Spread the love

சென்னை பிப்.12–

சென்னையில் உள்ள பிரபல நிருத்யோபாசனா பரதநாட்டிய கலை நிலையத்தின் நிறுவனர் ரேணுகா பாலசுப்பிரமணியத்தின் மாணவிகள் – ஆத்யா ஆனந்த், டி.ஸ்வேதா, எஸ்.எஸ்.கன்யா, ஜி.சௌந்தர்யா, ஹர்ஷிதா, யு. கவிராஜன், அபிநயா ராஜேஷ். இவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் மைலாப்பூர் ஆர்.ஆர். சபா கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பிள்ளையார் ஸ்துதி உடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. புஷ்பஞ்சலி, அதனை அடுத்து அலாரிப்பு. தொடர்ந்து நர்த்தன கணபதி என்னும் பாடலில் கணேச வந்தனம், காளி கவுத்துவம் தொடர்ந்தது. பிறகு ஜதீஸ்வரம். அதனை அடுத்து பாபநாசம் சிவனின் பாடல் ‘சாமி நான் உந்தன் அடிமை… வர்ணம். நிருத்யதி – நிருத்யதி சுவாதித் திருநாளின் பாடல் முடிந்ததும் சீதா சுயம்வரம். முடிவில் தில்லானாவோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

ஆடியவர்களில் இளையவர் ஹர்ஷிதா – கிரும்பாக்கம் பிஎஸ்பிபி மில்லீணியம் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவி. சீ.ஸ்வேதா – ராமாபுரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் எட்டாம் வகுப்பு, ஆதித்யா ஆனந்த் – வளசரவக்கம் பொன் வித்யாஷ்ரம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு. அபிநயா ராஜேஷ் – கே.கே. நகர் பிஎஸ்பிபி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு. எஸ்.எஸ்.கன்யா – ராமாபுரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு.

வெவ்வேறு நிலைகளில் மாணவிகள் படித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய நாட்டியத்தில் சொல்லிக் கொடுத்ததை கிரகித்துக் கொண்டு அவர்கள் அருமையாக ஆடியதில் ஆசான் ரேணுகாவுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

காளி கவித்துவத்தில் ‘உக்ர’ காளியாகத் தோன்றி விழிகள் வெளியே பிதுங்கும் அளவிற்கு கண்களை உருட்டி மிரட்டிய சிறுமையை (ஆத்யா) சொல்வதா?

ஜதீஸ்வரத்தில் சொல்லப்பட்ட என்றும் மார்கண்டேயன் கதையில் வந்த மார்க்கண்டேயன், லிங்கம், எமன் வேடத்தில் தோன்றிய 3 சிறுமிகள் காட்டிய பாவத்தில் சிலிர்க்க வைத்ததைச் சொல்வதா?

சீதா சுயம்வரம் பாடல் கதையில் அழகு சீதாவை சொல்வதா? இல்லை சாந்த சொரூபி ஸ்ரீராமச்சந்திரனை சொல்வதா? சிவ தனுசை உடைக்க வந்த இறுமாப்பில் தோற்றுப்போகும் மன்னனை சொல்வதா? இல்லை தன்னுடைய புஜபல பராக்கிரமத்தைக் காட்டி கர்வத்தோடு வந்து நின்று தோல்வியைத் தழுவிய ராவணனைச் சொல்வதா? அல்லது அவனை கிண்டல் அடித்தபடியே பின தொடரும் அவரது உதவியாளரைச் சொல்வதா… யாரை குறிப்பிட்டு அடையாளம் காட்டி சொல்வது? 6 பேரும் அருமை. ஆசானுக்குப் பெருமை!

சீதா சுயம்வரம் – மாஸ் அப்பீல் மட்டுமல்ல மாஸ்டர் பீஸ்!

விவேகானந்தரின் எழுச்சி வரிகளில்…

சுவாமி விவேகானந்தரின் எழுந்திரு, விழித்திரு, எடுத்த இலக்கை எட்டிப் பிடிக்கும் வரை முயற்சியை நிறுத்திவிடாதே என்ற வரிகளை நினைவில் நிறுத்தி மாணவிகள் தங்கள் வெற்றிப் பயணத்தை தொடரவேண்டும். நாயகிகளாக இந்த பரதத்தில் வெற்றி வலம் வர வேண்டும் என்று மக்கள்குரல் வீ. ராம்ஜீ வாழ்த்தினார். பன்முனை கலைஞர்களாக இருக்கும் இந்த ஆறு பேரும் நாட்டியத்தை தொடர்ந்து பயின்று ஆசிரியைக்கும், பெற்றோர்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று ஆசி கூறினார் பிரபல கொன்னக்கோல் இசைக்கலைஞர் வி வி சுப்பிரமணியன்.

ரேணுகா பாலசுப்பிரமணியன் நட்டுவாங்கம், பத்மா யுவராஜ் வாய்ப்பாட்டு, கஜேந்திரன் கணேசன் மிருதங்கம், கடப்பா ராகவேந்திரா புல்லாங்குழல், சோழபுரம் சங்கர் வயலின் பக்க வாத்தியக் கலைஞர்களின் பங்கு 6 இளம் கலைஞர்களின் நாட்டியத்திற்கு தனி மெருகூட்டியது.

அமெரிக்க வாழ் தமிழர் ஸ்ரீராம் கணேஷ் 50 வயதை கடந்த நிலையில் மேடை ஏறியவர். நிகழ்ச்சியை அழகு தமிழில் எளிய நடையில் இனிமையாக தொகுத்து வழங்கினார். இது சபையோர்களின் பாராட்டைப் பெற்றது.

ஆரம்பத்தில் 6 இளம் கலைஞர்களின் பெற்றோர்கள் ஆனந்த் சாரநாத் தம்பதி, தங்கராஜ் தம்பதி, சிவராம்குமார் தம்பதி, பழனி கணேஷ் தம்பதி, ராஜேஷ் கணேஷ் தம்பதி, உமா மகேஸ்வரி கவிராஜன் தங்களின் மகள்களை ஆசீர்வதித்தனர். 6 பேரின் தாத்தா – பாட்டிகள் சேர்ந்து ஆரத்தி எடுத்தது புது அனுபவமாக இருந்தது.

* * *

பிரபல நாட்டிய கலைஞர் அமரர் இந்திரா ராஜனின் சிஷ்யை – ரேணுகா பாலசுப்பிரமணியம். 40 ஆண்டுகாலம் நாட்டியத் துறையில் பழுத்த அனுபவசாலி. ‘இதுவரை அவர் நடத்தியிருப்பது 168 அரங்கேற்றம். 108 ஜதிகளுக்கு 108 கர்ணாஸ் முத்திரைகளுக்கு அபிநயம் பிடித்து ஆனந்தத் தாண்டவம் ஆடி இருக்கும் கலைஞர்களில் முன்னோடி.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்ற பாலசுப்பிரமணியத்தின் (எலக்ட்ரிக்கல் என்ஜினியர்) பரிபூரண ஆதரவில் தன்னுடைய கலைப்பயணம் இன்னும் வெற்றிகரமாக வந்து கொண்டு இருப்பதாக மேடையில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *