செய்திகள்

புழல் சிறை வளாகத்தில் வானொலி நிலையம்: அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு 

சென்னை, மார்ச் 21–

புழல் சிறை வளாகத்தில் வானொலி நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.

சட்டசபையில் சிறைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:–

திருவள்ளூர் கிளைச்சிறையின் அங்கீகரிக்கப்பட்ட இடவசதி 36 ஆகும். மத்திய சிறை, புழல் –2 இன் இட நெருக்கடியை கருத்திற்கொண்டு அம்மாவின் ஆசியுடன் முதலமைச்சர் ஆணைப்படி ரூ. 11 கோடி தொடரா செலவினத்தில் திருவள்ளூர் கிளைச்சிறை, மாவட்ட சிறையாக மேம்படுத்தப்படும்.

செங்கல்பட்டு மாவட்ட சிறையில் கூடுதலாக 100 சிறைவாசிகள் அடைக்கும் வகையில் ஒரு தொகுதியும் மற்றும் பூந்தமல்லி கிளைச்சிறையில் சுகாதார வசதியினை மேம்படுத்தவும் ரூ. 1 கோடியே 50 லட்சம் தொடரா செலவினத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சிறைகளில் நூலகங்கள் மேம்படுத்தப்படும்

சிறைவாசிகள் சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதை தடுத்திட, அனைத்து மத்திய சிறைகளிலும் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 80 ஆயிரம் தொடரா செலவினத்தில் Non Linear Junction Detector கொள்முதல் செய்யப்படும். சிறைவாசிகளது சிந்தனைகளை நல்வழிப்படுத்தவும், கல்வி கற்க தூண்டவும் அவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் உள்ள நூலகங்கள் ரூ. 1 கோடியே 34 லட்சத்து 64 ஆயிரம் ரூ.5.75 லட்சம் தொடர் செலவினம் ரூ. 128.89 லட்சம் தொடரா செலவினம்) செலவில் மேம்படுத்தப்படும்.

மதுரை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் உள்ள சிறை அலுவலர்களுக்கு ரூ. 1 கோடியே 20 லட்சம் தொடரா செலவினத்தில் புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

சிறைவாசிகளின் நடமாட்டத்தினைக் கண்காணித்திடவும், அசம்பாவித சம்பவங்களை தடுத்திடவும் ரூ. 50 லட்சம் தொடரா செலவினத்தில் 50 கேமராக்கள் கொள்முதல் செய்யப்படும் மற்றும் தலைமை அலுவலகத்தில் ஒரு சர்வர் நிறுவப்படும்

அனைத்து சிறைகளிலும் நடக்கும் சம்பவங்கலை உடனுக்குடன் சிறைத்துறைத் தலைமை அலுவலக்த்தில் காணும் வகையில் ரூ.50 லட்சம் தொடரா செலவினத்தில் சிறைத்துறை தலைமை அலுவலக கட்டுபாட்டு அறையில் ‘சுவர் வீடியோ‘ வசதி ஏற்படுத்தப்படும்.

நன்னடத்தை அலுவலர்களின் பணியின் அவசியம் மற்றும் அத்தியாவசியத்தினை கருத்திற்கொண்டு ரூ.45 லட்சத்து 60 ஆயிரம் தொடரா செலவினத்தில் 38 இரு சக்கர வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்.

சிறையில் வேளாண் உற்பத்திக்கு டிராக்டர்கள் கொள்முதல்

கடலூர், திருச்சி, வேலூர், கோவை மற்றும் சேலம் ஆகிய 5 மத்திய சிறைகளில் இருக்கும் மொத்தம் 374.43 ஏக்கர் காலி நிலத்தினை பயன்படுத்தி வேளாண் உற்பத்தி செய்திடும் வகையில் ரூ.42.23 லட்சம் செலவில் (ரூ.4.17 லட்சம் தொடர் செலவினம், ரூ.39.06 லட்சம் தொடரா செலவினத்தில்) டிராக்டர்கள் கொள்முதல் செய்யப்படும்.

சிறைவாசிகளின் அவசர தேவைக்காக மருந்துகள் கொள்முதல் செய்வதற்கு காவல்துறை தலைமை இயக்குநர், சிறைத்துறை தலைவர், சிறைத்துணை துணைத்தலைவர் மற்றும் கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை மற்றும் மாவட்டச் சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியோருக்கு உள்ள நிதி அதிகார வரம்பினை ரூ.26.40 லட்சம் தொடர் செலவினத்தில் உயர்த்தி வழங்கப்படும்.

சிறைவாசிகளை சீர்திருத்துவதற்கும், மறுவாழ்வு அமைப்பதற்கான திட்டத்தின் பகுதியாக புழல் மத்திய சிறை வளாகத்தில் ரூ.25 லட்சம் தொடரா செலவினத்தில் வானொலி நிலையம் அமைக்கப்படும்.

சிறைவாசிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவு மற்றும் அளவு முறையை மாற்றியமைக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *